மாலை நேரங்களில் கொடுக்கப்படும் உணவு பொட்டலத்தை தவறாமல் பெற்றுக் கொள்ளும் பாட்டி காய்கனி வியாபாம் செய்கிறாள். பெரிய கடைகள் கோலோச்சும் வணிக உலகில் இப்பாட்டி, ஓரிரண்டு கோணிப் பைகள், நெகிழிப் பைகள் ஆகியவற்றின் உதவியோடு பெரிய விசாலமான சுவர்களற்ற, காவல்களற்ற பேருந்து நிலையத்தின் ஓரத்தில், பெரும் மக்கட்கூட்டம் வந்து போகும் இடத்தன் பகுதியாக தனது இருப்பை விசாலாமாக வைத்துள்ளாள். நீண்ட வரிசையில் காத்துக் கிடந்து காய்கனிகள் வாங்கபவர்களோ, தனியார் வாகனங்களில் வந்து பொருட்கள் வாங்குபவர்களோ இல்லையெனினும், அவளுக்கென ஏழை வாடிக்கையாளர்களை வைத்துள்ளாள். கையேந்திப் பணம் ஏற்க மறுக்கும் அவள் தள்ளாத வயதிலும், பெரும் முதலாளிகளை எள்ளி நகையாடும் விதமாக, குறைந்த லாபத்தில் வாங்கியப் பொருட்களை விற்கும் மதிப்புமிக்க அரிய வகை வியாபாரியாக தனது இருத்தலை உறுதி செய்துள்ளாள். இவளிடம் பேரம் பேசுபவர்களுக்கு விலை குறைத்துக் கொடுத்து, குறைந்த லாபத்தையும் வேண்டாம் என வைத்து Margin Free வியாபாரம் நடத்தவும் செய்கிறாள் சில வேளைகளில். இவளுக்கு நிகர் இவளே. இவளின் வியாபாரத்தின் முன் உலகில் பெரும் முதலாளிகள் அனைவரும் சிறுமை அடைந்து நிற்பர், மனசாட்சி எனும் பெரும் நியாய இருக்கையின் முன்...
அன்றைய தினம் உணவுப் பொட்டலத்தை பெற்றுக் கொண்டவளிடம், எலுமிச்சை
பழம் பத்து வேண்டும் என்று பணத்துடன் கை நீட்டப்பட்டது. பணத்தை மறுத்தவள்,
எலுமிச்சை பழப்பெட்டியை மொத்தமாக நீட்டினாள், போதுமான அளவு எடுத்துச் செல்லுங்கள்
என்று. கடந்த ஒரு மாதம் என்னுடைய பசியை போக்கும் உங்களிடம் காசு வாங்குவது
முறையல்ல எனக் கூறி பாட்டி பெரும் ஆசனம் போட்டு அமர்ந்தாள், கடைநிலையோரின் பளிங்கு
போன்ற உள்ளத்தின் சாட்சியாக, குலதெய்வமாக. இப்பாட்டியை யாராலும் வெல்ல முடியாது...
உலகின் மிகப்பெரிய பணக்காரனால் கூட...
0 கருத்துகள்