கறுப்பு வெள்ளையில் அல்ல வண்ணங்களில் வாழ்தல் | அ. சந்தோஷ்

கண்கள் மூடும் போது கனவுகளால் நிறைகிறேன். கனவுகளுக்கு பகலென்றும் இல்லை இரவென்றும் இல்லை. கனவா நனவா என விவேகித்றியா முறையில் கனவுளின் அரங்கேற்றம் எனக்குள் நடந்தேறிக் கொண்டிருந்தது. வண்ணங்களை நான் தொலைக்க விரும்பவில்லை. விதவிதமான கனவுகள் எங்கும் நிறைந்து கிடந்தன. ஏழு வண்ணங்களின் கலவைகள் கண்களுக்கு விருந்தாகும் போது நான் ஏன் கறுப்பு வெள்ளைக்குள் சுருங்கிப் போக வேண்டும். நிழலும் நிஜமும் கலந்து அவை வாழ்வை ஆக்கிரமித்து கண்களுக்கு மட்டுமல்லாமல் உடல் முழுமைக்கும் குளிர்ச்சி கொடுத்துக் கொண்டிருந்தது. அவை கறுப்பு வெள்ளைகள் அல்ல. இது நன்று அது தீது, இவர் நல்லவர், அவர் கெட்டவர், இது அழகு அது அழுக்கு, அது குறை இது நிறை, இது பொய் அது உண்மை, இது ஒளி அது இருள், இது ஆழம் அது உயர்வு என்று முரண்களான கறுப்புக்கும் வெள்ளைக்கும் இடையே எனது கனவுகள் பயணிக்கவில்லை. அவைகளைத் தாண்டிய பல வண்ணங்களால் கனவுகளைக் கண்டு நகர்ந்து கொண்டிருந்தேன். என் கனவுகளைப் பற்றி பலர் விதி எழுதிக் கொண்டிருந்தனர். நன்றும் தீதும் அறியா ஞானசூன்யம், உயர்ந்தது எது தாழ்ந்தது எது என்று தன்னிலை நிறுவ முடியாத நிர்வாகத் திறமையற்றவன், எவருடன் பேச வேண்டும் எவருடன் பேசக் கூடாது என்று தீர்மானிக்க முடியாத அறிவிலி... என தீர்ப்புகள் எழுதப்பட்டுக் கொண்டிருந்தன. அவர்கள் கூற்றுகள் எல்லாம் கறுப்பு வெள்ளையாய் எனக்குப் பட்டது. இது பகல் அது இருள் எனக் கூறி, விடியிலின் அழகுகளையும், மஞ்சள் வானின் மாலை வித்தைகளையும் அறியாமல் வாழ்கிறார்களோ எனத் தோன்றியது. கோடி வண்ணங்கள் நெஞ்சில் நிறைய எல்லாவற்றிலும் இரசித்தப்படி நடக்கலானேன்.

photo: pixabay.com



கருத்துரையிடுக

0 கருத்துகள்