திருத்தந்தையின் செய்திகள்

உன் சகோதரன் எங்கே? - மனிதம் தேடுவோம் 


திருத்தந்தையின் தவக்காலச் செய்தி - 2015
தமிழாக்கம்: அ. சந்தோஷ்
        தவக்காலம் மறுமலர்ச்சியின் காலம். இது, அகில உலக திருச்சபைக்கும், கிறிஸ்தவ சமூகங்களுக்கும், ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் பொருந்தும்மேலும், இது ஓர் அருளின் காலம் (2கொரி 6: 2)
        இத்தவக்காலத்தின் சிந்தனைக்காக மூன்று விவிலிய பகுதிகளை முன்வைக்கிறேன்.

1. ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன்புறும் (கொரி 12: 26) – அகில உலக திருச்சபை
       
        சுயத்திற்குள் சுருங்கும் மனிதம் தொலைத்த அலட்சிய வாழ்வின் மனநிலைக்குள் ஊடுருவும் வல்லமை அன்பிற்கு உண்டு. இத்தகைய அன்பை திருச்சபை சாட்சியங்கள் வழியாக நம்முன் விளம்புகிறது. ஆனால், நாம் அனுபவிக்காததைக் குறித்து சாட்சியம் அளிக்க இயலாது. கடவுளின் கருணையாலும், இரக்கத்தாலும் அணிசெய்யப்பட்டு கிறிஸ்துவைப் போன்று மாறி, அவரைப் போன்று பணியாளர்களாக வாழப் பணிக்கப்பட்டவர்களே கிறிஸ்தவர்கள். கடைசி இரவுணவின் போது, காலடிகளைக் கழுவப் பேதுருவின் முன் முழங்கால் இடும் இயேசுவை பேதுரு தடுக்கிறார். ஆனால், இயேசுவால் காலடிகள் கழுவப் பெற்றவர்களே அவரைப் போல, பணி செய்ய முடியும் என்னும் ஆன்மீகத்தின் ஆழத்தை அறியும் பேதுரு பின்னர் சம்மதிக்கிறார். நாமும் இயேசுவால் பாதங்கழுவப்பெற்று அவரின் பணியில் பங்கு (யோவா 13: 8) பெற வேண்டும்.

        ஆதலால், இத்தவக்காலம், இயேசுவால் நாம் பணிவிடைச் செய்யப்படுவதற்காக அனுமதிக்கும் காலம். அங்ஙனம், அவ்வனுபவத்தை வாழ்வில் ஏற்று நாமும் அப்பணியை பிறருக்கு ஆற்ற முடியும். இது நாம் இறைவார்த்தையைக் கேட்கும் போதும், திருவருட்சாதனங்களைப் பெறும் போதும், குறிப்பாக, திருப்பலியில் பங்கேற்கும் போதும் நடக்கிறது. இயேசுவின் திருவுடலை ஏற்கும் நாமும் அவ்வுடலாக உருமாற்றம் அடைகிறோம். இவ்வுடலில், இதயத்தின் வாசலை பிறர்முன் மூடும் அலட்சிய வாழ்விற்கு இடமில்லை. இயேசுவின் உடலை சார்ந்திருப்போர், பிறர் முன் அலட்சியமாக இருத்தல் இயலாது. ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன்புறும்; ஓர் உறுப்பு பெருமை பெற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து மகிழ்வுறும் (1கொரி 12: 26).

        திருச்சபை புனிதர்களின் சமூக உறவுச் சமூகம். இது, திருச்சபையில் புனிதர்கள் வாழ்வதால் மட்டுமல்ல, மாறாக புனிதம் சார்ந்தவற்றின் சமூகம் என்பதாலும் கூட. இப்புனிதச்சமூகம், கடவுளின் கொடைகளின் சேகரிப்பு. இக்கொடைகளால் தொடப்பெற்றோர், அத்தொடுதலின் இன்பத்தை பிறருக்கு அளிக்க வேண்டும் என்பதும், இப்புனிதச் சமூகத்தின் பகுதியே. இங்கே, தனிமைகள் இல்லை. பகிர்தல்களே மேலோங்கி நிற்கின்றன. பெறுதலம் கொடுத்தலும் இதன் உள்ளார்ந்த இயல்புகள். கடவுள் வெளிப்படுத்திய இப்புனிதச் சமூகத்தின் உறவில் பங்கேற்கும் நாம், வெகுதொலையில் இருப்போருக்கும் கடவுளின் துணைகொண்டு கரங்களை நீட்ட முடியும்; அவருடைய மீட்பின் பணியில் பங்கேற்க முடியும். அங்கே, தொலைவுகள் தொலைந்து, குவலயகிராமத்தின் அங்கமாய்த் திகழ்ந்து, அகில உலகத் திருச்சபையின் பகுதியாய் விளங்கிக், கடவுளின் மீட்புப்பணியில் நாமும் பங்கேற்போம்

2.  உன் சகோதரன் எங்கே? (தொநூ 4: 9) – பங்குகளும் சமூகங்களும்
        அகில உலகத் திருச்சபையைக் குறித்து நாம் மேற்கூறிய அனைத்தம் ஒவ்வொரு பங்குகளுக்கும், விசுவாச சமூகங்களுக்கும் பொருந்தும். இயேசுவின் உடலின் பகுதியாக நாம் இருப்பதை உள்ளூர அனுபவிக்க இத்திருச்சபை அமைப்புகள் நமக்கு உதவுகின்றனவா? வறியோரையும், பலவீனமானவர்களையும், சமூகத்தின் கடைநிலையில் இருப்போரையும் இயேசுவின் உடலின் உறுப்பகளாக அங்கீகரிக்க நம்மால் இயல்கிறதா? இல்லை, உலகம் முழுவதையும் அன்பு செய்கிறோம் என்னும் பொய்ம்மையில் சிக்கி, வீட்டு வாசற்படியில் படுத்துக்கிடக்கும் லாசரை மறக்கிறோமா? (லூக் 16: 19-31).
        என் அன்பு சகோதரர்களே, ஒவ்வொரு பங்கும், கிறிஸ்தவ சமூகவும், அன்பும் இரக்கமும் கருணையும் நிறைந்து ததும்பும் குட்டித்தீவுகளாக உருமாற்றம் அடைய நான் ஆசிக்கிறேன்.
3.  உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள் (யாக் 5-8) – தனிநபர் கிறிஸ்தவர்கள்
        தனிநபர்களாக நாம் பலவேளைகளில் அலட்சிய மனநிலைக்குள் விழும் சோதனையை சந்திக்கிறோம். வெள்ளப்பெருக்கம், இயற்கை அழிவுகள், மனிதத் துயரம் போன்றவற்றை அன்றாடச் செய்திகளாப் பார்க்கும் நாம், நம்மால் என்னதான் செய்ய முடியும் என்னும் மனநிலைக்குத் தள்ளப்படுகிறோம். இயலாமை என்னும் சோதனை நம்மைக் கீழ்ப்படுத்துகிறது. எப்படி இத்தகைய வலுவின்மை, இலயாமை என்னும் நோய்கள் நம்மை அணுகாமல் தற்காத்துக் கொள்வது.
        முதலாவதாக செபம். அகில உலகத் திருச்சபையோடு இணைந்து செபித்தல். மார்ச் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் நடத்தப்படும் 24 மணிநேர செபத்தில் நாம் இணைத்துக் கொள்வோம்.
        இரண்டாவதாக, இரக்கச்செயல்கள். திருசச்பை நடத்தும் தொண்டு நிறுவனங்களோடு சேர்ந்து செயல்படுதல். தவக்காலம் இதற்கு ஏற்ற காலம்.
        மூன்றாவதாக, உலகில் அரங்கேறும் துயரங்கள், நம்மை மனமாற்றத்திற்கு இட்டுச்செல்ல வேண்டும். மனிசவாழ்வின் நிலையற்றத் தன்மையை இதுத் தெளிவாய் உணர்த்துகிறது. அதே வேளையில், நாம் பிறரை சார்ந்திருக்கிறோம் என்பதையும் இது நமக்கு தெளிவுப்படுத்துகிறது. நமது இயலாமைகளைக் குறித்து தெளிவுப் பெற்று, கடவுளின் அளப்பரிய கருணையின் முன் தலைகுனிவோம். என்னால் இயலாதது எதுவும் இல்லை என்னும் வஞ்சகம் நம்மை ஆட்கொள்ளாமல் இருக்கட்டும்.
        இத்தவக்காலத்தில் நாம் இவ்வாறு செபிப்போம், இயேசுவே உமது இதயத்தைப் போன்று எங்கள் இதயங்களையும் உருமாற்றும்.
        ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் கிறிஸ்தவ சமூகத்திற்கும் இத்தவக்காலம் பயன்மிக்கதாய் அமைய வாழ்த்துகிறேன். எனக்காக செபிக்க உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். எல்லாம் வல்ல ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக! அன்னை மரியா உங்களைப் பாதுகாப்பாராக!
திருத்தந்தை பிரான்சிஸ்
வத்திக்கான் 04, அக்டோபர் 2014, புனித பிரான்சிஸ் அசிசியின் திருநாளில் வழங்கியது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்