ஓருடலென - திருவிருந்துப் பாடல் | அ. சந்தோஷ்



ஓருடலென மாறிடவே உடலெனவே வந்தாய்
ஓருயிரென வாழ்ந்திடவே குருதியெனவே வந்தாய்
என்னுடலாய் உணர்வினிலே கலந்தவரே போற்றி
என்னுயிராய் உயிர்க்காற்றாய் கரைந்தவரே போற்றி

அன்பின் உருவே ஆருயிரே இறைவா
வாழ்வின் அமுதே நலமருளும் மருந்தே

மானிட வாழ்வின் பொருள் எதுவென கலங்குகையில்
உடலும் இரத்தமும் பகிர்ந்தளித்து நீ உணவாய் வந்தாய்

தியாகம் நிறைந்த குடும்ப உறவின் மேன்மை உணர்ந்தேன்
பகிரும் போது இதயபாரம் குறையும் எனக் கண்டேன்

பிறர் நலமே தன்னலமென வாழ்வதன் இனிமை சுவைத்தேன்

ஓருடலினில் – ஓருடலினில் - ஓருறவினில் ஓருறவினில் -
இறையுறவினில் இறையுறவினில் - மெய்யுறவினில் மெய்யுறவினில்
இரண்டறக் கலந்தோம் இரண்டறக் கலந்தோம்

அன்பினில் வாழ்தல் கடினம் என்றேத் தயங்குகையில்
அன்பின் உருவினில் மனிதரிடையே நீயும் வாழ்ந்தாய்
உயிரை ஈந்தாய் சிலுவையிலே அன்பின் வடிவில்
அன்பு செய்து வாழ்ந்திடுதல் மகிழ்ச்சி எனக் கண்டேன்
பிறர் துயரை துடைப்பதிலே வாழ்வின் பொருள் என அறிந்தேன்

ஓருடலினில் – ஓருடலினில் - ஓருறவினில் ஓருறவினில் -
இறையுறவினில் இறையுறவினில் - மெய்யுறவினில் மெய்யுறவினில்
இரண்டறக் கலந்தோம் இரண்டறக் கலந்தோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்