மொரோக்கோ நாட்டு ஆணும் ருமேனியா நாட்டுப் பெண்ணும் சில அன்புகளும் | அ. சந்தோஷ்

மொரோக்கோ நாட்டைச் சார்ந்த ஆண் ஒருவர், ருமேனியா நாட்டுப் பெண்மணியின் கல்லறையை அலங்கரித்துக் கொண்டிருந்தார். இவர்களுக்குள் காதலா? தெரியவில்லை. காதல் என்றோ, ஒருவிதமான ஈர்ப்பு என்றோ, அன்பு என்றோ கூறலாம். இருவரும் வெவ்வேறு நாட்டவர்கள், வெவ்வேறு மொழி பேசுபவர்கள், வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதே உண்மை. மேலும், இருவரும் இத்தாலிய நாட்டில் அகதிகள். அகதிகள் என்றால் வீதியோர அகதிகள். வீதியோரங்களில் படுத்துக் கிடந்து கிடைப்பதை உண்பவர்கள். இருவரும் சேர்ந்தொன்றும் வாழவில்லை.



நான் தங்கியிருந்த ஆலயத்தின் பங்குத்தந்தை அவர்களின் பெயர் அருட்தந்தை டர்ச்சீசோ. அருமையான, மனித நேயமிக்க, பிறரின் வலிகளை எளிதில் புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவி செய்யும் மாமனிதர். ஏழைகள் மீதும், அகதிகள் மீதும் கழிவிரக்கம் அல்ல, உண்மையான அன்பு உடையவர்.

இயேசு கிறிஸ்து விருந்துகளை விரும்பினார். அதனால் அவரை பலரும் பெருந்தீனிக்காரன் என்று கூட  இழிவாகப் பேசினர். இயேசுவின் விருந்துகளுக்கென தனித்தன்மை உண்டு. அதில் மனித மாண்பு தழைத்தது. அப்படிப்பட்ட விருந்துகளைத் தான் அவர் விரும்பினார். அன்றைய சமூகம் பாவிகள், ஏழைகள் என ஒதுக்கியவர்கள் எல்லாம் இயேசுவின் பந்தியில் இடம் பிடித்தனர். விருந்து என்பது பணக்காரர்கள் ஒன்று கூடி உண்பது அல்ல. மாறாக அனைவரும் சமமாக சேர்ந்துண்ணுதல் என்பதை இயேசு வாழ்ந்து காட்டினார். 

இதை நன்கு அறிந்திருந்த புனித பவுல், கொரிந்து நகரத்தில் வாழ்ந்து வந்த விசுவாசிகளை வசைபாடுவதை காண இயலும். அனைவரும் ஒன்றாக கூடி இயேசுவிடம் இறைவேண்டுதல் புரிய வந்தனர். ஆனால் ஏழைகள் அங்கே ஓரங்கட்டப்பட்டனர். இதிலும் மோசமாக என்ன நடந்தது என்றால், அங்கே ஒன்றாக கூடி வந்த பணக்காரர்கள், ஏழைகள் வருவதற்கு முன்னால் தாங்கள் கொண்டு வந்த உணவைப் பகிர்ந்து உண்டு வயிறு புடைக்க செபத்தில் பங்கேற்றனர். ஆனால் ஏழைகளோ காய்ந்த வயிறுடன் செபங்களில் பங்கேற்றனர். இதைக் குறித்து அறிய வரும் புனித பவுல், " நீங்கள் உண்ணும் நேரத்தில், ஒவ்வொருவரும் தாம் கொண்டுவந்த உணவை மற்றவர்களுக்கு முந்தியே உண்டுவிடுகிறீர்கள். இதனால் சிலர் பசியாய் இருக்க, வேறு சிலர் குடிவெறியில் இருக்கிறார்கள். உண்பதற்கும் குடிப்பதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? அல்லது கடவுளின் திருச்சபையை இழிவுப்படுத்தி, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? என்ன சொல்வது? உங்களைப் பாராட்டுவதா? இதில் உங்களைப் பாராட்டமாட்டேன்" (1கொரி 11:20).

அருட்தந்தை டர்ச்சீசோ அவர்களும், இந்த விருந்துகளால் என் இதயத்தில் தங்கியவர். மதிய உணவுக்கு, வீதியோரத்தில் தங்கியோர், மேஜையில் இடம் பிடித்தனர். அவர்கள் ஆடைகளிலிருந்து வரும் துர்நாற்றம் உணவு உண்பதிலிருந்து நம்மைத் தடுக்கும். ஆனால் அவர் என்றும் போல் உணவு கொடுப்பார். அவ்விருந்தில் பங்கேற்பதற்காக ருமேனியாப் பெண் வந்திருக்கிறார். அத்தோடு அந்த மொரோக்கா நாட்டு ஆண் அடிக்கடி வருவதுண்டு. இவர்கள் சில பொருட்களை பகிர்ந்து கொள்வதை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் சேர்ந்து நடந்ததை நான் பார்த்ததில்லை. ஆனால் அவர்கள் ஒருவரை ஒருவர் அன்பு செய்திருக்கிறார்கள். 

ருமேனியா நாட்டுப் பெண் இறந்து அரசு நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டாள். அந்தக் கல்லறையை அழகுப் படுத்தும் வேலையில் மொரோக்கா நாட்டு ஆண் இப்போது ஈடுபட்டிருக்கிறார். தாஜ்மகால் கட்டுகிறார் போல. அவருக்கு அன்றாடம் கிடைக்கும் பிச்சையின் மிச்சங்களைக் கொண்டு, அவர் உலகோர் பார்வையில் ஒரு பொருட்டே அல்லாத, ஆனால் அன்பின் ஆழத்தில், மிக அழகான சொர்கத்திற்கு நிகரான அழகு அரண்மனை ஒன்றை அமைத்துக் கொண்டிருந்தார்.

விசித்திரமான உலகில், அவர் மாமனிதர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்