பனிப்பாறையை உடைக்கும் நா (நாவு) சேவை... | அ. சந்தோஷ்

பனிமலை உருக ஆரம்பித்திருக்கிறது. பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக உருவாக்கப்பட்டது அது. அது குளிர்சாதனப் பெட்டிப்போல இருந்து உலகில் வாழ்வோர் அனைவரும் கொடும் வெப்பத்தைத் தாங்கிடத் துணை நின்றது. அதன் அடுக்குகள் ஒன்றொன்றாக உடைந்து விழத் தொடங்கி இருக்கிறது. மனிதர்கள் செய்த அட்டூழியம் இது. வளர்ச்சி, மாற்றம், உருமாற்றம், வாழ்க்கைத் தரம் மேம்படுத்தல் என கவர்ச்சியான வாக்குகளால் நா சேவை செய்தவர்கள் செய்த பல்லாண்டு கால முயற்சியால், பனிகள் கரைகிறது. வெப்பத்தின் தாக்கம் ஒருபுறம், தண்ணீர் பற்றாக்குறை மறுபுறம் என வாழ்க்கைச் செல்கிறது.

 வேறு பனிப்பாறைகளும் உடைய ஆரம்பித்திருக்கின்றன. பல்லாண்டு கால தன்னலமற்ற மாமனிதர்கள் உருவாக்கி வைத்த பனிப்பாறையை உடைக்க நா சேவை ஆரம்பித்திருக்கிறது. இப்பனிப்பாறை நம்மை ஏமாற்றி விட்டது, இதைத் தகர்க்க வேண்டும் என்று சிலர் திட்டமிட்டு நா சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இப்பனிப்பாறையை வெறுப்போர் உள்ளனர். காரணம் அது அனைவருக்கும் சேவை செய்கிறது என்பதே அதன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு. அது ஏற்றத்தாழ்வுகளைப் பார்ப்பதில்லை. குளத்திற்கும் அது நீர் கொடுத்தது, சிறு கிணற்றிற்கும் அது நீர் கொடுத்தது. பெரும் நதிகளையும் தண்ணீரால் நிரப்பியது, சிறு வாய்க்கால்களையும் தண்ணீரால் நிரப்பியது. பெரும் குளங்களை வைத்திருப்பவர்கள், கிணற்றுக்குள் தண்ணீர் போவதை விரும்பவில்லை. பெரும் நதிகளை சொந்தம் கொண்டாடியவர்கள், வாய்க்கால்களுக்கு தண்ணீர் கொடுக்கும் பனிப்பாறையின் பெருந்தன்மையை வெறுத்தனர். ஆகையால் அதை ஒட்டு மொத்தமாக அழிக்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.

எனக்குத் தரும் அதே தண்ணீரை நீ எப்படி சிறு வாய்க்கால்களுக்கும் நல்கலாம் என்பது அவர்களின் வாதமாக இருந்தது. நாங்கள் பயன்படுத்தும் நீரின் எச்சங்களை அவர்கள் பயன்படுத்தட்டும் என்பது அவர்களின் வாதம். பனிப்பாறையின் தயவில் அவர்கள் வாழ வேண்டாம். எங்கள் தயவில் அவர்கள் வாழ்ந்தால் போதும் என்பது அவர்களின் காட்டமான தீர்மானம்.

photo: pixabay.com

காரணம் இந்தப்பனிப்பாறை உருவாகும் முன்னர், வான்மழையின் பகிர்வு அப்படித்தான் இருந்தது. பெரிய குளங்களையும் பெரிய நதிகளையும் உடையவர்கள் தங்களுக்கென பயன்படுத்திய பின் அதன் எச்சத்தை மற்றவர்களுக்குக் கொடுப்பர். பெரியவர்கள் என சுயம் உயர்த்திக் கொண்டவர்கள், மற்றவர்களை பெரிய குளங்கள் மற்றும் ஆறுகளின் அருகாமையில் இருந்து விலக்கி வைத்தனர். ஆனால், பனிப்பாறை பெரிதாய் நிறைய கால்களுடன் ஓங்கி வளர்ந்தது. அதன் கால்கள் எங்கும் பரந்தோடியது. யார் வேண்டுமென்றாலும் நீரைப் பருகலாம். சுத்தமானத் தண்ணீர் கலப்பின்றி அனைவருக்கும் கிடைத்தது. விவசாயம் இனி எச்சங்களை நம்பி இல்லை. குடிக்கும் தண்ணீர் மிச்சங்களை நம்பி இல்லை. எல்லாம் நேரடியாக கிடைக்க ஆரம்பித்தது. பனிப்பாறை அனைவருடையவும் சுயமதிப்பை உயர்த்தியது. மனித மாண்பை அளித்தது. யாரும் யாருக்கம் அடிமை இல்லை என போதித்தது. மானமே உயர்ந்தது எனத் தீர்க்கமாக கூறியது. இரந்துண்ணும் இழிநிலை இனி இல்லை என்பதை போதித்தது. அனைவரும் தலை நிமிர்ந்தனர். அதிகாரம் கொண்டனர். மக்களுக்கு மானமே உயர்ந்தது என போதித்தது. ஏற்றத்தாழ்வு போதித்தலே இழிது என வரிந்துக் கட்டிக்கொண்டு விழுமியங்களை ஊட்டி விட்டது. வாய்க்கால்களின் ஓரங்களில் வாழ்ந்தோர், நேரடியாக கிடைத்த தூய நீரால் தலைநிமிர்ந்தனர். பனிமலையின் கால்கள் அங்கு வரை நீண்டது. அனைவரும் பனிமலை அளித்த சுதந்திரத்தை மனம் நிறைய அனுபவிக்க ஆரம்பித்தனர்.  பனிமலையின் இந்தப் போக்கு குளங்களையும் பெரும் நதிகளையும் சொந்தமாகக் கொண்டவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் சதிவலைகள் பின்னினார்கள்.

எப்படியாவது அதைத் தகர்க்க வேண்டும். நா சேவையே பெரிதென நம்பினர். நா சேவையால் அதை அழிக்க முடியும் என நம்பினர். புதிய புதிய வாக்குறுதிகளை வழங்கினர். வாய்க்கால்களின் ஓரமாய் சுய மதிப்புடன் வாழ்ந்து வந்தோருக்கு ஆசை வார்த்தைகள் கொடுத்து, குளத்தின் அருகாமையில் வாழ்ந்து வந்த தங்களின் வீடுகளுக்குப் பின்னால் இடம் கொடுத்தனர். தாங்கள் தண்ணீரைத் தருவதாக மூளைச்சலவைச் செய்தார்கள். பனிமலையை உடைக்க வேண்டும், அது உங்களை ஏமாற்றுகிறது என்று பேசினார்கள். வாய்க்கால் ஓரம் வாழ்ந்தவர்களை விட சிறந்த வாழ்வு தருவதாக கூறினார்கள்.

மூளைச்சலவைச் செய்யப்பட்ட வாய்க்கால் ஓரத்தில் வாழ்ந்தவர்கள் நா சேவை ஆரம்பித்தனர். பனிமலை உருவாக்கியவர்கள் திட்டமிட்டு சதி செய்தனர் என போதித்தனர். அவர்கள், அதற்குள் விஷங்களை ஒளித்து வைத்தார்கள் என போதிக்க ஆரம்பித்தனர். பனிமலை நேரடியாக கால்களை விரித்துள்ளதால், அது தீமையை ஏற்படுத்துகிறது என்று நா சேவையை தீவிரமாக முன்னெடுத்தனர். இவர்களின் வீடுகளுக்கு, குளத்தின் அருகாமையிலும் பெரும் நதிகளின் ஓரங்களிலும் வாழ்ந்தவர்கனளின் வீடுகளிலிருந்து தண்ணீர் குழாய் வழியாக போய்க்கொண்டிருந்தது. அவர்களின் பெருந்தன்மையை மனதுக்குள் மெச்சி, அவர்கள் காட்டிய கரிசனையின் மன் குளிர்ந்து, மெய்சிலிர்க்க நா சேவை தொடர்ந்தது.

சுயம் அழிதல் நடப்பதை மனப்பூர்வமாக வேண்டுமென்றே மறைக்கத் துணிந்தனர் பனிமலையை உடைக்க பலரை கூட்டிக் கொண்டிருக்கிறார்கள். கடப்பாரைகள், மண்வெட்டிகள் எல்லாம் எடுத்துக் கொண்டு, வாய்க்கால் ஓராமாகவும் கிணறுகளையும் நம்பி வாழ்ந்தோர் போய் கொண்டிருக்கிறார்கள். எல்லாருக்கம் தண்ணீரை குளங்களும் பெரும் நதிகளும் நல்குமென நம்பி... உடைத்தல் நடக்கிறது. தமிழ்ச் சமூகம் வீழந்துவிடுமோ ஆடை போன்ற மானம் உருவப்படுமோ காரணம் சிலரின் நாவுகள் நீ...ளமானவை. அதன் சேவைகள் பூட்ஸ் வரை செல்கிறது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்