கூகுளிடம் கேட்கும் மர்மம் | அ. சந்தோஷ்

“எனக்கு வாழப் பிடிக்கவில்லை,” “என்னை யாரும் கண்டுகொள்வதில்லை,” “எனக்கென யாரும் இல்லை” போன்றதும் இது போன்றதுமான சொற்றொடர்களை கூகுள் தேடல் பெட்டகத்தில் அவள் டைப் கொண்டிருந்தாள். இவையெற்றையெல்லாம் ஏன் அவள் அதில் பதிவு செய்ய வேண்டும். கூகுள் அவளின் தனிமையைப் போக்கிவிடுமா? இல்லை “உனக்கு தோழியாய் நான் இருக்கிறேன்” என்று கூகுள் நம்பிக்கைத் தருமா?  இரவின் நடுஜாமத்தில் இத்தகைய இடுகைகளை தேடல் பெட்டகத்தில் போட்டுக்கொண்டிருப்பதை பற்றி அவள் நினைத்தப் போது அவளுக்கு சிரிப்பு வந்தது. இதைத்தான் அவள் அவனுடனான சாட்டிங் முடித்தப் பிறகு செய்து கொண்டிருந்தாள். அத்தோடு அவளுடைய இடுகைகள் நின்றுவிடவில்லை. “என்னுடைய பாய்பிரண்டுக்கு வேறு தோழிகள் இருப்பார்களா?” “பாய் பிரண்ட் என்னை ஏமாற்றுகிறான் என்பதை நான் எப்படிக் கண்டுப்பிடிப்பது?” என்னும் கேள்விகளையும் அவள் போட ஆரம்பித்தாள். ஆனால் அவற்றிற்கான பதில்கள் என்னென்ன என்று வாசித்துப் பார்க்கும் நிலையில் அவள் இல்லை. அப்படி கூகுளிடம் கேட்பது ஒரு அனிச்சையான செயலாகத் தான் அவளுக்குத் தோன்றியது. ஏதோ ஒன்று அவளை விடாமல் துரத்திக் கொண்டிருப்பதான உணர்வு. கண்டிப்பாக ஏதோ செய்ய வேண்டும் என்னும் உணர்வாக அது இருப்பதாக உணர்ந்தாள். இது தான் செய்ய வேண்டும் என்னும் தெளிவு அதற்குள் இல்லை. தூக்கம் வந்து கண்ணைத் தழுவிய போதும், ஏதோ வேண்டும் என்னும் உணர்வால் அலைபேசியின் சைட் பொத்தானை அழுத்தி, தொடுநிரையை அணைப்பதும் மீண்டும் தொட்டு வாழ வைப்பதாகவும், விரல் ரேகை பதியவைத்து லாக் எடுப்பதுமாக இருந்தாள்.  இரவு தொடர வேண்டுமா? இல்லை விடிய வேண்டுமா? போன்ற தெளிவுகள் எதுவும் அவளிடம் இல்லை. அப்படியெல்லாம் சிந்திக்க வேண்டும் என்று திட்டவட்டமான யோசனைகள் எதுவும் வரவில்லை. அவள் நிகழ் நொடியை நகர்த்திடுடம் எத்தனிப்பில் ஈடுபட்டிருந்தாள். நிகழ் நொடியை கடத்துவது எப்படி என்று திட்டமிட முடியாதவாறு, அலைபேசியோடு ஒண்டிப் போய்விட்ட உறவுடன் வாழும் விரல்களில் நகர்வுகளுக்கு ஏற்ப அவள் செயல்பட்டுக் கொண்டிருந்தாள். 

photo: pixabay.com

அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஏதாவது இனியும் செய்தாக வேண்டும் என்பது உடலெல்லாம் உணர்வுகளாகப் பரவிக் கொண்டிருப்பதாக உணர்ந்தாள். அவ்வுணர்வு ஒருவிதமான நிர்பந்தம் போல அவளை பீடித்துக் கொண்டிருந்தது. கைகள் விறுவிறுவென இருந்தது. அத்தோடு சேர்த்து உடல் முழுவதும் இயங்கிக் கொண்டிருந்தது. கண்களும் ஏதோ இன்னும் தேவை என்பதை உணர்த்திக் கொண்டு இருந்தது. கிடைத்த மகிழ்ச்சிகள் எல்லாம் போதாது என அவை உணர்த்திக் கொண்டிருந்தன. அவள் தொடுநிரையை நகர்த்தியதில் கட்டை விரல் வாட்ஸ்அப் செயலியில் பட்டது. அதை அவள் விரும்பி வேண்டுமென்றே செய்தாளா என்பதை உறுதி செய்யமுடியாத நிலையில் இருந்தாள். ஏதோ ஏதேச்சையாகப் பட்டதைப் போலத் தான் உணர்ந்தாள். ஆனால் அது வேண்டும் போலவும் இருந்தது. வேண்டும், அதைத் தொட வேண்டும் என்னும் நினைப்பில்தான் தொட்டதாகவும் இருந்தது. அவள் வாட்ஸ்அப் செயலிக்குள் நுழைந்தாள். விரலால் ஒரு முறை தொடுநிரையை மேலும் கீழுமாக நகர்த்தினாள். அதில் புதிதாக எந்த செய்தியும் வந்திருக்கவில்லை. அவள் விரல்கள் அவனின் பெயரைத் தொடத் துடித்தன. வேண்டாம் என்றும் வேண்டும் என்றும் இருந்தது. முரண் சிந்தனைகளுக்கு நடுவில் அவளுடைய பெருவிரல் இவ்வேளையிலும் அந்த தவறைச் செய்தது. அதுதான் அவனுடைய பெயரைத் தொட்டது. வேண்டும் வேண்டாம் என்னும் குழப்பமும், அறம் சார்ந்த சரி தவறுகளும் அவளுடைய ஆட்டிப்படைப்பதாக உணர்ந்தாள். காதலிப்பவரை சந்தேகிப்பது உண்மையன காதலுக்கு களங்கம் ஏற்படுத்தும் என்றும், நம்பிக்கையின்மையை உருவாக்கி விடும் என்றும் எண்ணி ஒருநிமிடம் கலங்கினாள். அது தன்னுடைய தோழியர் பலர் கூறியிருக்கிறார்கள். காதல் என்பது உண்மையானதாக இருக்க வேண்டும், அதற்குள் சிறுதுளி கூட ஐயம் வரக்கூடாது என்றெல்லாம் அவர்கள் தங்கள் வட்டங்களுக்களு போதிப்பதை கேட்டிருக்கிறாள். அவள் உறுப்பினராக இருந்த வாட்ஸ்அப் குழுவில் இத்தகைய இடுகைகளைப் பாரத்திருக்கிறாள். அதில் சில மகான்கள் சொன்னவை மேற்கோள் குறிகளுடனுனம், சில நிழுலுருவங்களுடன் பதிவுச் செய்யப்படிருக்கின்றன. சில வேளைகளில் ஸ்டேட்டஸ் இல் இவை சார்ந்தவை பெருளவில் குப்பைபோல் கொட்டிக் கிடக்கும். அவனை சந்தேகித்து விட்டதான உள்ளுணர்வு அவளுக்குள் மேலோங்கி அவளைக் குற்றப்படுத்த ஆரம்பித்தது. தான் அதை விரும்பிச் செய்யவில்லை என்று கூறினாலும் மனசாட்சி விடுவதாயில்லை. மெத்தப் படித்தவள், நண்பர்களின் அனுபவங்களை கேட்டறிந்தவள், சுயமாக சிந்திக்கும் திராணி உடையவள், ‘நானாக அதைச் செய்யவில்லை’ என்று எப்படிச் சொல்லலாம் என்னும் தர்க்கமும் அவளுக்குள் எழுந்தது. செய்வதெல்லாம் சரியே என்னும் சிந்தனையை உள்வாங்கிக் கொள், மனசாட்சியை கழட்டி வை என்று சிலராவது அவளுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதை யதார்த்தமாக்குவது அவளுக்கு சுலபமாகப் படவில்லை. 

அப்போது அவன் ஆன்லைனில் இருப்பதாக வைட்ஸ்அப் காட்டியது. அப்போதும் ஏன் அவன் ஆன்லைனில் இருக்கிறான் என்று அவளுக்கு புரியவில்லை. என்னிடம் குட்நைட் சொன்னவன் மீண்டும் ஏன் வாட்ஸ்அப் இல் ஆன்லைனில் இருக்க வேண்டும். அதை அவனிடம் கேட்கலாமா? ஐயோ கூடாது காரணம் அவளும் அவனிடம் தூங்கப்போவதாகச் சொல்லிவிட்டுத்தான் வாட்ஸ்அப்  இல் சாட்டிங் நிறுத்திக் கொண்டாள். அவள் ஏன் திரும்பவும் வாட்ஸ்அப் இல் நுழைந்தாள்? அத்தகையக் கேள்வியை அவன் எழுப்பினால் என்ன செய்வது. செய்வதறியாது வாட்ஸ்அப் இன் முன்னால் தவித்து நின்றாள். உடனே வாட்ஸ்அப் செயலியிலிருந்து வெளியேறாவிட்டால் அது பெரும் சிக்கலாக மாறிவிடும் என்று உணர்ந்தாள். அச்சம் அவளை ஆட்கொண்டது. அவன் இவளை சந்தேகப்பட்டால் என்ன செய்வது? அது சண்டையாக மாறி சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று நினைத்தாள். உடனே அவள் செயலியை விட்டு வெளியேறினாள். அவள் ஆன்லைனில் வந்தது அவன் பார்த்திருக்க மாட்டான் என்று நினைத்து ஒரு வினாடி நிம்மதி பெருமூச்சு விட்டாள். பார்த்துவிட்டிருந்தால் என்ன சொல்லி சமாளிப்பது என்றும் அவளுக்குப் புரியவில்லை. நல்ல வேளை சாதாரண குறுஞ்செய்தி பெட்டகத்திற்குள் எவ்வித செய்தியும் வரவில்லை. பார்த்திருந்தால், அவன் சாதாரண குறுஞ்செய்தி அனுப்பியிருப்பான். 

அவள் பலவித சிந்தனைகளால் தொந்தரவுச் செய்யப்பட்டாலும். அவளின் விரல்கள் தங்கள் பணிகளைத் தொடர்ந்திடத் துடித்துக் கொண்டிருந்தன. அலைபேசியை கவிழ்த்து நெஞ்சில் போட்டுப்பார்த்தாள், என்னத் தேடுகிறோம், எதற்காகத் தேடுகிறோம் என்னும் நிச்சயம் அவளிடமிருந்து வெளிப்படவில்லை. அவள் விரல்களின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டவளாய் அலைபேசியை மீண்டும் எடுத்தாள்.  

அவளுக்குத் மீண்டும் கூகுள் பெட்டகத்தின் துணைநாடினாள். தன்னைப் போல இத்தகைய இக்கட்டான சூழலில் இருப்பவர்கள் இருக்கலாம் என்னும் எண்ணத்தோற்றம் அவளுக்கு உருவாகி இருந்தது. அதனால் தான் அவள் தேவையற்றை இடுகைககளை கூகுள் பெட்டகத்தில் போட்டுக் கொண்டிருந்திருந்தாள். கூகுள் வேறு யாரும் தராத பாதுகாப்பை அவளுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தது. முகநூல், இன்ஸ்டகிராம் போன்றவற்றில் எல்லாம் யாரோ கவனிக்கிறார்கள் என்னும் உணர்வு அவளுக்குள் இருந்தது. அங்கே டைப் செய்யப்படுபவை எல்லாம் அவளுடைய பக்கத்தில் பதிவு செய்யப்பட்டு, பலராலும் பார்க்கும் நிலை ஏற்படும். அங்கே அவள் தனியாக இருத்தல் சாத்தியமாகாது. அது மட்டுமல்ல இரகசியமாகவும் இருக்க முடியாது என்பதை அவள் அறிந்திருந்தாள். இப்போதைக்கு முழு இரகசியங்களையும் பாதுகாத்து, அடையாளங்களை வெளிப்படுத்தாத மிகவும் நம்பிக்கைக்குரிய தோழியாக கூகுள் மட்டுமே தென்பட்டது. அது மட்டுமே, அவளின் விருப்பங்களுக்கேற்ப செயல்பட்டுக் கொண்டிருக்கும் உணர்வு ஏற்பட்டது. மேலும் கூகுள் நம்மோடு உரையாடும் தன்மைப் பெற்றிருப்பதாக உணர்ந்தாள். அது மறுப்புகள் கூறாமல் உரையாடும். நமது விருப்பம் அறிந்து, நமது மனநிலைக்கு உகந்த முறையில் அது உரையாடும். அதாவது, அதில் சிலவற்றை டைப் செய்ய ஆரம்பிக்கும் போது  அதுவே மற்றவற்றை அவளுக்குப் பரிந்துரைச் செய்து கொண்டிருந்தது. இது உரையாடல் அன்றி வேறென்ன. அவள் “வாழப்பிடிக்கவில்லை” என்று டைப் செய்தவுடன், “அடுத்து என்ன செய்வது” என்னும் பரிந்துரையை கேள்வியை கீழே தொங்கியவாறு நின்று காட்டிக்கொண்டிருந்தது. அதுமட்டுல்ல, அது வேறு யாரிடமும் அவள் உரையாடியதைக் கூறித் திரியாது. அதற்கென வேறு நட்பு வட்டாரங்கள் இல்லை. நான் மட்டுமே அதற்குச் சொந்தம். கூகுளிடம் கேட்கும் கேள்வியை தோழியரிடம் கேட்டால், என்னைப் புத்திப்பேதலித்தவள் என்று குறை கூறுவார்கள். நல்ல மருத்துவரைச் சென்றுப் பார்த்துப் பேசி மருந்து வாங்கிடக் கூறுவார்கள். வீட்டுக்கு நெருக்கமானத் தோழியராக இருந்தால், அப்பா அம்மாவிடம் சொல்லி காரியத்தை கெடுத்து விடுவார்கள். அவர்களுக்கு வீணான சிரமங்கள் உருவாகும். அம்மாவைச் சொல்லவே வேண்டாம், அவளின் வாயிலிருந்து பிறகு வரும் வார்த்தைகளுக்கு வேலி கட்ட முடியாது. கூகுள் அவளுக்கு பேங்க லாக்கருக்கு இணையான பாதுகாப்பை கொடுப்பதாக உணர்ந்தாள்.  

சிந்தனை மறுநாள் குறித்த காரியங்களுக்கு நழுவியது. நாளை பாய்பிரண்டுடன் எந்த இடத்திற்குச் செல்வது யாருக்கும் தெரியாமல் இருக்கும் என்பதை குறித்த ஆலோசனையில் அவள் மூழ்கினாள். அதற்கான செய்திப் பரிமாற்றங்களை இருவரும் இரவு பன்னிரண்டு மணிவரை வாட்ஸ்அப் மூலமாக தகவல்களைப் பரிமாறிக் கொண்டார்கள். ஆனாலும் அப்பொழுதில் ஏதோ வேண்டும் போல உணர்ந்தவள் அனிச்சையாக, “காதலர்கள் செல்வதற்கான பாதுகாப்பான...” என்று கூகுளின் தேடல் பெட்டகத்தில் அவள் டைப் செய்ய ஆரம்பித்ததும், அதுவாகவே “இடங்கள்” என்னும் பரிந்துரையை முன்வைத்தது. அது அவளுக்கு வசதியாக இருந்தது. தன்னுடைய நோக்கத்தை அறிந்து கூகுள் செயல்படுவதான பெருமிதம் அவளுக்குள் தோன்றியது. தான் தனியாள் இல்லை தனக்கெனத் துணையாக கூகுள் இருக்கிறது என்னும் தெம்பு அவளுக்குள் வந்தது. இப்படித் தேடுவதை கூகுள் அனுமதிப்பதோடு அதை ஊக்குவிக்கிறது என்று கூட அவளுக்கு தோன்றியது. அவள் இடங்களைத் தேடிப் பார்த்தாள். அப்படிப் பட்ட இடங்களை கூகுள் காட்டுவதாக இல்லை. சம்மந்தமில்லாதத் தகவல்களை அதுத் தந்துக் கொண்டிருந்தது. அவள் இருப்புக் கொள்ளாதவளாக, மீண்டும் வாட்ஸ் அப்பில் அவன் ஆன்லைனில் இருக்கிறானா? என்றுத் தேடிப்பார்க்க விரல்களை நகர்த்தினாள். திறந்த போது அவன் இல்லை என்பது அவளுக்கு ஆறுதல் கொடுத்த அதே வேளையில் பெரும் குற்ற உணர்ச்சியையும் கொடுத்தது. அவன் தூங்கியிருப்பான் என்று நினைத்தாள். அவளின் காதல் வெறும் போலியானது என்னும் உணர்வு மேலோங்க, உள்ளம் பதைப்பதைக்க ஆரம்பித்தது. சிறு சிந்தனை கூட அவளை வெகுவாக வாட்டியெடுத்தது. ஒருவேளை தன்னைப் போல அவனும் தேடிக் கொண்டிருப்பானோ? என்னும் மறு சிந்தனை குற்ற உணர்ச்சியிலிருந்து மீண்டும் புதுச்சிந்தனைக்கு வசப்பட்டாள். அதை எப்படிக் கண்டுப்பிடிப்பது. அதற்கான வசதிகள் கூகுள் செய்துத் தரவில்லை என்று சலித்துக் கொண்டாள். ஏன் மனம் பிளவுப்பட்டுக் கிடக்கிறது.  

நேரம் செல்லச் செல்ல, மூளை வேறுமாதிரி வேலை செய்வதாக உணர்ந்தாள்.  வேறு பெண்களுடன் ஒருவேளை அவனுக்குத் தொடர்பு இருக்குமோ? அப்படிப்பட்டச் செயல்களில் ஆண்கள் ஈடுபடுவது  வழக்கம் தானே. சித்தி மகள் அப்படிப் பாதிக்கப்பட்டவள் தானே. “பலரை ஓரே வேளையில்”  என்று அவள் விரல்கள் டைப் செய்ய ஆரம்பித்ததும், “காதலிக்கும் ஆண்கள்,” “காதலிக்கும் பெண்கள்” என்றெல்லாம் பரிந்துரைகள் வரத் தொடங்கின. அவள் அவற்றை கிளிக் செய்ய விரும்பவில்லை. அவன் அப்படி இருந்தால் என்று மனம் கலக்கமடைய ஆரம்பித்தது. ஏன் நான் இவற்றையெல்லாம் கூகுளிடம் கேட்கிறேன். நான் அடிமையா? தூக்கமில்லாத இரவாக, சந்தேகங்கள் நிரம்ப, ஏமாற்று எண்ணங்களும் அவள் படுக்கையில் கிடந்து புரண்டுக் கொண்டிருந்தாள். அவள் தூங்கவுமில்லை, பொழுதுகள் விடியவுமில்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்