"நீரில்லா பயிர் போன்றது தாயில்லா குழந்தை" | அ. சந்தோஷ்

கிறிஸ்மஸ் தினத்தை அர்த்தமிக்கதாக மாற்ற வேண்டும் என்னும் ஆசை என்னைத் தொற்றிக் கொண்டது. அதற்காக வாய்புடைக்க உண்பதோடு நிறுத்திவிடாமல் மனித நேயமிக்கச் செயலில் ஈடுபட வேண்டும் என்றும் ஆசை. அது ஒருவிதமான தோரணையாகக் கூட இருக்கலாம். நான் மனித நேயமிக்கவன் என்று காட்டிக் கொள்ளும் தோரணை, அல்லது நான் மனித நேயமிக்கச் செயலில் அன்றைய தினம் ஈடுபட்டேன் என்று சுய சமாதானம் அடைவதற்கான ஒருவிதமான நப்பாசை என்று கூட சொல்லலாம். மனித நேயத்திற்காக ஏராளமானவர்கள் காத்துக் கிடக்கிறார்கள். உலகில் உள்ள மனித நேயமெல்லாம் நான் சுமந்துக் கொண்டு அவர்களுக்குக் கொடுக்கிறேன் என்னும் ஒருவிதமான ஆணவ மனநிலை என்று கூட கூறலாம். இப்படிக் குழப்பம் நிறைந்ததான எனது அர்த்தமிக்க கிறிஸ்மஸ் கொண்டாட்டம் பெரிய ஒரு தாக்குதலுக்கு அன்றைய உள்ளானது. நீ செய்வதெல்லாம் மனித நேயமல்ல என்னும் தாக்கத்தை எனக்குள் ஆழமாக ஏற்படுத்திவிட்டன அச்சொற்கள். அச்சொற்கள் அம்மாவிடமிருந்து வந்தன. அம்மாவிற்கு இப்போது, எண்பது வயது இருக்கும். நிறைய வார்த்தைகளுக்குச் சொந்தக்காரி. எதைப்பற்றியும், யாரைப்பற்றியும் வாய் நிறைய வார்த்தையைக் கொண்டிருப்பவள். அது கடினமாக சில வேளைகளில் வரும், திட்டுகளாக வரும், பகடைச் சொற்களாக வரும், கோபமாக கொப்பளிக்கும், சுய கழிவிரக்கங்களாக வரும், அன்பாக வரும், ஆங்காரமாக வரும். உணர்வுகளின் கலவையில் வெளிப்படும் அச்சொற்களை கேட்போரை பாதிக்கும் என்பதில் ஐயமில்லை. பேசும் வார்த்தைகள் நன்மை பயக்கிறதா? வளர்ச்சிக்கு உதவுகிறதா? பிறரை புண்படுத்தாமல் இருக்கிறதா? போன்ற அளவைகள் அவ்வார்த்தைகள் பல வேளைகளிலும் கொண்டிருப்பதில்லை. அவை எதார்த்தமாக வரும், தடைகளின்றி விரும்பியது போல் பயணிக்கும் வெள்ளம் போல் வரும். ஆகையால் இலக்கியச் சுவைகள் அம்மாவின் நாவிலிருந்து ஆர்ப்பரித்துக் கொட்டிக் கொண்டிருக்கும். இலக்கிய ரசனை உடையவர்களால் அவை கொண்டிருக்கும் கூர்மைகளை தவிர்த்து ரசிக்க இயன்றால், அவளது இலக்கியத்திற்கு நிகர் ஏதுமில்லை.


Photo: pixabay.com

உலகிலுள்ள மாபெரும் மனிதநேயத் தியாகி என்னும் பெயரை நான் தயாரித்து நெற்றியில் பதித்து வைத்துக் கொண்டு என்னோடு தங்கியிருந்த பையனோடு வீட்டுக்குப் போனேன். கிறிஸ்மஸ் விருந்து தயாராகிக்கொண்டிருந்தது. அம்மாவிற்கு என்மீது கோபம் ஏதுமில்லை. பையன்மீது யதார்த்தமான கரிசனை கொப்பளித்துக் கொண்டு வந்திருக்க வேண்டும். அவற்றை தடுத்து நிறுத்தி மெழுகு பூசி, கேட்போர் மனம் புண்படா முறையில் வெளிப்படுத்த அவள் மெனக்கெடவில்லை. அப்படி வெளிப்படுத்தினால், இலக்கியத்தின் சுவையும் கெட்டுப் போகும் என்பதில் ஐயமேதுமில்லை. பையன் அம்மாவைப் பார்த்து நிறைய நாட்கள் ஆகிவிட்டன. அம்மா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறாள். ஆகையால், கிறிஸ்மஸ் நாளாக, அவனை அவளுக்குக் காட்டி, கேக் கொடுக்க வேண்டும் என்பது திட்டம். பையன் புத்தாடைகள் அணிந்திருந்தான். நல்ல மிதியடிகள், கைகடிகாரம், நன்றாக ஒதுக்கப்பட்ட தலைமுடி என அவன் தோற்றம் கம்பீரமாக இருந்தது. பார்ப்பவர்கள் அனைவரும் பையனை நான் வளர்த்தும் விதம் குறித்து மெச்சுவார்கள் என்றே தோன்றியது. அதில் கர்வம் கொள்ளவும், அப்பெருமையை சொந்தமாக்கவும் உள் மனம் தாகித்துக் கொண்டிருந்தது என்பதை உண்மை. போதாக்குறைக்கு, பையனின் தங்கை இல்லமொன்றில் தங்கி இருந்தாள். அவளையும் அழைத்துச் செல்வதாகத் திட்டம். அவர்களை கொண்டு செல்வதற்கென சிறப்பு வாகனம் ஏற்பாடு செய்து அதை நானே ஓட்டியும் சென்றேன். எல்லாத்திலும் எனக்கு கவுரவப்படுதவற்கெனவும், ஆணவம் கொள்வதற்கெனவும், மனித நேயமிக்கவன் எனக் காட்டிக் கொள்வதற்கெனவும், உள்ளத்திற்கு நிறைவு தரும் காரியத்தை செய்து திருப்தியடைவதற்கெனவும் நிறைய தந்திரபூர்வமான வலைகளை நான் வனைந்து கொண்டேன். ஆனால், அம்மாவின் சொற்கள் பேரிடியாய் என்னைத் தாக்கியது. மேட்டிமை, பணம், அழகு, சுத்தம், ஒழுக்கம் போன்றவை அனைத்தையும் நான் பையனுக்குக் கொடுத்துக் கொண்டிருப்பதால் நானே மேதாவி என்னும் எண்ணம் என்னை ஆட்கொண்டிருந்தது. அவற்றை எல்லாம் சுக்குநூறாக்கி, என்னை தரைகவ்வச் செய்தது அவள் மொழிகள். அவனின் தாயை விட நான் அவனை சிறப்பாகப் பார்த்துக் கொள்கிறேன் என்னும் தலைகால் புரியாத கர்வம் என்னை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்திருக்கலாம். அவ்வேளையில். அம்மாவின் வாய்களிலிருந்து பாராட்டுகள் ஏதும் வரவில்லை, பையனைப் பார்த்து அன்பு கொண்டவளாய், "நீரில்லா பயின் போன்றது தாயில்லா குழந்தை" என வார்ததைகளைக் கொட்டினாள். அவ்வார்த்தையின் தாக்கம் அன்று முழுவதும் என்னை ஆட்டிப்படைத்தது. தாயை பிரிந்து வாடும் மகனின் மனதை புரிந்துக் கொள்வது அவ்வளவு எளிதா என்றுத் தெரியவில்லை. அவனுடைய இழப்புகளும், அவனுடைய விசும்பல்களும் என்னால் நீக்க முடியுமா என்று தெரியவில்லை. அவனுடைய மனதை முழுதாகப் புரிந்து கொள்ளும் பக்குவம் எனக்கு வாய்க்க கடவுளை பிரார்த்திக்கிறேன்.


 

கருத்துரையிடுக

0 கருத்துகள்