“ஆண்டவர் உங்களோடு இருப்பாராக” என்று ஆலயத்தில் சாமியார் சொல்லும் போது நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள் என்று, நேர்முகம் நடத்திக் கொண்டிருந்தவரை நோக்கி, நேர்முகம் கொடுக்க வந்தவர் கேட்க, “சாமியாரு நல்லா இருந்தா அவரு கூட இருக்கட்டும்ணு சொல்லுவோம்” என்று கூறிவிட்டு ஹா... ஹா... ஹா... ஹா... ஹா... ஹா... ஹா.... ஹா... என்று சிரிக்க ஆரம்பித்தார். அவர் சிரித்து முடிக்க நீண்ட நேரம் ஆகிவிட்டது தெரியுமா? இதை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள் இதற்குள் சிரித்திருக்க வேண்டும். சிரித்திருந்தால் நீங்கள் சாதாரணமான மனிதர்கள் என்று கருதப்படுவீர்கள். சிரிக்கவில்லையென்றால், நீங்கள் வேண்டுமென்றே நாத்திகவாதியாக தன்னை நிரூபித்துக் கொண்டிருப்பவரின் பாதையின் குறுக்கே நிற்கிறீர்கள் என்று அர்த்தம். அவருக்கும் ஆசைகள் இல்லையா? நாத்திகவாதி என்பது எவ்வளவு பெரிய அந்தஸ்து தெரியுமா? காரணம் சிந்தனைவாதிகள் அனைவரும் நாத்திகவாதியாக இருக்க வேண்டும் என்பது உலகம் அறிந்த நியதியாக அவர் நம்பிக்கொண்டுருந்தார். பகுத்தறிவுவாதிகள் அனைவரும், டார்வினின் பரிணாமவளர்ச்சி என்னும் கருதுகோளை அப்படியேப் பின்பற்றுபவர்கள் என்பதை அவர் உறுதிப்பட நம்பினார். அவர் ஒரு பகுத்தறிவு வாதி, அவர் ஒரு இயற்கைவாதி, அவர் ஒரு மனிதநேயவாதி, அவர் ஒரு அறிவுவாதி, அவர் ஒரு சிந்தனைவாதி. இன்னொன்றை நான் சொல்ல மறந்தேன். அவர் ஒரு வலையொளிவாசியும் வாதியும் கூட. இவை ஒன்றும் வியாதிகள் அல்ல. இவை எல்லாம் மெத்தப்படித்த அறிவுஜீவியின் பண்புநலன்கள். அப்படியாக மாறுவதற்காக அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு எதிராக நிற்க நீங்கள் யார்? அவரின் சிந்தனை ஓட்டத்தோடு நீங்கள் சேர்ந்து பயணிக்கவில்லை என்று அர்த்தம். அவர் சமூகத்தின் மீது எவ்வளவு அக்கரை கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் அவரின் வாயிலிருந்து வரும் கருத்தமுதுகளின் வாயிலாக தெரிந்து கொள்ள முடியும். அவர் பேசும் விதம் கேட்டிருக்கிறீர்களா? அவர் போல் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் உலகில் யாரும் இல்லை என்பதை நீங்கள் ஏன் ஏற்கவில்லை? நீங்கள் இதுவரையிலும் சிரிக்கவில்லை என்றால் இப்போது சென்று சிரித்து விட்டு வாருங்கள். காரணம், அவ்விருவரும் அந்த ஜோக்கை அவ்வளவு ரசித்தார்கள் தெரியுமா? ஒருவேளை நான் அதை இன்னும் நகைச்சுவை கலந்து விவரித்திருந்தால் நீங்கள் சிரித்திருப்பீர்களோ? அது உண்மையில் கலப்படம் சேர்ப்பதற்கு சமம். அல்லது, உண்மையிலேயே காமெடியாக இருக்கும் ஒன்றை வார்த்தைகளால் நான் அலங்கோலப்படுத்தியவன் ஆகிவிடுவேன். அவர்கள் அதை அப்படி ரசித்திருந்தார்கள்.
அந்த வலையொளிவாசி அரும்பெரும் கருத்துக்களைக் கூறி சமூகத்தைச் சீர்திருத்தப் பாதையில் கொண்டு செல்வதற்காக எடுக்கும் முயற்சிகள் கொஞ்சநஞ்சமல்ல. அதற்கு பெரும் தடையாக இருப்பது அவருடைய பெயர். முதலாவாதாக அப்பெயர் கிறிஸ்தவப் பெயர், இரண்டாவதாக அது ஆங்கிலப் பெயர், மூன்றாவாதாக அது தமிழ் பெயரல்ல அதனால் அவர் தமிழின விரோதி என்று பலர் அவரின் முகத்தைப் பார்த்துச் சொல்லி விட்டார்கள். அவர் கிறிஸ்தவ மத அடையாளத்திலிருந்து எவ்வளவு விலகிப் பயணிக்கிறார் என்பதை வயார பல முறை கூறியிருக்கிறார். ஆனால் யாரும் நம்புவதில்லை. பெயர் பெரும் சுமையாக இருக்கிறது. தான் கிறிஸ்தவன் அல்ல, அம்மதத்தைப் பின்பற்றுவதில்லை என்பதை நிரூபிப்பதற்காக அவர் ஒரு காணொளியை பதிவேற்றம் செய்தால் அதை விட இழிதானச் செயல் இருக்காது. தன்னை முதன்மைப்படுத்துகிறார் என்னும் இழிச்சொல்லும் பழிச்சொல்லும் அவரை வந்து சேர்ந்து விடும். ஆகையால் அப்படி நடத்துவதில் அவர் மனசாட்சி குழப்பத்தை சந்தித்தது. அவர் அப்பழுக்கற்றவராக இருக்க வேண்டாமா? அவர் பொதுநலவாதியல்லவா? பொதுநலவாதி எப்படி தன்னுடைய நற்பெயரை காக்கும் பொருட்டு, அதற்காக ஒரு காணொளியை பதிவேற்றம் செய்வது எவ்வளவு கீழ்த்தரமான விஷயம். ஆனால் நாத்திகவாதியாக மாற வேண்டியது அவசியம் என்பதை அவர் உணர்ந்தவாறு இருந்தார். அப்போதுதான் அவருடைய பாதையில் இன்னொருவர் குறுக்கிட்டார். தான் தேடிக்கொண்டிருந்த நபர் என்பதை அவர் உணர்ந்தார். வேறொன்றை முன்நிறுத்தி தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதில் அவர் மனம் உறுதி கொண்டது. நீண்ட நாட்கள் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருந்த ஒரு விஷயத்துக்கு இப்போது விடியல் வரும் என்பதை அவர் நம்ப ஆரம்பித்தார். அவருக்கு தலைகால் புரியவில்லை. தன்னுடைய பெயரோடு ஒட்டிக்கொண்டிருக்கும் கிறிஸ்தவத்தின் எச்சங்கள் நாளைய தினம் துடைத்தெறியப்படும் என்பதை நினைத்தப்போது அவருக்கு நிலைகொள்ளவில்லை. அவர் அதற்காக தன்னை நன்றாக தயாரித்துக் கொண்டார். தன்னுடைய உள்நோக்கம் எதுவும் வெளியேத் தெரியக் கூடாது என்பதில் அவர் அதீத சிரத்தை எடுத்துக் கொண்டார். தான் நாளைய தினம் மேற்கொள்ளும் நேர்முகமானது, கிறிஸ்தவத்தில் இருக்கும் களைகளை மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டுக் காட்டும் மானுடச்சேவையாக இருக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். கிறிஸ்வதர்களும் மதவாதிகளே. அவர்கள், இயேசு என்னும் பெயரைப் பயன்படுத்தி வயிறு நிரப்பும் கூட்டங்கள் என்றும், வெளிநாட்டு வங்கிகளில் கோடி கோடியாக சேர்த்து வைக்கும் பேராசைக் கூட்டம் என்றும் நிரூபிக்க வேண்டும் என்பதுதான் தனது நோக்கமாக இருக்க வேண்டும் என்பதில் அவர் பயிற்சி மேற்கொள்ளலானார். அதில் அவர், ஆலயம் சென்று கடவுளைக் கும்பிடும் அப்பாவிகள் அனைவரும் ஏமாற்றப்படுகிறார்கள் என்னும் பொதுதரிசனத்தை கொடுத்தாக வேண்டும் என்பதில் அவர் முடிவுடன் இருந்தார். கிறிஸ்தவர்கள் எவருக்கும் சாதகமாகப் பேசிவிடக்கூடாது, அவர்களின் சேவை பெறுபவர்கள் அனைவரும் அப்பாவிகள் ஆகையால், அவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்னும் எத்தனிப்பு அவரிடம் இருந்து பெரும் ஆற்றலாக வெளியேறிக் கொண்டிருந்தது.
நேர்முகம் நடக்க நடக்க அவர் மனம் பெரிதும் குதூகுலிக்க ஆரம்பித்தது. தன்னிடமிருந்து கிறிஸ்தவத்தின் எச்சம் எல்லாம் முன்னாலிருப்பவரால் துடைக்கப்படுவதாக அவர் பெருமிதம் கொண்டு இருந்தார். பசுமாடு தான் ஈன்ற கன்றின் மேலிருக்கும் அழுக்குகளை எல்லாம் துடைத்தெடுப்பதுபோல, முன்னாலிருந்தவர், தனக்குள் ஒட்டியிருக்கும் ஆத்திகத்தின் அழுக்குகளை எல்லாம் நன்றாகத் துடைத்துக் கொண்டிருந்தார் என்பதை அவர் சுகித்துக் கொண்டிருந்தார். நேர்முகம் கொடுத்தவர், கிறிஸ்துவை கொச்சைப்படுத்தியப் போது இவர் பெருமிதத்தில் ஆழ்ந்தார். கிறிஸ்து ஒன்றும் பெரும் ஞானியல்ல என்ற போது, இவரின் பெருமிதம் இன்னும் கூடியது. நாத்திகவாதியாக முழு அவதாரம் அவர் எடுத்துக் கொண்டிருந்தார் என்பது அவருக்குள் பேரானந்தப் பேரொலியை எழுப்பிக் கொண்டிருந்தது. கிறிஸ்து அம்பேத்கர் செய்ததைப் போன்றொன்றும் சமூகத்திற்கு எவ்வித நன்மையும் செய்யவில்லை என்ற போது, இவர் நாத்திகத்தின் உச்சங்களை அடைவதை அறிந்தார். நாத்திகம் மட்டுமல்ல, மற்றவாதிகளாக அவர் மாறிக் கொண்டிருந்தார். பகுத்திறிவு வாதியாக, அறிவு வாதியாக, பொருண்முதன்மைவாதியாக, மார்க்ஸ்வாதியாக, லெனின்வாதியாக, எங்கெல்ஸ்வாதியாக, பெரியார்வாதியாக, திராவிடவாதியாக மாறிக் கொண்டிருந்தார். நாத்திகம் என்னும் ஒற்றைச் சொல், எவ்வளவு பேரை அவருக்குச் சொந்தமாகக் கொடுத்துக் கொண்டிருந்தது என்பதை பற்றி அவர் உணர்ந்த போது, உடம்பிலுள்ள மயிர்கள் எல்லாம் எழும்பி நின்று ஒரு நிமிடம் இவருக்கு சல்யூட் அடித்தன. இதுவரைக்கும் அடைந்திராத கவுரவத்தை அவரது உடலிலுள்ள மயிர்கள் எல்லாம் அடைந்து விட்டது என்றால் பாருங்கள். மதம் என்பது மனிதரை மயக்கும் போதை என்பது ஒருவேளை மார்க்ஸ் ஓரிரு இடங்களில் சொல்லி இருக்கலாம். அது மனிதர்களை அடிமைப்படுத்திக் கிடத்தியிருக்கிறது. பெரும் முதலாளிகளுக்கு அடிமை வேலை செய்து வாழ்ந்தால் சொர்க்கத்தில் மகிழ்ச்சி கிடைக்கும் என மக்களை அது ஏமாற்றி வைத்திருக்கிறது என்பதை மார்க்ஸ், தன் பொருள்முதன்மைவாதத்தை முன்வைக்கவும், சமூகவுடைமையை போதிக்கவும் கூறியிருப்பார். ஆனால், மனிதரை முழுக்க முழுக்க எப்படி ஏமாற்றுகிறது? என்று மாறிவிட்டது என்று அறிவுக் கேள்விகள் எதுவும் வாசகர்கள் கேட்கக் கூடாது. அது, நமது பொதுநல சிந்தனைவாதியின் பொதுநலம் பேணுதலுக்கு இழுக்கு சேர்த்துவிடும். நரபோஜிகளாக வாழ்ந்த மனிதர்களுக்கு தனது ஈராயிரம் ஆண்டைய போதனைகள் மற்றும் செயல்பாடுகள் வழியாக மனிதநேயத்தை அடிப்படியாகக் கொண்ட சட்டங்களைக் கொடுப்பதில் கிறிஸ்தவம் கொண்டிருக்கும் பங்கு எதுவும் இங்கே பேசாமல் இருக்க வேண்டும். அத்தகைய ஈராயிரம் ஆண்டைய தாக்கங்களால் உந்தப்பட்டவர்கள் எழுதிய எழுத்துகளின் மேலே நின்றவாறுதான் அம்பேத்கர் உரிமைகளைக் காக்கும் சட்டங்கழை எழுகினார் என்பதை ஏற்றுக் கொள்ளும் அறிவுசூன்யம் நாத்திகவாதியாக மாறிட கங்கணம் கட்டிக் கொண்டு நிற்பவரிடம் யார் கூறுவார். நான் எனக்கு முன்னால் கடந்து சென்ற பெரிய மனிதர்களின் தோள் மேல் ஏறி நின்று கொண்டு உலகத்தைப் பார்க்கிறேன் என்னும் ஞானத்தை புவியீர்ப்பு விசையை கண்டுப்பிடித்த ஐசக் நியூட்டன் கூறியதை வலையொளிவாசி ஏற்கும் நிலையில் தற்போது இல்லை. அப்படி ஏற்றால் மீண்டும் கிறிஸ்தவத்தின் எச்சங்கள் வந்து தன்னைத் தொற்றிக் கொள்ளும். அவர் அப்பழுக்கற்ற நாத்திகவாதியாக மாறிக் கொண்டிருக்க எத்தனித்துக் கொண்டிருக்கையில் பேரரறிஞர்கள் அனைவரும் ஞானசூன்யங்களாகத் தென்பட்டுக் கொண்டிருந்தனர். அம்பேத்கர் ஞானிகளின் தோள்மேல் ஏறிநின்றுக் கொண்டுதான் மனித உரிமைகளைக் காக்கும் சட்டங்களை எழுதினார் என்று கூறுதல் இப்போது அபத்தமானது. அது நடைமுறைக்கு ஒவ்வாத முட்டாள்தனம். தான் அப்பழுக்கற்ற நாத்திகவாதியாக மாறி, வலையொளி தளத்தன் தரத்தை உயர்த்தி தனக்கான பணத்தை ஈட்ட உதவாத முட்டாள்தனமாக மாறிவிடும். ஹா... ஹா... ஹா... இயேசுவை விட ஞானியாக அம்பேத்கர் இருந்தார் என்பதைக் கூறுவதில் என்னே சுகம் அவர்களுக்கு... அச்சூட்டில் அவர்கள் அடைகாத்து நிறைய குஞ்சுகளைப் பொரிக்கட்டும். மனிதர்களைப் பயன்படுப் பொருட்களாகப் பார்க்கக் கூடாது, அவர்கள் தங்களுக்கென தனித்துவமான மறுக்கமுடியாத உரிமைகளைப் பெற்றிருக்கிறார்கள் என்பதெல்லாம் பன்னெடுங்கால ஞானத்தை சொந்தமாக்கிய ஞான அசுரர்கள் எழுதிவைத்துவிட்டுச் சென்றவைதான் என்பவை செவிகளுக்குள் புகாதவாறு நாத்திகவாதி கவனமான இருந்தார். அவரின் நோக்கம் நிறைவேறிக் கொண்டிருந்தது. பார்வையாளர்களை தன் வலைக்குள் போட்டு அவர்களுள் பலரை தன் வசம் இழுத்து, தனது வலையொளித்தளத்தை ஒட்டியிருந்து கிறிஸ்தவம் என்னும் எச்சத்தை துடைத்தெறிவதில் அவர்கள் ஞானதீட்சையுடன் செயலாற்றிக் கொண்டிருந்தார். பன்மைமுகம் கொண்ட மனிதர்கள் அனைவரையும் பொருள்முதன்மைவாதம், பகுத்தறிவுவாதம் என்னும் ஒற்றைகளுக்குள் முடக்கிப் போட்டு பின்வீனத்துவத்தின் அடிப்படைகளை தகர்த்தெறிந்து, வேற்றுமைகள் அனைத்தையும் விழுங்கும் நாத்திகவாதியாக மாறுவது கைதேர்ந்த கலையாக அவருக்கு மாறிக் கொண்டிருந்தது. மக்களை மதங்கள் மந்தைகளாக்கி விட்டனராம். அவர்களை ஏமாற்றிவி்ட்டார்களாம். நாத்திகவாதி என்னச் செய்து கொண்டிருந்தார். தன்னுடைய சேனலுக்கு மணி அடிக்க அவர்களுக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார். அவருடைய பெயரிலிருந்து கிறிஸ்துவின் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அவரின் அவிவேகமெனும் பாவத்தைக் கழுவ...
0 கருத்துகள்