உடலை ஆட்டிப்படைக்கும் நினைவுகள் | அ. சந்தோஷ்

 அந்நாட்களில் பாதையெங்கும் பயம் பரவிக்கிடந்தது. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் பயத்தின் ரேகைகள் தெரிந்தன. பாதையில் தெரியும் படியான ஆபத்துக்கள் ஏதுமில்லை. நச்சை கொத்தி வைக்கும் பாம்புகள் எங்கும் இல்லை. நான் கண்டதுமில்லை. தென்னந்தோப்பு அது. தோட்டத்தின் கிழக்குப் பகுதியில்தான் பாதை கிடந்தது. பாதையின் ஒருபுறம் சிறு ஓடை ஒன்று சென்றது. ஓடை சிறிது தூரம் ஓடி குளத்தில் கலந்து மீண்டும் வெளியேறி ஓடையாய்ச் சென்றது. அத்தோடு ஓட்டித்தான் பாதையும். ஓடையின் ஓரத்தில் அச்சமூட்டும் ஏதுமில்லை. ஆனால்அந்தத் தென்னந்தோப்பு தனியாகத் தெரிந்தது. வீடுகள் ஏதுமில்லை. அது இரு கிராமங்களுக்கு இடையே கிடந்தது. எப்போதாவது மனிதர்கள் நடந்து செல்வார்கள். மற்றப்படி அது ஒரு அமைதியான தோட்டம்.

பாதங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு முறையும் குலை நடுங்கும் அச்சம் ஆட்கொண்டவாறு இருந்தது எனக்கு. கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி வர அம்மா அனுப்பும் போதெல்லாம் அந்தத் தென்னந்தோப்புதான் பெரிய தடையாக தெரிந்தது. அரிசி வாங்கச் செல்வதுதேயிலைத் தூள் வாங்கச்செல்வதுமீன் வாங்கச் செல்வதுமரச்சீனிக் கிழங்கு வாங்கச் செல்வது என அன்றாடம் பல முறை அத்தோட்டத்தைக் கடந்தாக வேண்டும்.


photo: pixabay.com

சில நாட்களாகத் தான் இந்த பயம் மனதை ஆக்கிரமித்திருக்கிறது. இதுவரைக்கும் அப்படி ஓர் அச்சம் இருந்ததில்லை. கடந்த வாரம் ஓடைய இடையில் முறித்து விரிந்து கிடந்த குளத்தைத் தாண்டிச் செல்லும் போது ஒரு விசித்திரமான காட்சி கண்டேன். காலையில் அக்குளத்தில் குளிப்பதற்கென ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் வருவதுண்டு. பிற்பகல் மூன்று மணிக்குப் பிறகும் வருவார்கள். சில வேளைகளில் வேலை முடித்து வரும் ஆண்கள் இரவு 8 மணி வரைக்கும் வருவதுண்டு. அந்நேரங்களில் அப்பாதையைக் கடந்து செல்வது அவ்வளவு சிரமம் இருக்காது. ஆனால் அன்றைய காட்சி பெரும் பாதிப்பாக மாறியது. அன்று ரேஷன் கடைக்குச் சென்று மண்ணெண்ணெய் வாங்கி வர அம்மா அனுப்பி வைத்தாள். நேரம் பதினொன்று இருக்கும். குளத்திலோ பாதையிலோ யாரும் அவ்வேளையில் பொதுவாக இருக்க மாட்டார்கள். சில வேளைகளில்தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் மாடுகளை அவிழ்த்து மாற்றிக் கட்டுவதற்காக யாராவது வரலாம். மற்றப்படி யாரும் இருக்க மாட்டார்கள். அன்றைய தினம் குளத்திலிருந்து ஏதோ சத்தம் கேட்டது. செவிகளை கூசச்செய்யும் அளவிலான கெட்ட வார்த்தைகள் வந்து கொண்டிருந்தன. யார் என்று பார்க்க விலகி நின்று எட்டிப் பார்த்தேன். குளத்தில் இறங்கி குளிப்பதற்காக சப்பாத்து கட்டி வைத்திருப்பது வழக்கம். மாடுகளை கழுவவும் ஆட்கள் இறங்கிக் குளிக்கவும் வசதியாக அது இருக்கும். அதன் இருப்பக்கங்களிலும் சற்று உயரமாக தடுப்பு சுவர் இருக்கும். இது சற்று விரிவாக அமைக்கப்பட்டிருக்கும். இதில் வைத்து ஆட்கள் துணி துவைப்பது வழக்கம். அதன் கிழக்கு ஓரத்தில் தலைகீழாக ஒருவர் படுத்துக் கிடந்தார். கெட்ட வார்த்தைகள் சராமாரியாக வந்து கொண்டிருந்தன. யாராவது எப்போதாவது குளத்தில் இறங்கும் வண்ணம் சாய்த்து அமைக்கப்பட்டிருக்கும் சப்பாத்தின் ஓரத்தில் படுப்பதுண்டு. அது தலை மேலே வைத்துத்தான் படுப்பார்கள். யாரும் தலைகீழாக படுப்பதில்லை. அவன் குடிபோதையில் இருந்தான். அது கள்ளச்சாராயம் எங்கும் சர்வசாதாரணமாக கிடைக்கின்ற காலம். அவருடைய கிடப்பு அவனுக்குப் பிடித்திருந்தது. அவன் மண்ணெண்ணெய் வாங்கச் சென்றான்.

திரும்பி வரும்போதுகுளத்தில் ஆட்கூட்டம். கூச்சலும் குழப்பமும் நிலவியது. பத்து மற்றும் பதினொன்று வயது நிரம்பிய இரு குழந்தைகள் அப்பா என அழைத்துக் அழுது கொண்டிருந்தன. முப்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி பலமாக கத்தி அழுது கொண்டிருந்தாள். தலைகீழாகப் படுத்திருந்தவன் தண்ணிக்குள் போய் விட்டான். பிறகு பிணமாகத்தான் மேலே எடுத்தார்கள். காலிலிருந்து தலைவரை மூடி இருந்தார்கள்.

அன்றிலிருந்து குளமும் தென்னந்தோட்டமும் அச்சமூட்டும் குறியீடுகளாக மாறி விட்டன. இப்போது வழியெங்கும் பயம் பரவிக் கிடக்கின்றது. வழியில் ஆபத்துக்கள் இல்லை என்று மனதிடம் பல முறை சொல்லியாயிற்று. ஆனாலும் கைகளும் கால்களும் தென்னந்தோப்பை அடையும் போது விரைகின்றன.

நினைவுகளை அழிப்பது சுலபமல்ல அவை ஆழ்மனதிலிருந்து உயர்ந்து உடலை ஆட்டிப்படைக்க எப்போதும் காத்துக் கிடக்கின்றன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்