வாக்குகளின் மழை என் காட்டில். இதமான மழை அது. மேகம் கரைந்து வெண்மையாய் இறங்கும் அனுபவம். மரங்களின் கிளைகளிலும் இலைகளிலும் நிறைந்து பனிமூட்டமாய் நிறைந்து எங்கும் பரவி இருந்தது. எல்லாம் வருடல்களாய், தொடுதல்களாய், நீவுதல்களாய் பரவி சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தது.
நினைவுகள் என்னும் மேகம் வார்த்தைகளாய்ப் பரவிக் கொண்டிருந்தது. தாயின் நினைவுகள் வாக்குகளாய் உயர்ந்து பட்டாம்பூச்சி போல் சிந்தையில் உருவாகி சிலிர்த்து உடலெங்கும் அப்பிக் கொண்டன. அவள் வெளிப்படுத்திய அன்பும் பாசமும் கரிசனையும் தற்கையளிப்பின் செயல்களும் நினைவுகளாய் உயர்ந்தன, வாக்குகளாய் பரிணமித்தன. நறுக்கிய குறுஞ்சொற்கள், நீண்ட வசனங்கள், சிறுகதைகள், நெடுங்கதைகள், திரைப்படம் போல விரிந்த காட்சிகளின் நடுவே உண்ரவூட்டும் உரையாடல்கள், கவிதைகள், சிரிப்புகள், அதட்டிடும் சுடுசொற்கள் என வாக்குகள் நீண்டன. அவற்றில் நீண்ட நேரம் நனைதல் சுகத்தின் உச்சத்தைத் தந்து கொண்டிருந்தது. ஈரம் நிறைந்த காற்றாய் உடலைத் தழுவி, உடலின் நரம்புகளின் நுழைந்து மெய்சிலிர்க்க வைத்துக் கொண்டிருந்தன. உள்ளமும் உடலும் குளிர்ந்து கொண்டிருந்தது. நினைவுகளால் எனக்கென படைக்கப்பட்ட இயற்கையில் நனைந்து, காற்று சுவாசித்து நடக்கலானேன். செயற்கைகளின் நெருடலின் நடுவில் இயற்கை என்னை என்னுலகிற்கு அழைத்துச் சென்று வாக்குகள் என்னும் அமுதூட்டிக் கொண்டிருந்தது.
என்னுலகின் நூலகத்தில் எழுத்துகள் புற்றீசல் போல எழுந்து கோர்வையாகி சொற்களாக மாறி, சொற்றடர்களாக உருமாறி, எழுத்துலகின் பல்வேறு வடிவங்களாக உருமாறிக் கொண்டிருந்தன. அவை மெய்யியல் நூல்களாய், உளவியல் ஆராய்ச்சி நூல்களாய், வரலாற்றுப் புதினங்களாய், அறநூல்களாய், வரலாற்று நூல்களாய் எனது நூலகத்தை நிரப்ப ஆரம்பித்தன. வாக்குகளின் நடுவில் நனைந்து நடந்தேன்.
தடுமாறாது தாங்கும் அறங்களாய், உளத்தின் சஞ்சலங்களை புரிந்து நெறிப்படுத்தும் துணைவனாய், நெஞ்சு நிமிர்த்து துணிவுடன் வலம்வர வேர்களை காட்டும் முப்பாட்டனாய், கற்பனைகளை விரிவுப்படுத்தும் தேவதையாய் வாக்குகள் இறைபோல் என் உலகில் நிறைந்து வழிந்தது.
0 கருத்துகள்