தாய் மரியின் வடிவில் சுடர்விட்டு ஒளிரும் தந்தைக் கடவுளின் பெண்மை | அ. சந்தோஷ்

இயேசுவின் தாயாகிய மரியாவின் பிறந்தநாளை சிறப்பிக்கும் இந்நாளில், அனைவருக்கும் திருவிழா வாழ்த்துக்களை நெஞ்சார தெரிவிக்கிறேன்.

தாய் என்னும் சொல் நமக்குள் பலவிதமான உணர்வுகளைத் ஏற்படுத்துவதுண்டு. தாயின் அரவணைப்பு, கவனிப்பு, அக்கறை, ஆகியவை நமது உணர்வுகளோடு கலந்து, சிந்தனையை மட்டுமல்ல நமது உடலையும் ஆட்கொளகிறது. அவளை விட்டு விலகி இருக்கையில் தவிப்புகள், ஏக்கங்கள், தனிமைகள் ஆகியவை ஆட்கொள்வதுண்டு, உடலையும் ஏதேதோ செய்வதுண்டு. இத்தகையத் தவிப்புகளையும் ஏக்கங்களையும் நமக்குள் ஏற்படுத்தும் குணங்களைப் பெற்றவராக நம்முடைய விண்ணகத் தந்தையானவர் இருக்கிறார் என்பதே உண்மை. பொதுவாக ஆணின் இயல்புகளைக் கொண்ட, வன்மையான, நெறிப்படுத்தும், ஒழுக்கங்களைக் கற்பிக்கும், கண்டிப்பு மிக்க கடவுளைப் பற்றி நாம் கேட்டு வளரந்திருக்கிறோம். இத்தகைய நம்பிக்கை  தனிப்பட்ட வாழ்விலும் சமூக வாழ்விலும் கலந்து கிடக்கின்றன. சமூகமும் அதையே நமக்கு பெரும்பாலும் கற்பிக்கிறது எனலாம். மேலும், நீதிபதியாக, தீர்ப்பிடுபவராக, தண்டிப்பவராக, நாம் கேட்பவற்றைத் தருபவராக, அவரைப் பற்றி சமூகம் நமக்கு கற்பித்துத் தந்திருக்கிறது. அவர் ஓர் ஆண் என நமது நினைவுகளில் பதிந்து கிடக்கிறது. அது நனவு -  conscious மனத்திலும் நனவிலி - unconscious மனத்திலும் ஒருபோல நிறைந்து நிற்கின்றன எனலாம். ஆக அவர் ஆண், ஆணின் குணங்களை உடையவர் என்பதே பொதுவான நம்பிக்கை. ஆனால், கடவுள் பெண்மையின் இயல்புகளையும் உடையவர் என்பதே உண்மை. மென்மையான அன்பு, அரவணைக்கும் அன்பு, மார்போடு அணைக்கும் அன்பு, மடியில் வைத்து தாலாட்டும் அன்பு, அழுவோரின் கண்ணீரைத் துடைக்கும் அன்பு, எத்தனை முறை பாவம் செய்தாலும் அவரின் வருகைக்காக் காத்திருக்கும் இரக்கத்தின் அன்பு, என தாய்மையின் குணங்களைச் சுமந்தவராக தந்தை இருக்கிறார் என்பதை விவிலியம் நமக்குக் காட்டுகிறது.

இதைச் சற்று விளக்கமாகப் பார்க்கலாம். காணாமல் போன மகன் திரும்பி வரும்போது, அவனை அள்ளி அரவணைக்கும் தந்தையின் கரங்களை 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த டச்சு கலைஞரான ரெம்ராண்ட் அவர்கள் வரைந்து வைத்தார். அத்தந்தையின் கரங்களுள் ஒன்றானது தாயின் கரமாக இருக்கிறது. அதாவது அன்போடு அம்மகனை அரவணைத்து ஏற்றுக்கொள்ளும் கரங்களில் ஒரு கரம் ஆணின் கரம், இன்னொன்று பெண்ணின் கரம்.

Photo: Rembrandt van Rijn, The Return of the Prodigal Son, c.1661–1669. 262 cm × 205 cm. Hermitage Museum, Saint Petersburg

காணாமல் போன மகனின் உவமையை சற்று மறுவாசிப்புக்கு உட்படுத்தினால், கடவுளின் பெண்மையின் இயல்புகள் நம்மால் நன்று விளங்கிட இயலும். அதற்காக நாம் அவ்வுமைக்குள் ஒரு கதாபாத்திரத்தை இடைச்சொருகல் செய்தாக வேணடும். இடைச்சொருகல் செய்யப்படும் கதாபாத்திரம் தாயின் கதாபாத்திரம். நிகழ்வுகள் இப்படியாக கட்டவிழ்கிறது. நாம் அக்கதையை மறுவாசிப்புக்கு உட்படுத்தலாம்.

அப்பாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, இளைய மகன் தனக்குரிய சொத்துக்களைப் பிரித்து வாங்குகிறான். அதை வாங்கிக் கொண்டு புறப்பட தயாராகிறான். இதையெல்லாம் அவ்வீட்டின் தாய் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் இதயமானது நிலைகொள்ளவில்லை. சஞ்சலமடைகிறது, பெரும் வேதனைக்கு உட்படுகிறாள். உடைந்து போன உள்ளத்துடன் அவள் மகனைப் பார்த்துக் கூறுகிறாள், என் அன்பு மகனே, உனக்காக இவ்வீட்டின் வாசல் எப்போதும் திறந்தே கிடக்கும். நீ விரும்பும் போது வீட்டுக்குத் திரும்பலாம். உனக்காக என்னுடைய இதயமானது ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும். நீ செல்லும் இடமெல்லாம் எனது செபங்களும் ஆசிகளும் உன்னோடு தங்கியிருக்கும் இவ்வாறாக அவள் வாழ்த்தி அனுப்புகிறாள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு நிற்கிறான் மூத்த மகன். அவனால் தாயின் இச்செயலைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் தாயைக் கண்டிக்கும் குரலுடன் இவ்வாறு பேசுகிறான். ‘சொற்பேச்சுக் கேட்காத, நெறிகெட்ட இவனை தந்தை ஒருபோதும் ஏற்க மாட்டார்என அப்பாவின் மீது ஏதோ நம்பிக்கைக் கொண்டவனாகக் கூறுகிறான். இதைக் மனவருத்தத்தோடு கேட்டுக் கொண்டிருக்கும் தாய் ஆனவர், மூத்த மகனை பார்த்து கனிவுடன் இவ்வாறு பேசுகிறார், “மகனே நீ எப்போதும் இவ்வீட்டின் மகன். நீ மிகுந்த நம்பிக்கை உடையவன். பொறுப்பான மகன். எனதருமை மகனே, உன்னுடைய இதயத்தை கடினமாக்கிக் கொள்ளாதே. உனது தம்பி தொலைந்து போயிருக்கிறான். அவன் நம்முடயை வீட்டிற்கு திரும்பி வர வேண்டும். நாம் ஒரே குடும்பமாக முன்போல் வாழ வேண்டும். அவனை மன்னித்து விடு, அவனை அன்பு செய், அவன் வருகைக்காக காத்திரு.” அப்பா ஒரு ஓராமாக நின்றவாறு நெகிழ்ச்சி மிக்க இந்நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். மூத்த மகனுடன் நடந்த உரையாடலின் முடிவில், அத்தாய் அத்தந்தையை நோக்குகிறார். இருவருடைய இதய உணர்வுகளும் பரிமாறப் படுகின்றன. இளைய மகனுக்கான ஏக்கம் அவர்களிடையே அழுத்தமாக பரிமாறப்பபடுகிறது. இருவரும் கலங்குகின்றனர். மகன் வருவான் என்னும் எதிர்நோக்குடன் தங்கள் வாழ்க்கையை நகர்த்த ஆரம்பிக்கிறார்கள்.

அப்பாவின் முகத்தில் முந்தையதைப் போன்ற மலர்ச்சி இல்லாமல் இருப்பதை தாய் அன்றாடம் கவனித்து வந்தாள். ஆண்டுகள் பல கடந்தன. இளைய மகன் திரும்புகிறான். மகனின் வருகையால் அப்பாவின் முகமானது மிகவும் மலர்ச்சி அடைந்திருப்பதை அத்தாய் நீண்ட நாட்களுக்குப் பின்னர் பார்க்கிறாள். குலைந்த குடும்பம் மீண்டும் உருவாக்கப்படுகிறது. குடும்பத்தில் குதுகூலம் கூடுகிறது. அத்தாயின் வேண்டுதல்கள் அனைத்தும் பலன் அளித்தது என அவள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறாள். இளைய மகனுக்கும் அப்பாவுக்கும் இடையே நடந்த உறவு பரிமாற்றங்கள், சிந்தப்பட்ட ஆனந்தக் கண்ணீர் அனைத்தும் அத்தாயை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது.

விருந்துகளும் கொண்டாட்டங்களும் முடிகின்றன. மூத்த மகனால் இவற்றைச் செரித்துக் கொள்ள முடியவில்லை. அவனுக்குள் நெருடல் இருந்து கொண்டே இருக்கிறது. மாலையில் அவன் சமையலறைக்குச் செல்கிறான். அம்மா அங்கே சமைத்துக் கொண்டிருக்கிறாள். அவன் தாயிடம் முணுமுணுக்க ஆரம்பிக்கிறான். “இங்கே என்ன நடக்கிறது. எல்லாருக்கும் பைத்தியம் பிடித்து விட்டதா. அப்பாவுக்கு புத்தி பேதலித்து விட்டதா. ஏதோ தீய ஆவி அவரை பிடித்தது போல இருக்கிறது. தன்னுடைய சொத்துக்களை அழித்துவிட்டு வந்த மகனை கட்டிப்பிடிக்கிறார், விருந்து கொண்டாடுகிறார். இங்கே என்ன நடக்கிறது எனப் புலம்பித் தள்ளுகிறான். அனைத்தையும் கனிவுடன் கேட்டுக் கொண்டிருக்கும் தாய், “மகனே நான் உன்னை அறிவேன். நீ வீட்டிற்காக எவ்வளவு நம்பிக்கையுடன் செயல்படுகிறாய் என்பதையும் நான் அறிவேன். தம்பியைப் பற்றி என்ன நினைக்கிறாயோ, அவற்றையெல்லாம் அவனிடம்  சென்று சொல். ஆனால் அதை அன்புடனும் பரிவுடனும் சொல். தீர்ப்பிடும் எண்ணத்துடன் சொல்லாதே. தீர்பிட்டால் அவனை உன்னால் அன்பு செய்யவும் முடியாது, அவனை புரிந்து கொள்ளவும் முடியாது எனக் கனிவாக கூறி அனுப்புகிறாள்.

அன்பானவர்களே, காணாமல் போன மகனின் உவமையில் தாயின் கதாபாத்திரத்தை புகுத்திய போது கதை வேறு விதமாக மாறுகிறது. ஆனால் இயேசு கூறிய உவமையில் தாயின் உருவகமானது வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருக்கிறது. காரணம், அங்கே தாயின் கதாபாத்திரத்தை அக்குடும்பத்தின் தந்தை அவர்களே கையாளுகிறார். மேற்கூறிய மறுவாசிப்பில் வரும் தாயின் அனைத்து இயல்புகளையும் வெளிப்படுத்துபவராகத் தான் தந்தை இருந்தார். ஆகையால் தான் ரெம்ராண்ட் என்னும் கலைஞர், தந்தையின் கரங்களுள் ஒன்றை தாயின் கரமாக வரைந்து வைத்தார்.

தந்தையானவர் கொண்டிருக்கும் தாயின் குணங்களை இணைத்து, அதை கதாபாத்திரமாக உருவகப்படுத்தி, உவமையை மறுவாசிப்பு உட்படுத்தும் போது, அதில் தந்தைக் கடவுளின் பெண்மையின் முகமானது பிரகாசித்து சுடர் விடுகிறது. ஆக விண்ணகத் தந்தையானவர், தாயின் அனைத்துக் குணங்களையும் உடையவராய் இருக்கிறார் என்பதை நாம் ஏற்றாக வேண்டும். இந்தத் தந்தையவர் உலகில் உருவம் பெற்று தாயாக மாறியிருந்தார் என்றால் எப்படி இருப்பார் என்பதை அன்னை மரியாள் வழியாக கடவுள் வெளிப்படுத்தியிருக்கிறார். தந்தைக்கடவுளின் தாய்மையின் உணர்வுகளை, பெண்மையின் அழுத்தமான அன்பின் வெளிப்பாடுகளைத் தாய் மரியா வெளிப்படுத்துகிறாள். இந்த உணர்வை தொடக்ககால கிறிஸ்தவர்கள் ஏற்றிருந்தார்கள். அவர்களுடைய வாழ்வின் பகுதியாக மரியா மாறியிருந்தாள். சிலுவையின் அடியில் வைத்து, இதோ உன் தாய் என யோவானிடம் இயேசு கூறியது தொடங்கி, அவள் திருச்சபை மாந்தர் அனைவரின் அன்னையாக மாறியது மட்டுமல்லாமல், தந்தைக் கடவுளின் இரக்கமிக்க, மென்மையான அன்பை அவள் பிரதிபலிக்கத் தொடங்கினாள். இயேசு விண்ணேற்றம் அடைந்த பின்னர், உடைந்து போய், அஞ்சி வாழ்ந்த திருத்தூதர்களை திரட்டி அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து, செபத்தில் ஈடுபட வைத்து, தூய ஆவியானவரின் அருட்பொழிவுக்காக தயார் செய்கிறார். இவ்வாறாக, திருத்தூதர்களுடன் நெருக்கமாக இருந்த தாய், அரவணைக்கும் தாய், திருச்சபை வரலாற்றின் பகுதியாக மாறுகிறாள். இயேசு சிலுவையில் வைத்துக் கூறியவை வெற்று வார்த்தைகளாக நின்றுவிடாமல் அது திருச்சபை வரலாற்றில் இடம் பெற ஆரம்பித்தது. தொடக்க நூற்றாண்டுகளில், அதாவது, முதல் நூற்றாண்டுகளில், திருச்சபை அத்தாயோடு கொண்டிருந்த அன்பின் பிணைப்பானது, அவளை கடவுளின் தாய் எனும் விசுவாச உண்மையின் பிரகடனத்திற்கு வழிகோலியது. 431 ஆம் ஆண்டில் இன்றைய துருக்கி நாட்டில் எபேசில் வைத்து நடந்த பேரவையின் போது, மரியாள் கடவுளின் தாய் (Theotokos) என அறிவிக்கப்பட்டாள். மனிதராகப் பிறந்த இயேசு ஒரே வேளையில் கடவுளாகவும் மனிதராகவும் இருக்கிறார் என்பதை ஏற்றத் திருச்சங்கம், மரியா கடவுளாகவும் மனிதராகவும் பிறந்த இயேசுவின் தாய் எனப் பிரகடனம் செய்து, அவளை தேவத்தாய் அல்லது இறைவனின் தாய் என அழைத்தது. அவள் கடவுள் அல்ல, மூவொரு ஆட்களில் ஒருவரும் அல்ல, ஆனால், கடவுளின் மகனுக்குப் பிறப்புக் கொடுத்து, கடவுளின் தாயாகும் பேறுபெற்றவளாக மாறுகிறாள்.

இப்படியாக, தந்தைக் கடவுளின் தாய்மையின் அல்லது பெண்மையின் உருவமாக தாய் மரியாள் மாறினாள். இன்று ஏராளமான மக்கள், இத்தாயிடம் செபங்களை ஏறெடுக்கிறார்கள், தங்கள் கண்ணீரின் கதைகளைக் கூறுகிறார்கள், வேதனைகளைப் பகிர்ந்து கொள்கிறாரகள், தேவையானவற்றைக் கேட்கிறார்கள். இயேசுவிடம் நேரடியாக கேட்பதை விடவும் தாய் மரியாவிடம் கேட்பது எளிதாக மக்கள் கருதுகிறார்கள். கத்தோலிக்கர்கள் என்றால் உடனே, அத்தோடு இணைந்து மாதாவின் உருவமும் சேர்ந்து வந்து விடுகிறது. குறிப்பாக தமிழகத்தில், கத்தோலிக்கத் தேவாலங்கள் எல்லாம் பெரும்பாலும் மாதாக் கோயில் என்றே அறியப்படுகின்றன. இவ்வாறாக கத்தோலிக்க விசுவாசிகளுக்கு மிகவும் நெருக்கமானவராகி மாறி விட்டார் தாய் மரியா. அவரிடம் ஏறெடுக்கப்படும் வேண்டுதல்கள் அனைத்துக்கும் உடனடியாக பதில் கிடைக்கிறது என்பது பொதுவான விசுவாசமாக உள்ளது. மாலை வேளைகளில் கத்தோலிக்க குடும்பங்களில் ஏறெடுக்கப்படும் குடும்ப செபங்கள் அனைத்தும் அன்னை மரியாவை மையப்படுத்தியே கூறப்படுகிறது. அவளோடு சேர்ந்து செபித்தல் மிகவும் எளிமையானது என்றும், விசுவாசத்தில் ஆழப்படவும் குடும்ப ஒற்றுமையைப் பேணிக் காக்கவும் அது உதவியாக இருக்கிறது என்பதும் பொதுவாக நம்முடைய விசுவாசமாக இருக்கிறது. அன்னை மரியாவிடம் ஏறெடுக்கும் வேண்டுதல்கள் அனைத்தும் கிறிஸ்துவை மையப்படுத்தியது என்பதை நாம் அறியாதவர்கள் அல்ல. அவளுடைய உதரத்தில் தோன்றிய இயேசுவால் தான் அவள் இன்று இறைவனின் அன்னையாக வலம் வருகிறாள். சிலர் கத்தோலிக்கர்களைப் பார்த்து குறை கூறுவதுண்டு. நீங்கள் ஏன், மாதாவிடம் செபிக்கிறார்கள், இயேசுவிடம் செபிக்கலாமே என்று. திருத்தந்தை புனித ஜாண் பால் அவர்கள் அற்புதமான ஒரு சிந்தனையைத் தருகிறார். மனிதர்கள் தான் யாரிடம் செபித்தால் வேண்டுதல் கேட்கப்படும் என்று தங்களுக்கு வாய்த்திருக்கும் சிறு புத்தியை பயன்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். மனிதர்களுக்கிடையே தான் போட்டிப் பொறாமைகள் நிலவுகின்றன. இயேசுவுக்கும் தாய் மரியாவுக்கும் இடையே இத்தகையப் போட்டிப் பொறாமைகள் எதுவும் இல்லை. அன்னை மரியாவிடம் நாம் வேண்டுதல் ஏறெடுக்கும் போது, அதைப் பார்த்து பொறாமைப் படுபவர் அல்லர், இயேசு.  ஐயோ மக்கள் யாரும் என்னிடம் யாரும் வரவில்லையே, எனது தாயிடம் அல்லவா செல்கிறார்கள்என்று கவலைப்படுவதில்லை. தாயிடம் கேட்பவை அனைத்தும் தன்னிடம் கேட்பவையே என்பதை இயேசு அறிவார். தனது தாயிடம் கண்ணீர் விட்டு செபிக்கின்ற மக்களுக்கு, அவர் பதில் அளிக்காமலா இருக்கப் போகிறார்? ஆகையால் நீங்கள் தைரியமாக தாய் மரியாவிடம் செபங்களை ஏறெடுங்கள் எனத் திருத்தந்தை அழகாக விளக்கம் தருகிறார். ஆகையால், எவ்வித சந்தேகங்களுமின்றி செபங்களை ஏறெடுக்கலாம். தாயிடம் கேட்பவை எல்லாம் தனயனிடம் நேரிடியாகச் சென்று சேர்கிறது என்பதை திண்ணமாக நம்புவோம்.

வேறு ஒரு முக்கியமான சிந்தனையை நாம் கவனத்தில் கொள்வது நல்லது. இயேசு தாய் மரியாவின் வயற்றில் கருவாகி, குழந்தையாக பிறந்தார் என்பதை  விசுவாசம் நமக்கு அழுத்தமாக கற்பிக்கிறது. அதாவது, நாம் எல்லாரும் எப்படிப் பிறந்திருக்கிறோமோ அதைப் போன்று தாயின் கருவில்  சாதாரணமாக தாய் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதைப் போன்றே, அவளும் இயேசுவைப் பெற்றெடுத்தாள். இதில் பெண்ணியத்தின் பெரும் சிந்தனைகள் அடங்கி இருக்கின்றன. அவை இன்றைய சமூக வாழ்விற்கு அவசியமாக இருக்கிறது. பெண்களை தீட்டு என்றும், அவர்களின் உடலில் நடக்கும் சில இயற்கையான நிகழ்வுகளை தீட்டு என்றும் கற்பித்து அவர்களைப் ஒதுக்கும் போக்கு, மரியாவை இயேசுவின் தாயாக அங்கீகரிப்பவர்களால் ஏற்க முடியாத என்பதே உண்மை. இயேசு கடவுளின் மகன். அவர் உருவாகிய, கருவறை புனிமாக உள்ளது. அதில் நடக்கும் இயற்கையான அனைத்தும் புனிதமானவை. அதற்குள் தீட்டுகள் எதுவும் இல்லை. இது பெண்களை சரிசமமாக பாவிப்பதற்கும் அவர்களை முழுமையாக ஏற்பதற்கும் அவசியமாக இருக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் பாலியலோடு தொடர்புடயை இயற்கை வெளியேற்றங்களை பிரித்துப் பார்த்து ஒன்றை தீட்டென தீர்ப்பிடும சமூகப் போக்கைப் பற்றி தில்லியைச் சேர்ந்த சுபம்ஸ்ரீ என்னும் இளம் கவிஞர்  விடுதியின் துப்புரவுப் பணியாளர் சேனிடரி நேப்கினை அப்புறப்படுத்த மறுத்துவிட்டார் என்னும் கவிதை வழியாக எழுதியிருந்தார். 

காலச்சுவடு இதழில் 2021  ஆகஸ்ட்  மாத இதழில் வெளிவந்த கவிதை அப்படியேத் தரப்படுகிறது.

இதுவொன்றும் புதிதல்ல
நீண்ட பாரம்பரியம் கொண்டது இது
மாதவிடாய்ச் சுழற்சியை அசூயையாகப் பார்க்கும்
லட்சுமணரேகைக்குள்தான்
அடைபட்டுக் கிடக்கிறது ஜனத்தொகையில் பாதி
மர்மமான சேனிடரி நாப்கின் விளம்பரங்கள்
அடிக்கடி
எங்களது நடவடிக்கைகளை வினோதமாக மாற்றுகின்றன.

அபத்தம் நிறைந்த வெட்கத்துடனான புன்னகையுடன்
வாங்கி விற்கப்படுகின்றன அவை
உபயோகித்த பிறகோ
உலகில் மிக வெறுக்கத்தகுந்தவையாய் மாறிவிடுகின்றன
சானிடரி நாப்கின்கள் மட்டுமல்ல
அவற்றுக்குப் பதிலாக உபயோகிக்கப்படும்
பழந்துணிகளும்
சேலை முந்தானைகளும்
துப்பட்டாவின் கிழிசல்களும்தான்.

சாலையில் எங்கேனும் அவை தென்படும்போது
இளைஞர்கள் நமுட்டுச்சிரிப்பு சிரிக்கிறார்கள்
பெண்கள் கூச்சத்துடன் கடக்கிறார்கள்

விலக்கப்பட்ட இந்த நம் தோழிகள்
வீட்டிலுள்ள குப்பைத்தொட்டியளவுக்குக்கூட
யோகம் அற்றவர்கள்
அனைவரின் பார்வையிலிருந்தும் விலகித்
தொலைவில் இருக்க சபிக்கப்பட்டவர்கள்

எப்போதேனும் எதிர்ப்பட நேர்ந்துவிட்டால்
மற்றவர் பார்வையில் தெறிக்கும் வெறுப்பை
அளக்க இதுவரையிலும் கருவி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை

கர்ப்பப்பையில் சினைமுட்டையொன்றை
வீணடித்துவிட்டு
ஒன்றும்பேசாமல் உள்ளுக்குள்வைத்துக்கொண்டதுதான்
இவர்களுடைய குற்றமாக இருக்கக்கூடும்.

அல்லது
விந்தணுவைப் போற்றிப் பாடியதுபோல்
மாதவிலக்கைக் குறித்து
ஸ்லோகங்கள் எதையும்
முன்னோர்கள் எழுதாமல் போனதாகவும் இருக்கலாம்.

எனக்குத் தெரியும்
மாதவிலக்குச் சுழற்சியில் அவஸ்தைப்படும் பெண்ணைப்போன்று
இந்தக் கவிதையும் மிகவும் பலவீனமானதென்று
ஆனால் என்ன செய்ய?

என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை
விந்துபட்டு நனைந்திருக்கும் உள்ளாடைகள்
துணி அலமாரியில் இடம் பிடிக்கின்றன.
துவைத்த பிறகு அவை தூய்மையடைந்து விடுகின்றன.

ஆனால் வலியுடனும் வேதனையுடனும்
யோனியிலிருந்து வெளியேறும்
குருதியில் நனைந்த துணிகள் மட்டும்
சொல்லக் கூசும் ஏதோவொரு மூலையில் ஏன்
தூக்கி எறியப்படுகின்றன?

நான் தங்கியுள்ள விடுதியின்
துப்புரவுப் பணியாளர்
சேனிடரி நாப்கின்களை அப்புறப்படுத்த மறுத்துவிட்டார்

சிறிதும் வெளியில் தெரியாதபடிச்
செய்தித்தாட்களில்
அவற்றை நன்றாகச் சுற்றி வெளியில் எறிவதுதான்
சுகாதாரமான பழக்கம் என்று விவாதம் நடக்கிறது

குப்பைத்தொட்டியில் போட்டு அவற்றை
நல்லமுறையில் அப்புறப்படுத்த வேண்டும்
இங்கும் அங்குமாய் அவற்றை
அப்படியே போட்டுவிடக் கூடாது.

ஏனென்று தெரியவில்லை
அந்தத் துப்புரவுப் பணியாளர் என்ன காரணத்தினால் மறுக்கிறார்
என்பதை என் காதால் கேட்க முடியவில்லை

என் காதுகளில் ரீங்கரிக்கிறது
விந்தினைப் போற்றித் துதிக்கும் ஸ்லோகம்.

பெண்களின், குறிப்பாக படிந்த அறிவார்ந்த சமூகத்தைச் சார்ந்த இளம்பெண்ணின் உணர்வுகளை இக்கவிதை தத்ரூபமாக வெளிக்கொணர்கிறது. சமூகத்தின் முகத்திரை கிழிக்கும் விதத்தில் இது அமைந்துள்ளது.

நாம் தாய் மரியாவை இறைவனின் தாயென வணங்குகிறோம், அவளை நோக்கி புனிதமான வாழ்த்துப் பாடல்களை ஏறெடுக்கிறோம். அப்படியானால் அவளின் இயல்புகளையும் இயற்கை குணங்களையும் பெற்ற பெண்கள் அனைவரும் போற்றப்பட வேண்டும். இயற்கையாக அவர்கள் உடலில் நடக்கும் அனைத்தையும் கடவுளின் திட்டத்தின் பகுதியாக ஏற்றாக வேண்டும். அவர்களின் இயற்கை செயல்பாடுகளை, நாம் தீட்டானது என்றால் புனிதம் என்பதை ஆண்களும் சொந்தக் கொண்டாட முடியாது. தாய்மை குணம் படைத்த பெண்களின் இயல்புகளை தன்னகத்தேக் கொண்ட கடவுளையும் நாம் இழித்துரைக்கிறோம், தீட்டானது என அவரையும் தூரத்தள்ளுகிறோம் என அர்த்தம். ஆகையால், ஆண்களும் பெண்களும் சரிசமமாக தூய்மையான இயற்கை செயல்பாடுகளைக் கொண்டவர்கள் என்பதையும், அவைகளுள் கடவுளின் இயல்புகள் அடங்கியிருக்கின்றன என்றும் ஏற்றாக வேண்டும்.

இன்றும் சமூகமானது பெண்களை துன்புறுத்திக் கொண்டும் அதை நியாயப்படுத்திக் கொண்டும் தான் இருக்கிறது. இவை அனைத்தும் கடவுளின் பெண்மையின் முகத்தை சிதைத்துக்கொண்டு தான் இருக்கின்றன. 

சமீபத்தில் தேசத்தை உலுக்கிய பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்வுகளைப் பற்றி, தி இந்து ஆங்கில இதழானது ஆகஸ்ட் 30 அன்று தலையங்கம் எழுதியது.

1.   ஆகஸ்ட் 24, 2021 - MBA மாணவி ஒருவர் மைசூரு சாமுண்டி மலையில் வைத்து கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டார்.

2.   ஆகஸ்ட மாதத் தொடக்கத்தில் டெல்லியில் பெண் குழந்தை ஒன்று பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு எரிக்கப்பட்டது.

3.   ஜூலை மாதத்தில் இரு பெண் குழந்தைகள் கோவாவில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டன.

4.   மேலும் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகமானது இவ்வாறு கணக்கு வைத்திருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு பதினாறு நிமிடத்திற்கும் ஒரு பெண் வன்புணர்வு செய்யப்படுகிறார்.

இதில் கொடுமை என்னவென்றால், இவை அனைத்தும் பெண்ணின் தவறான நடத்தையாலும் அவள் சுதந்திரமாக சுற்றித் திரிவதாலும் நடக்கிறது என்று கற்பிதம் கூறுவது. சமூகம் எப்படித் துருப்பிடித்த சிந்தனையுடன் இயங்குகிறது எனப் பாருங்கள். பெண் சுதந்திரமாக திரிந்தால், அவளை ஆண் கொடுமைப்படுத்தலாம், அவள் அணிந்திருக்கும் ஆடைகள் சில ஆண்களுக்குப் பிடிக்காமல் போயிருந்தால் அவளை வன்புணர்வு செய்து கொன்று எரித்து விடலாம். அவர்கள் இரவில் நடந்தால், அதை சாக்காக வைத்து அவர்களின் கனவுகளை சிதைக்கலாம். எத்தகைய கொடூரமான சிந்தனைகளை சமூகம் சுமந்து நடக்கிறது என்று பாருங்கள். கார்ல் யுங் என்னும் உளவியலாளர் இவ்வாறு சொல்கிறார்; “சிந்திப்பது கடினமான செயல், ஆகையால் பலரும் தீர்ப்படுகிறார்கள்”. இன்று சமூகம், காலங்காலமாக ஆண் மேலாதிக்கத்தின் பகுதியாகக் கொண்டிருக்கும் எண்ணங்களின் அடிப்படையில் தீர்ப்பிட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களும் ஆண்களைப் போன்ற உணர்வுகளைக் கொண்டவர்கள், அவர்களுக்கும் கனவுகள் உண்டு, சிறகடித்து உயர பல வண்ணங்களைக் கொண்ட சிறகுகளைக் கொண்டிருக்கிறார்கள். இவைகள் அனைத்தும் கடவுள் கொடுத்த வரம். ஆதாமும் ஏவாளும் இன்பவனத்தில் கடவுளின் கரம் கோர்த்து இணைந்து நடந்தார்கள் என்று தான் விவிலியம் கூறுகிறது. ஆதாம், கடவுளின் கரங்கள் பிடித்து நடக்கையில், ஏவாள் மரத்தின் பின்னால் நின்றவாறு, அதைக் கண்டு பெருமிதம் கொண்டாள் எனக் கூறப்படவில்லை. கடவுளோடு அவர்கள் இருவரும் சமமாக இன்ப வனத்தில் நடந்தார்கள்.

தாய் மரியா சிறகுகளுடன் பறந்தவள், நற்செய்தியை ஏற்றவள், யூதேயா பிரதேசங்களுக்கு எலிசபெத்தைத் தேடி தனியாக புறப்பட்டவள். யோசேப்பு இறந்த பின்னர் வீட்டுக்குள் முடங்கிப் போனவள் அல்லள் அவள். இயேசுவைப் பின் தொடர்ந்தவள். சிலுவையின் பாதையில் சென்றவள். வீட்டின் அறைக்குள் தன் இயலாமையை நினைத்து, விதவையாகிப் போனோமோ என கண்ணீர் விட்டு அழுதவள் அல்லள்.

பெண்மையை அர்த்தமிக்கதாகப் போற்றுவோம். அப்போது அன்னை மரியாள் மாட்சி அடைவாள். மாண்புடன் அவளிடம் வேண்டுதல்களை ஏறெடுக்க முடியும்.

அனைவருக்கும் ஒரு முறை கூட தாய் மரியாவின் பிறந்த நாள் வாழ்த்துக்கள். அன்னை மரியிடம் பக்தி கொள்வோம், பெண் சுதந்திரம் போற்றுவோம். கடவுளின் தாய்மை அதன் வழியாக மாட்சிப் படட்டும்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்