அன்பும் மகிழ்ச்சியும்
முப்பதாவது உலக இளைஞர் தினத்திற்கான
திருத்தந்தையின் செய்தி 2015
“தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர்;
ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்” (மத் 5: 8)
தமிழாக்கம்: அ. சந்தோஷ்
அன்புமிகு இளைர்களே,
2016 ஆம் ஆண்டு ஜூலையில் போலந்து நாட்டில், கிராக்கோவில் நாம் நடத்த இருக்கும் அகில உலக இளைஞர் தினம் குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதற்கான தாயாரிப்பை நாம் ஏற்கனவே தொடங்கி இருந்தோம். இவ்வாண்டும் தொடர்வோம். நம்மையே தயாரிக்கும் விதம் சிந்தனைக்காக நற்செய்திப்பேறுகளை எடுத்திருந்தோம். “எளிய உள்ளத்தோர் பேறுபேற்றோர்” என்னும் நற்செய்திப் பேறினைக் குறித்து நாம் கடந்த ஆண்டு சிந்தித்தோம். இவ்வாண்டு நாம் ஆறாவது நற்செய்திப் பேறான, “தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர்; எனெனில் அவர்களைக் கடவுளைக் காண்பர்” (மத் 5:8) என்பதைக் குறித்துப் பார்ப்போம்.
1. மகிழ்ச்சியாக வாழ ஆசைப்படுவோம்
மலைப்பொழிவின் தொடக்கத்தில் காணும், நற்செய்திப் பேறுகளில், “பேறுபெற்றோர்” அல்லது “மகிழ்ச்சி” என்னும் சொல்லை ஒன்பது முறைக் காண்கிறோம் (காண் 5 1-12). மகிழ்ச்சியாக வாழ ஆண்டவர் அழைக்கிறார். இது ஆண்டவர் விடுக்கும் சவால்! மகிழ்ச்சியாக வாழ ஆண்டவர் விடுக்கும் சாவால்!! அழைப்பை ஏற்று, அவர் கரங்களைப் பற்றிக் கொண்டு மகிழ்ச்சியின் பாதையில் முன்செல்ல நாம் தயாரா?
மகிழ்வுடன் வாழ்வதற்கானத் தேடல் புதிதல்ல, அது தலைமுறைகளின் தேடல் எனலாம். காரணம், மனித மனதிற்குள் மகிழ்ச்சியாய் வாழ்வதற்கான ஏக்கம் புதைந்துள்ளது. அதனால், உள்மனம் நிம்மதியற்றதாய், மனநிறைவு அடையும் வழிகளை அன்றாடம் தேடிய வண்ணம் இருக்கிறது.
கடவுளோடும், பிறரோடும், இயற்கையோடும், முழு உறவில், மகிழ்ச்சியாய் வாழ்ந்த மனிதரைக்குறித்து தொடக்க நூல் நமக்கு படம்பிடித்துக் காட்டுகிறது. மனிதர்கள் தங்களுக்குள் நிறைவுடன் இருந்தனர். படைப்பின் தொடக்கத்தில், கடவுளை நெருங்கிச் செல்லவும், இயல்பாய் பேசவும் பழகவும் மனிதரால் இயன்றது. அதுவே கடவுளின் திட்டமாகவும் இருந்தது. அங்கே மாசற்ற உறவு ஒளிவு மறைகளின்றி, மிகச்சாதாரணமாய் இருந்தது. உறவுகளுக்கு இடையே முகமூடிகள் இருக்கவில்லை.
ஆதாமும் ஏவாளும் இச்சையின் சோதனைக்கு உடன்பட்டனர்; பாவமும் உட்புகுந்தது. அதன் விளைவாக, கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இருந்த உறவின் பிணைப்பில் பிளவு உருவாயிற்று; அன்புறவில் விரிசலும் உண்டானது (காண் தொநூ 3). அது, இயற்கையோடான உறவை பாதித்தது; சக மனிதர்களோடான உறவை பாதித்தது. அது தொடங்கி, கடவுளை நெருங்கும் திறனை இழந்தோம். ஆணும் பெண்ணும் தங்களையே மூடி மறைக்கத் தொடங்கினார்கள், தங்களது, நிர்வாணத்தை இலைகளால் மறைக்க முயன்றனர். கடவுளிடமிருந்து வரும் மேலான வெளிச்சத்தை இழந்த அவர்கள், விழிகள் அழகிழந்து, தங்களைச் சுற்றி இருந்தவற்றை அசிங்கங்களாகப் பார்க்கத் தொடங்கினர். மகிழ்ச்சியை நோக்கி தங்களை வழிநடத்தும் கடவுளின் வெளிச்சத்தை இழந்த அவர்கள், செல்வத்திலும், அதிகாரத்திலும், சிற்றின்பங்களிலும் தங்களுடைய வாழ்வைத் தொலைக்கத்த தொடங்கினார்கள். சோகமும், துன்பமும் அவர்களது வாழ்வைத் தொற்றிக் கொண்டன.
“எது மகிழ்ச்சி தரும்? எனக் கேட்பவர் பலர். ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும்” (திபா 4: 6). மனிதரின் இந்த ஏக்கத்தை கண்ணுற்ற, நலன்களின் ஊற்றான தந்தைக் கடவுள் தம் மகனை அனுப்பினார். இயேசுவில் தந்தைக் கடவுளின் முகம் வெளிப்பட்டது. தமது, மனிதராதல், வாழ்வு, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் வாயிலாக இயேசு நம்மை பாவங்களின்று விடுவித்து மகிழ்ச்சிமிகு வாழ்வின் விந்தையான உலகை நம்முன்னால் திறந்து வைத்தார்.
அன்பான எனதருமை இளைஞர்களே, நீங்கள் தேடும் நலமும் மகிழ்ச்சியும் இறை இயேசுவில் முழுமை அடைகிறது. உள்மனதின் ஏக்கங்களை தீர்க்க வல்லவர் இயேசுவன்றி வேறெவரும் இலர். இதை அறியாமல் நாம் பல வேளைகளில், ஏமாற்றங்கள் நிறைந்த உலகின் இன்பங்களில் மூழ்கிப்போவதுண்டு. இதை வலியுறுத்தும் வகையில், புனித இரண்டாம் ஜான் பால் பினவருமாறு கூறுகிறார், “உங்களை ஈர்க்கவல்ல அழகு இயேசுவுக்கு உண்டு. நிம்மதி குலைக்கும் போலி இன்பங்களில் தொலைந்து போகாமல் தடுத்து நிறுத்தி, உண்மையான மனநிறைவைத் தேடிச் செல்லும் தாகத்தை உங்களுக்குள் உருவாக்கியவரும் அவரே. போலி வாழ்வின் முகத்திரைகளைக் கிழித்தெழிய உள்ளுந்துதல் தருபவரும் அவரே. நேரிய வாழ்வை பின்செல்ல உள்மனம் மேற்கொள்ளும் தீர்மானங்களை வாசித்து அறிபவரும் அவரே. மேலான காரியங்களை செய்வதற்கான ஆவலை உள்ளத்தில் தூண்டியெழுப்புவரும் இயேசுவே”.
2. “தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர்...”
இந்நற்செய்திப் பேறு வாழ்வில், உள்ளத்தூய்மை வாயிலாக எங்ஙனம் சாத்தியமாகும் என்பதைக் குறித்து சற்று விளக்கமாகப் பார்ப்போம். முதலில், உள்ளம் அல்லது இதயம் என்பதற்கு விவிலியத்தின் வழி நின்று பொருள் காண முயல்வோம். இதயம் என்பதை, உணர்வுகள், சிந்தனைகள், நோக்கங்கள் ஆகியவற்றின் இருப்பிடமாக எபிரேயர்கள் கண்டார்கள். ‘மனிதர் வெளித்தோற்றத்தைப் பார்க்கின்றனர், ஆனால் கடவுளோ, இதயத்தைப் பார்க்கின்றார்’ (காண் 1சாமு 16: 7) என விவிலியம் நமக்குக் கூறுகிறது. இதிலிருந்து, இதயத்தின் (உள்ளத்தின்) மூலம் நாம் இறைவனைக் காண இயலும் என்பது நமக்கு புலனாகிறது, ஏனெனில், இதயம் என்பது, உடலும் உள்ளமும் இணையும் இடம், அங்கே மனிதர்கள் தங்கள் முழுமையைக் காண்கிறார்கள், இதயம் அன்பை ஏற்கிறது, அன்பைக் கொடுக்கிறது.
மத்தேயு நற்செய்தியாளர், தூய்மையைக் குறிக்க, கத்தாறோஸ் என்னும் கிரேக்கச் சொல்லைப் கையாள்கிறார். இதற்கு, சுத்தம், தூய்மை, மாசறுநிலை போன்ற அர்த்தங்களைக் கொள்ளலாம். ஆனால், பொருட்களையும், மனிதர்களையும் தொடாமல் (தொழுநோயாளிகளையும், அந்நியர்களையும்) தீட்டென ஒதுக்கி வைக்கும் சடங்கு சார்ந்த, வெளித் தூய்மையைக்குறித்த புரிதல்களை இயேசு முற்றிலுமாகப் புறக்கணித்தார். பரிசேயர்கள், அக்காலத்தைய பிற யூதர்களைப் போன்று, பாத்திரங்களை தூய்மைப் படுத்தும் விதமாக பல சடங்குகளை மேற்கொண்டார்கள், அதன் பின்னரே உணவு உண்டனர். இதைக் கண்ணுற்ற இயேசு ஆணித்தரமாக் கூறுகிறார், “வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத்தூண்டும் தீய எண்ணெங்கள் வெளிவருகின்றன” (மத் 7: 15, 21-22).
இதயத்திலிருந்து எழும் இம்மகிழ்ச்சி எதற்குள் அடங்கியிருக்கிறது? ஒருவரை தீட்டுப்படுத்தும் காரியங்களைக் குறித்து இயேசு முன்வைக்கும் பட்டியலை ஆராயும் போது, இக்கேள்விக்கான பதில், பிறரோடான உறவைச் சார்ந்ததாய் அமைந்துள்ளது என்பது தெளிவாகிறது. ஒவ்வொருவரும், தங்களுடைய உள்ளத்தை எது தீட்டுப்படுத்துகிறது என்பதைக் குறித்துப் ஆய்ந்து அறிதல் அவசியம். மேலும், மனசாட்சியை நேரியதாகவும், உணர்திறன் பெற்றதாகவும் பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும். அம்மனசாட்சி, “கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிந்து, எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதை உங்களுக்குத் தெளிவாக உணர்த்தும்” (உரோ 12: 2). இயற்கையையும், காற்றையும், நீரையும் உணவையும் நாம் தூய்மையாய் காக்க வேண்டும். ஆனால், இதை விட பன்மடங்கு அதிகமாக இதயத்தையும் நமது உறவுகளையும் தூய்மையையும் பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது, உண்மையான அழகிலிருந்தும், நேர்மையான அன்பிலிருந்தும், தூய்மையான உறவிலிருந்தும் வெளிவரும் மாசற்ற காற்றை சுவாசிக்க இந்த “மனிதாபிமானச் சூழலியல்” நமக்கு பெரும் துணை நிற்கும்.
ஒருமுறை நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தேன், “உங்களுடைய செல்வம் எங்கே இருக்கிறது? உங்களுடைய உள்ளம் எதில் மகிழ்ச்சி கொள்கிறது? (பெல்ஜியத்தைச் சேர்ந்த இளைஞர்களோடு நடத்திய உரையாடலின் போது, 31 மார்ச் 2014). நம்முடைய இதயங்கள் உண்மையான செல்வத்தின் மீதோ போலியான செல்வத்தின் மீதோ பற்று வைக்கலாம், இதயமும், உண்மையான இளைப்பாறுதலைக் அடையலாம் இல்லையெனில், சோர்வுற்றதாய், கலக்கமுற்று நலிந்து காணப்படலாம். நமது வாழ்வில் நாம் பெறற்கரிய அரிய செல்வம் கடவுளன்றி வேறேதும் இருக்க முடியாது. இதைக்குறித்த தெளிவான அறிவு உங்களுக்கு இருக்கிறதா? இதை நீங்கள் முழுமையாக நம்புகிறீர்களா? கடவுளின் பார்வையில் நீங்கள் விலையேறப்பெற்றவர்கள், என்பதை உணர்ந்திருக்கீர்களா? நீங்கள் எதுவாக இருக்கிறீர்களோ அந்நிலையிலேயே எவ்வித நிபந்தனைகளுமின்றி கடவுள் உங்களை அன்பு செய்து வரவேற்கிறார் என்பதை அறிந்திருக்கிறீர்களா? இந்த அறிவை நாம் மறக்கும் பட்சத்தில், மனிதர்களான நாம் புரியாத புதிராக மாறுகிறோம். காரணம் என்னவெனில், கடவுள் நம்மை எவ்வித நிபந்தனைகளுமின்றி அன்பு செய்கிறார் என்னும் உள்ளுணர்வு நமது வாழ்வுக்கு அரத்தத்தைத் தருகிறது. இயேசு செல்வந்தரான இளைஞரோடு நடத்திய உரையாடல் உங்களுக்கு ஞாபகம் வருகிறதா? (மாற் 10: 17-22). “இயேசு அவ்விளைஞனை அன்பொழுக கூர்ந்து நோக்கினார்” என நற்செய்தியாளர் மாற்கு கூறுகிறார். மேலும், வாழ்வின் உண்மையான செல்வத்தை கண்டடைவதற்காக அவரைப் பின்தொடருமாறு அழைப்பும் விடுக்கிறார். எனதருமை இளைஞர்களே, இயேசுவின் அன்பொழுகும் பார்வை உங்களுள் ஒவ்வொருவருடை வாழ்நாள் முழுவதும் விட்டு விலகாது பின்தொடரும் என நம்புகிறேன், அதற்காக செபிக்கிறேன்.
இளமைப்பருவம் என்பது அன்பு இதயங்களில் மலரும் காலம். அதே வேளையில், உண்மையான, அழகான விசாலமான அன்பிற்காக ஏங்கும் காலம். பிறரை அன்பு செய்வதும், பிறரால் அன்பு செய்யப்படுவதும் எழில் வாய்ந்தது, அதனுடைய ஆற்றல் வார்த்தைகளால் விளக்க முடியாது. அது மாபெரும் பொக்கிஷம். அதனால், அவ்வரிய பொக்கிஷத்தை, இழிநிலைக்குத் தள்ளாதீர்கள்; கெடுத்து அழிக்காதீர்கள். நாம் பிறரை நமது சுயநல நோக்கங்களுக்காக பயன்படுத்தும் போதும், இன்பம் அனுபவிப்பதற்கான பொருட்களாக தரம் தாழ்த்தும் போதும் அன்பு இழிநிலைக்கு தள்ளப்படுகிறது, அப்பொக்கிஷம் ஆற்றலிழந்து சுமையாகிறது. இத்தகைய, எதிர்மறையான அனுபவங்கள் வழியாக இதயம் உடைகிறது, துயரம் தொற்றி பாடாய் படுத்த ஆரம்பிக்கிறது. ஆகையால், அன்பான இளம் செல்வங்களே, உண்மையான அன்பின் முன் பதறி நிற்காதீர்கள். இயேசு நமக்கு அறிவுறுத்தும், பவுலடியார் தெளிவுபடுத்தும் அன்பை உறுதியாய்ப் பற்றிக் கொள்வோம். அவ்வன்பு, “பொறுமைள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது. அன்பு இழிவானதைச் செய்யாது; தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது. அன்பு தீவினையில் மகிழ்வுறாது; மாறாக உண்மையில் அது மகிழும். அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்” (1கொரி 13: 4-7).
அன்பு செய்வதற்காக நாம் கடவுளால் அழைக்கப்ட்டிருக்கிறோம். அன்பார்ந்த இளைஞர்களே, அவ்வழைப்பின் அழகை கண்டுணருங்கள். அன்பிற்குள்ளே அடங்கியிருக்கும் அடிப்படை காரணிகளான, அழகு, உறவு, நம்பிக்கை மற்றும் பொறுப்பு ஆகியவற்றை உறுதியாய்ப் பற்றிக் கொள்ளுங்கள். அன்பை, காமத்திற்குள் சுருக்கி அதை இழிவு படுத்தும் பொதுமனநிலைக்குள் விழாமல் உங்களையே தற்காத்துக் கொள்ளுங்கள். ‘இந்த பொழுதொன்றே நிஜமானது’, அதனால் ‘நல்லா அனுபவி’ என்று விளம்பப்படும் கலாச்சார பிறழ்வுகளை உள்வாங்கி, சுகபோகமே வாழ்வெனக் கொள்ளாதீர்கள். வாழ்நாள் பூராவும் பொறுப்பாய்க் கொள்ள வேண்டிய உறுதியான உறவுகளை ஏற்கத் தயங்கதீர்கள். உலகம் குறுகிய இன்பங்களின் வலை விரிக்கிறது. எனதருமை பிள்ளைகளே, நீங்கள் அலைகளுக்கு எதிராக நீந்தும் புரட்சியாளர்களாக மாற அழைக்கிறேன். நீங்கள் பொறுப்புடன் வாழ்வு நடத்த அருகதை அற்றவர்கள் என்றும், உண்மையான அன்பை உங்களால் செலுத்த முடியாது என்றும் இன்றைய கலாச்சாரம் உங்களை இழிவு படுத்துகிறது. தற்கால சுகங்களை அக்கலாச்சாரம் விளம்பிக்கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக நீங்கள் புரட்சி செய்யுங்கள். நான் உங்கள் மீது நம்பிக்கை வைக்கிறேன். எதீர்நீச்சல் போடும் தைரியம் உங்களுக்குள் வீறுகொண்டு எழட்டும். மகிழ்ச்சியாக இருக்க, தைரியம் கொள்ளுங்கள்.
இளைஞர்களே நீங்கள் துணிச்சல் மிக்கவர்கள்! சாகசக்காரர்கள்!! அன்பைக் குறித்து திருச்சபை கற்பிக்கும் படிப்பினைகளைக் குறித்த ஆழமான ஞானம் கொள்வீர்களெனில், கிறிஸ்தவம் உங்களுடைய சந்தோஷங்களைக் கெடுக்கும் உபாதையாகவும், நசுக்கும் சக்தியாகவும் பாரக்கும் மனநிலை மாறும். காரணம், உள்ளங்களை ஆக்கிரமித்து மகிழ்ச்சி நோக்கி இட்டுச்செல்லும் கடவுளின் வல்லமைமிகு அன்பை திருச்சபை உங்கள் முன்வைக்கிறது.
3. “...ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்”
ஒவ்வொரு மனிதருடைய உள்ளத்திலும், “எனது முகத்தை நாடு” (திபா 27 8) எனும் ஆண்டவரின் கட்டளை ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் அதே வேளையில், நாம் பலவீனப் பாவிகள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எடுத்துகாட்டாக திருப்பாடலில் நாம் வாசிக்கிறோம், “ஆண்டவரின் மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக் கூடியவர் யார்? கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்” (திபா 24: 3-4). ஆனால், நாம் எக்காரணத்தைக் கொண்டும் உள்ளம் சோர்ந்து போக்க் கூடாது. காரணம் மனிதர்களைத் தூய்மைப்படுத்துவதற்கான முதல் முயற்சிகளை கடவுளே மேற்கொள்கிறார். இதை திருவிவிலியமும் வரலாறும் நமக்கு உணர்த்துகிறது.
கடவுளின் குரலை மக்களுக்கு எடுத்துரைப்பதற்கான அழைப்பை எசாயா கேட்ட வேளையில் அஞ்சி நடுங்குகிறார், “ஐயோ, நான் அழிந்தேன். ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்” (எசா 6: 5) எனப் பதறுகிறார். ஆயினும் கடவுள் அவரைத் தூய்மைப்படுத்துவதற்காக வானதூதரை அனுப்புகிறார். வானதூதர் அவருடைய உதடுகளைத் தொட்டு “உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது” என்றார் (எசா 6: 10). கெனசரேத்து ஏரிக்கரையில் வைத்து முதல் சீடர்களை அழைக்கும் வேளையில், அற்புதகரமான மீன்பிடிப்பைக் கண்ட பேதுரு, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” (லூக் 5: 8) என்றார். ஆனால் இயேசுவோ, “அஞ்சாதே; இதுமுதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” (10) என்றார். மேலும், சீடர்களுள் ஒருவர், “ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்” என்ற போது, அவர் கூறினார், “என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும்” (யோவா 14: 8-9).
வாழ்வின் எந்நிலையில் இருந்தாலும், ஆண்டவரைக் காண்பதற்கான அழைப்பு உங்களுள் ஒவ்வொருவரை நோக்கியும் எழுந்த வண்ணம் உள்ளது. இயேசு கிறிஸ்துவைக் காண வேண்டும் என்னும் ஆசை நிதமும் உங்களை இயக்கட்டும். அது இயலாது எனில், அவர் உங்களைக் கண்டடைவதற்காக உங்களுடைய உள்ளங்களையாவது திறந்து வையுங்கள். நாம் எல்லாரும் பாவிகள், ஆகையால், ஆண்டவர் அளிக்கும் தூய்மை நமக்குத் தேவைப் படுகிறது. ஆண்டவரால் நாம் தூய்மைப்படுத்தப்பட வேண்டும். அதற்காக நாம் பெரிய காரியங்களைச் செய்யத் தேவையில்லை, மாறாக, நமது வருகைக்காக இரும் கரம் நீட்டி காத்திருக்கும் இயேசுவை நோக்கி சிறு அடி எடுத்து வைத்தால் போதுமானது. அம்முயற்சி, ஒப்புரவு அருளடையாளம் பெற்றுக்கொள்ளுதலில் அடங்கியுள்ளது. அது கருணைக்கடலாம் ஆண்டவரின் திருமுக தரிசனத்தை அளிப்பதோடு மன அமைதியும் இதயத்தூய்மையும் அளிக்கும்.
எனதருமை இளைஞர்களே, ஆண்டவர் நம்மை சந்திக்க ஆசைப்படுகிறார், அவரை நாம் காண வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இது எங்ஙனம் இயலும் என நீங்கள் என்னைக் கேட்கலாம். ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஸ்பெயின் நாட்டில் பிறந்த ஆவிலா நகரத்துத் தெரசா சிறு வயதாக இருக்கும் போது பெற்றோரிடம் “எனக்கு கடவுளைக் காண வேண்டும்” என்று கூறினார். “கடவுளால் நாம் அதிகமாக அன்புச் செய்யப்படுகிறோம் என்னும் உணர்வை, செபம் வழியாக அவரோடு கொள்ளும் நெருங்கிய நட்புறவிலிருந்துப் பெற்றுக்கொள்ளலாம்” என பிற்காலத்தில் தமது சுயசரிதையில் கூறுகிறார். அதனால், நான் உங்களிடம் கேட்க விரும்புவெதல்லாம், நீங்கள் செபிக்கிறீர்களா? என்பதே. ஒரு நண்பரிடம் பேசுவது போல, இயேசுவிடமும், தந்தைக் கடவுளிடமும் தூய ஆவியிடமும் உங்களால் பேச முடியும், என்பது உங்களுக்குத் தெரியுமா? இயேசு சொல்லளவில் மட்டும் நண்பர் அல்ல மாறாக, மற்றனைவரை விடவும் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த நெருக்கமான நண்பர். பிரான்ஸ் நாட்டில் ஆர்ஸ் நகர் பங்கு கோவிலில் பங்குத் தந்தையாக இருந்த புனித மரிய வியானியிடம், அப்பங்கு மக்களுள் ஒருவர், செபத்தைக் குறித்து அப்புனிதரிடம் பின்வருமாறு கூறினார், “நான் நற்கருணைப் பேழையின் முன் செபிக்கும் போது, நான் அவரைப் பார்க்கிறேன், அவர் என்னைப் பார்க்கிறார்” (கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி 2715).
அன்றாடம் திருவிவிலியம் வாசிக்க நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன். காரணம் அதன் வழியாக நீங்கள் கடவுளைக் காண்பீர்கள். அப்பழக்கம் உங்களுக்கு இல்லையெனில், இனிமேல், தொடங்குங்கள். முதலில் நற்செய்தி நூல்களை வாசியுங்கள். அன்றாடம் ஓரிரு வரிகள் வாசித்தாலே போதுமானது. கடவுள் உங்கள் இதயங்களில் பேச அனுமதியுங்கள், “உங்களுடைய பாதைக்கு அவர் வெளிச்சமாகட்டும்” (திபா 119: 105). உங்களுடைய சகோதரர் சகோதரிளின் முகங்களிலும் கடவுளைக் காண இயலும். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களான, ஏழைகளில், வறுமையில் வாடுவோரில், தாகமாய் இருப்போரில், அந்நியர்களில், நோயாளிகளில், சிறையில் இருப்போரில் கடவுளின் முகத்தைக் காண இயலும் (மத் 25: 31-46). நீங்கள் இவ்வனுபவத்தைப் எப்போதாவது பெற்றதுண்டா? இறையாட்சியைக் குறித்த இரகசியம் நமக்கு கைவசம் ஆக வேண்டுமெனில், நாமும் ஏழைகளுள் ஒருவர் என்பதை ஏற்றாக வேண்டும். தேவையில் உழல்வோரைக் காணும் போது, அவர்களின் உணர்வுகளை மனதினில் ஏற்று உதவும் இதயம் அவசியம். இயேசு விரும்பும் தூய உள்ளத்தோர் இத்தகையோரே.
செபம் வழியாக இயேசுவை சந்தித்து, விவிலிய வாசகம் வழி அவர் மொழி கேட்டு, சகோதர அன்பில் நிலைக்கும்போது நீங்கள் ஆண்டவரைக் குறித்த அறிவையும், நீங்கள் யார் என்ற சுய அறிவையும் பெற்றுக் கொள்வீர்கள். “இறையழைத்தல்” என்பது காலாவதியாகிப் போன பழைய வாழ்க்கை முறைமை என நினைத்து ஒதுக்க வேண்டாம். அது உண்மை அல்ல. திருச்சபை சமூகங்கள் இறையழைத்தலைக் குறித்து தீவிரமாக சிந்திக்கவும், செபிக்கவும் அழைக்கிறேன். நற்செய்தி பறைசாற்றுதலுக்கு குடும்பங்களுக்கு இருக்கும் முக்கியமானப் பொறுப்பைக் குறித்த அறிவைப் பெற்றுக் கொள்வோம். குருத்துவ வாழ்வுக்கும் துறவற வாழ்வுக்குமான அழைப்பை நீங்கள் பெற்றிருக்கீர்களா என நீங்கள் உள்ளார சிந்தித்து செபித்துத் தீர்மானம் எடுங்கள். இயேசுவை முழுமையாக வாழ்வில் ஏற்று அவருக்காகவும் அவரது திருச்சபைக்காகவும் தங்களை அர்ப்பணிக்கும் இளைஞர்கள் எவ்வளவு அழகு பொருந்தியவர்கள் தெரியுமா? உங்களைக் குறித்த கடவுளின் திட்டத்தை தூய உள்ளத்துடன் தேடுங்கள், அவரது அழைப்பு உள்ளே உணருகிறீர்களானால், அவ்வாழ்வை சவாலாக ஏற்றுக் கொள்ளுங்கள். ஆண்டவரின் அழைப்புக்கு நீங்கள் “ஆம்” என்பீர்களென்றால், நீங்கள் ஆண்டவரின் இதயத்திற்கு இணங்கிய மாற்றுச் சமூகத்திற்கான விதைகளாக திகழ்வீர்கள். கடவுளின் திருவுளமே மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதை மறக்க வேண்டாம்.
4. கிராக்கோவ் நோக்கியப் திருப்பயணம்
“தூய உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்” (மத் 5: 8). அன்பான இளைஞர்களே, இந்நற்செய்திப் பேறு உங்கள் இதயத்தோடு நேருக்கு நேராகப் பேசுகிறது, மேலும் இதுவே உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. அதனால் மீண்டும் ஒருமுறை கூறுகிறேன், மகிழ்ச்சியாய் வாழ தைரியம் கொள்ளுங்கள்.
போலந்து நாட்டில் உள்ள கிராக்கோவ் இல் 2016 ஆண்டு நடைபெற உள்ள உலக இளைஞர் தினத்திற்கான கடைசிக் கட்ட தயாரிப்புகள் இவ்வாண்டைய இளைஞர் தினம் தொடங்கி நடக்க இருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் புனித இரண்டாம் யோவான் பவுல் திருத்தந்தை உலக இளைஞர் தினத்தை தொடங்கி வைத்தார். உலகின் பல்வேறு கண்டங்களைச் சார்ந்த இளையோரை பேதுருவின் வாரிசான திருத்தந்தையின் தலைமையில் ஒன்றாக்க் கூட்டும் நிகழ்வாக, திருப்பயணம் என்னும் பெயரில் இது ஆரம்பிக்கப்பட்டது. இது, கடவுளின் ஆசியால் மாபெரும் எழுச்சியாய் உலக அளவில் உருப்பெற்று, கிறிஸ்துவுக்கான மாபெரும் சாட்சியமாக மாறி இருக்கிறது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் மனங்களில் இந்த உலக இளைஞர் தினம் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களுக்காக ஆண்டவருக்கு நன்றி சொல்வோம். இயேசுவே வழி, வாழ்வு, ஒளி என ஏராளமானோர் இத்திருப்பயணம் மூலம் கண்டுணர்ந்திருக்கிறார்கள். திருச்சபை அனைவருக்கும் அன்னை என்பதை பல்லாயிரக்கணக்கானோர் உணர்ந்திருக்கின்றனர். இதனால் பல மனமாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன, பலர் இறையழைத்தலை ஏற்றிருக்கிறார்கள். உலக இளைஞர் தினத்திற்கான பாதுகாவலர், புனித இரண்டாம் யோவான் பவுல் திருதந்தை நமக்காகப் பரிந்து பேசட்டும். அவரின் பரிந்துரையால் அடுத்த ஆண்டைய நமது திருப்பயணம் பல மாற்றங்களை திருச்சபையில் ஏற்படுத்தட்டும். என்றும் கன்னியான, அருள்நிறைந்த, எழில் பொருந்திய, உள்ளத்திலே மாசுமறு அற்ற, நமது தாய் மரியாவின் கருணைக்கண் நம் மேல் பதிக்கட்டும். அவளது அரவணைக்கும் கரங்கள் நம்மைப் பின்தொடரட்டும்.
ஜனவரி 31, 2015 அன்று வத்திக்கானிலிருந்து வெளியிடப்பட்டது.
|
பிரான்சிஸ்
0 கருத்துகள்