நா(வு) சேவை | அ. சந்தோஷ்

உலகில் பலவிதமான சேவைகள் உள்ளன. கல்விச்சேவை, சமூகச்சேவை, இராணுவச் சேவை என்றெல்லாம் அவற்றைப் பட்டியலிடலாம். இவனைப் பொறுத்தவரைக்கும் அவன் செய்து கொண்டிருப்பது நா சேவை. நாய் சேவை அல்ல நா, அல்லது நாவுச் சேவை. சேவை செய்வதற்காகவே அந்த நாவுப் படைக்கப்பட்டது என்பதை அவன் அறிவான். அச்சேவை பயனற்றச் சேவை அல்ல. பயன் நிறைந்த, பணம் நிறைந்த சேவை. நாவானது பலவற்றிற்கும் பழக்கப்பட்ட ஒன்றாக இருந்ததால் அவனுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து சேவையில் ஈடுபடுவதில் அதற்கு எவ்விதமான ஆட்சேபணையும் இல்லை. அதாவது நாவு சாதாரணமாக மனித வாழ்வில் அரிதினும் அரிதான பணிகளை ஆற்றி வருகிறது. அதை நாம் உணர்வதில்லை. உணவு உண்ணும் வேளையில், செய்கின்ற அற்புதகரமான காரியங்களை அவன் வாழ்விலும் நாவு செய்து வந்தது. விரல்கள் உள் வைக்கும் உணவை உள்ளிழுத்தல், பற்களுக்கிடையில் செலுத்தி அரைக்க வைத்தல், உதடுகளில் ஒட்டி இருப்பவற்றை சுழ்ற்றி துடைத்தெடுத்தல், பற்கள் அரைத்தவற்றை உள் செலுத்த அழுத்தியாக செயல்படுதல், சுவைகளின் தரங்களை மூளைக்குச் செலுத்தி இன்புறவைத்தல். இன்னும் பலவற்றை நாவு தன்னுடைய சேவையாக செய்து வந்தது. மேலும், வாய்க்குள் புண்கள் வந்தால் அவற்றை அடையாளம் காட்டுதல், சொத்தைப்பல்களின் நிலைகள் குறித்து ஆராய்தல், அவற்றின் சுத்தம் குறித்த அறிக்கையை மூளைக்குச் கொடுத்தல் போன்ற அரியப் பணிகளை ஆற்றிக் கொண்டுதன் வந்தது. 

photo: pixabay.com

இப்போது அவனை வாழ்வித்த நாவின் சேவையைப் பற்றிப் பார்ப்போம். அவனைப் பொறுத்தவரைக்கும் பேசித்திரிதல் ஒன்றே அதனுடைய முழு நேரப்பணியாக இருந்தது. பேசிக்கொண்டே இருப்பதைக் முழுநேரப் பணியாகக் கொண்டிருந்ததால், அது செவியை வேலை செய்ய அனுமதிப்பதில்லை. நாவில் ஞானம் எல்லாம் குடிக்கொண்டிருக்கிறது என்பதை அவன் முழுமையாக நம்பியிருந்ததால், ஞானங்கள் எதுவும் செவிவழியாக புகாதவாறு நா சேவை செய்யுமாறு பழக்கப்படுத்தி வைத்திருந்தான். இந்த நாவிற்கு என்று முக்கியமானத் தனித்தன்மைகள் பல உள்ளன. அது, நடனமாடும், சேர்ந்தாடும், ஒத்தாடும், கூத்தாடும், கூவம் கக்கும், குதூகூலித்து ஆடும், உணர்ச்சிவசப்பட்டு பேயாட்டம் போடும், முன்னிருப்போரின் தாளத்திற்கு ஏற்ப எசப்பாட்டு பாடும், ஜால்ரா போடும், தூபம் காட்டும், அசிங்கம் கூறும், இழிச்சொல்கள் கூறும், இரத்தம் சிந்தா கொலைகளைச் செய்யும், எதிரிகளின் வம்சங்களைத் தோண்டி வரலாறுகளைப் புனைந்து அவரை உயிருடன் சிலுவையில் ஏற்றும். 

ஆனால் இப்போது அவன் கொண்டிருக்கும் சேவை அடிமைப்பணி. அடிமைப்பணி செய்வது பொதுவாக நாவுகளுக்கு ஒன்று புதிதல்ல. அந்நிலையில் அடிமை வேலை செய்வதற்கான குணாதிசயங்களை அவனுடைய நாவு பெற்றிருந்தது. இது தலைவனுக்குச் செய்யும் அடிமைப் பணி அல்ல. வரலாறும் புராணங்களும், தலைவர்களுக்கு அடிமை வேலை செய்த நாவுகளைப் பற்றிப் பேசுகிறது. அவற்றுள் பல பூட்ஸ்களையும் நக்கியிருக்கின்றன. ஆனால், இவன் அவனுடைய நாவால் செய்து கொண்டிருந்தது இன்னொரு அதிபயங்கரமான வேலை. பள்ளிக்கூடங்களில், ‘மெல்லத் தின்றால் பனைமரமும் தின்னலாம்’ என்று பிள்ளைகளுக்குக் கூறுவதுண்டு, ‘அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும்’ என்றும் சொல்வார்கள். அதைச் செய்யத்தான் அவனை அவனுடைய எஜமானர்கள் நியமித்தார்கள். அதாவது பல ஆண்டுகளாய், பலப் பெரியவர்களால் உருவாக்கப்பட்ட தன்மான வாழ்வு என்னும் உடை போன்ற மாண்பினை கழற்றி எறிய வேண்டும். அவர்களை அம்மணமாக்கி மாண்பிழந்த வாழ்வுக்குத் தள்ள வேண்டும். இழந்து போன ‘மேன்மைத் தங்கிய,‘ சமூகப் படிநிலைகளைக் கட்டிக்காக்கின்ற, மனிதர்களை முதல் தர, இரண்டாம் தர, மூன்றாம் தர என ஆயிரக்கணக்கிலான தரங்களாகப் பிரித்து அவரவருக்கான இடங்களை நிச்சயிக்கும்’ உயர் குடி, கீழ்குடி வாழ்வை மீண்டும் கொண்டு வர வேண்டும். அதற்கென பெரும் பணம் கொடுத்து அவனைத் தேர்ந்தெடுத்தார்கள். 

அப்பணியை அவனிடம் அவர்கள் ஒப்படைத்தப் போது, சில தகுதிகளைப் பார்த்தார்கள். தகுதிகளின் அடிப்படையில் தான் பணம் நிச்சயிக்க முடியும் என்றும், வேலையை ஒப்படைக்க முடியும் என்றும் அவர்கள் தீர்மானமாய் கூறிவிட்டார்கள். அதற்காக அவர்கள் நாவின் தன்மையை ஆராய்ந்தார்கள். நாவின்  நீளம், குழைந்து, சுழலும் தன்மை போன்றவை பிரதானமானமாகப் பார்த்தார்கள். அடுத்ததாக, அதற்கு எவ்வித அசிங்கங்களையும் நக்கி எடுக்கும் ஆற்றல் இருக்க வேண்டும் என்பதை எஜமானர்களுள் ஒருவர் கண்டிப்பாக முன்வைத்தார். அவரின் உருவம் பெரிதாக இருந்ததால் கூட்டத்தில் இருந்தவர்கள் யாரும் அதற்கெதிராக எதிர்த்து நிற்கவில்லை. அவர் தனது நிபந்தனையை முன்வைத்தப் போது நாவுக்கும் நாசிக்கும் இடையேயான தொடர்பை முற்றிலும் அவன் அறுத்திருக்க வேண்டும் என்று காட்டமாய் கூறிவிட்டார். இல்லையென்றால் அசிங்கங்களை நக்கும் போது, மூக்குத் துவாரங்கள் பெரும் தடையாக மாறி, காரியத்தை கெடுத்துவிடும், ஒப்படைத்தப் பணியும் நிறைவு பெறாமல் போய்விடும் என்பது அவரின் வலுவான கருத்தாக இருந்தது. மேலும், நாவுக்கும் செவிக்கும் இடையேயானத் தொடர்பில் சில நிபந்தனைகளை அவர்கள் கண்டிப்பாக விதித்துவிட்டார்கள். காதில் அரிப்பு கட்டியிருக்க வேண்டும். காற்றில் கலந்து வருவதை எல்லாம் அது உள்வாங்கக் கூடாது. குறிப்பாக பகுத்தறிவு போதிக்கும் எவையும் செவிக்குள் புகாதவாறு அந்த அரிப்பு கச்சிதமாக தன் பணியை ஆற்றியாக வேண்டும். இவர்கள் எதைக் கூறுகிறார்களோ அதைத்தான் நாவு செய்ய வேண்டும். நாவுக்கும் செவிக்கும் இடையே இத்தகைய தொடர்பு என்றால், மூளையிலிருந்து ஓடிவரும் அறிவுகள், நினைவுகள், வரலாற்று உண்மைகள் ஆகியவை நாவை வந்தடையும் பாதையில் பலவிதமான கழிவுக்குழாய்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது அவர்கள் அனைவரின் ஏகோபித்தக் கருத்தாக இருந்தது. கழிவுகள் கலந்து வருபவற்றை எவ்வித யோசனையும் இன்றி நாக்கு சுழற்றி அடிக்க வேண்டும். அந்தத் திறமை அவனுக்கு வாய்த்திருக்கிறதா என்பதை அவர்கள் நீண்ட நேரம் ஆராய்ந்தார்கள். பொய்கள் சொல்லும் போது மட்டுமல்ல, உண்மை பேசும் போதும் அதில் சாக்கடையின் கலப்பு இருக்க வேண்டும். கேட்பவர்களின் செவிகளை அது கூசச் செய்ய வேண்டும். அதே வேளையில் அந்த அழுக்கு கேட்பவர்களை ரசிக்க வைக்க வேண்டும். கேட்போர் அதை விரும்பாமல் விரும்பிக் கேட்கும் வசீகரம் கலந்திருக்க வேண்டும். 

மேலும் அதி முக்கியமாக நாவுக்கென்று தனிச்சுவைகள் எதுவும் இருக்கக் கூடாது. சுவை மொட்டுக்கள் அனைத்தையும் கரித்துவிட வேண்டும் என்பதற்கான சம்மதப் பத்திரத்தை அவர்கள் எழுதி வாங்கி விட்டார்கள். ஆகையால் சுவைகள் அற்ற, நாசிகள் எதுவும் வேலை செய்யாத, செவிகளில் அரிப்புகள் கட்டப்பட்ட, அவன் எல்லாவற்றிற்கும் கச்சிதமாகப் பொருந்தி நின்றான். காரணம் அவனுடைய கண்கள் அவ்வளவு பெரிய பணமூடைகளைப் பார்த்து விட்டன. அவனுடைய நெஞ்சமெல்லாம் இப்போது, கண்கள் பார்த்த அந்த அற்புதகரமான காகிதக் கட்டுகளின் காட்சிகள் மட்டுமே நிழலிட்டன. அதை வைத்து அவனை வசியம் செய்தார்கள். அவர்கள் அவனுடைய மூளையை வேலை செய்ய முடியாதபடி வசியம் செய்து விட்டார்கள். 

இதை விடவும் மிகவும் கடினமான வேலை ஒன்று இருந்தது. அதுவும் உடலில் குடிகொள்ளும் இன்னொரு உறுப்பு தான். அதை உறுப்பு என்று சொல்ல முடியாது. அது ஒரு வகையான உள்ளுணர்வு, தலையை நிமிர்த்து நடக்கச் செய்யும் ஆழமான உள்ளுணர்வு. ‘இகத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகள் கொண்ட உணர்வு’ (ஒற்றை மேற்கோளுக்குள் போடப்பட்டிருக்கும் இச்சொற்கள் அவர்களைப் பொறுத்தவரைக்கும் தீண்டத் தகாத, அநாகரீகமன சொற்கள்). மனசாட்சி என்று பொதுவாக் சொல்வார்கள். அதை அவர்கள் கட்டுப்படுத்த பெரும் பாடுப்பட்டனர். அவன் நாச்சேவை செய்து முடித்ததும் பல வேளைகளில் மயக்கும் வந்து குழைந்து விழுந்து விடுவான். அவர்கள் பயப்பட்டார்கள் அவன் செத்துப் போய்விடுவானோ என்று. காரணம் அவனைப் போன்று பணம் வாங்கிக் கொண்டு நேர்த்தியாக வேலை செய்பவர்கள் இகத்தில் யாரும் இருக்க முடியாது. அவர்கள் விரும்பிய குணாதிசயங்கள் எல்லாம் பொருந்திய ஒருவனை இனி, ஆராய்ச்சி மையத்தில் தான் உருவாக்க வேண்டும். ஆகையால் அவன் வாழ வேண்டும் என்பது நிர்பந்தமாக இருந்தது. அதனால், அவர்கள் நிறைய நிறங்களில் கட்டுக்கட்டாக பணம் காட்டினார்கள். 

அவன் மனசாட்சி அவனை விடவில்லை. சாப்பிடும் போதெல்லாம் அதில் இரத்தச் சுவை எடுக்க ஆரம்பித்தது. அவன் குழைத்து உள் வைக்கும் பாயசத்திற்குள் விஷம் இருக்கும் உணர்வு. இதை அவன் பலமுறை, அவர்களிடம் கூறினான். ஆனால் அவர்களோ, அவனை எள்ளி நகையாடினார்கள். பிழைக்கத் தெரியாத முட்டாள் என இழித்துரைத்தார்கள். அத்தோடு அவனை விட்டுவிடவில்லை. அவனை உசுப்பேத்துவதற்காக, ஆயிரக்கணக்கானவர்களின் உயிர்களைப் பறித்தவர்களின் கதைகளைப் பற்றி வீரமாக பேசினார்கள். நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்து வெட்டிக் கொன்றவர்களின் வீரதீரச் செயல்களை விளம்பினார்கள். கூண்டோடு நெருப்பிலிட்டு கொல்ல தீப்பந்தம் எறிந்தவர்களையும், எரிபொருள் கொடுத்தவர்களையும் பற்றிய வீரத்தின் உச்சங்களைப் பற்றிக் கூறினார்கள். அவர்கள் தற்போது பெற்றிருக்கும் உல்லாச வீடுகளைப் பற்றியும், அலங்கரிக்கும் சிம்மாசனங்களைப் பற்றியும், சுற்றும் நாடுகளைப் பற்றியும் விளக்கமாக் கூறி, அவனுடைய மனசாட்சியில் முளைத்த இரக்கத்தின் தளிர்களை வெந்நீர் ஊற்றிக் கரிக்கப் பார்த்தார்கள். ஆனால், அவன் இரவின் தனிமைகளிலும் தன்னுடைய பச்சிளம் குழந்தைகளுடன் செலவழித்தப் பொழுதுகளிலும் சிந்திய அகக்கண்ணீரை உரமாக மாற்றி, அவை மீண்டும் மீண்டும் இலைவிட ஆரம்பித்தன. இலைவிட்டுத் துளிர்க்கும் போதெல்லாம் அவன் திடீரென மாத்திரையும் கையுமாய் அலைவான். இரத்த அழுத்தம் பெருகி விட்டது என்று உன்னிப்பாய் கவனித்து அவனுடைய உடன் நடந்தோர் மாத்திரைகளை வாயில் போட்டு, தண்ணிரை ஊற்றிக் வாயை இறுக்கமாக அடைத்தார்கள். அவன் இப்போது பேசிக்கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்து விடுகிறான். வீட்டில் செல்லும் போதெல்லாம், குடிக்கும் தண்ணீரில் சாக்கடைக் கலந்திருப்பதான உணர்வு. குழந்தைகளைக் தூக்கும் போது, அக்குழந்தைகளின் உடல் மேல், அசிங்கம் துளித்துளியாய் வடிவதாய் உணர்வு. எங்கும் அழுக்கு, எதிலும் அசிங்கம்.

ஒப்பந்தம் முடிந்து காரியம் சாதித்தப் பின் அவர்கள் அவனைத் தூக்கி எறிந்தார்கள். இப்போது அவனுக்கென மாடியில் தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. முழு நேரம், அவன், நாவைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அடுக்களையில் இருந்த வாஷ் பேசின் முழுதும் துப்பித் துப்பி எச்சில் படுத்தினான் முதலில். பிறகு கையில் கிடைப்பதை எல்லாம் வைத்து நாவை வழிக்கத் தொடங்கினான். இரத்தம் வடியத் தொடங்கியது. மனைவி, தென்னை ஓலையின் ஈர்க்கில் எடுத்துக் கொடுத்தாள். அதுவே போதும் என உணர்ந்தவன் கட்டுக்கட்டாக ஈர்க்கில் பயன்படுத்தத் தொடங்கினான். இப்போது அவனுக்கென்று தனி அறை ஒதுக்கப்பட்டிருந்தது. மாடிக்கான படிகளில் பிள்ளைகள் ஏறாதவாறு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. தூரமாக ஓடிக்கொண்டிருந்த கூவம் ஆற்றின் நாற்றம் நாசிகளில் நுழையும் போது, அவன் நாவிலிருந்து வடியும் அழுக்கை அழுத்தி இழுத்தெடுப்பதற்காக ஈர்க்கிலை எடுக்க ஓடினான். அறை முழுவதும் தொண்டைத் திறப்பதன் ஓசைகளும், வாந்தி எடுக்கும் சத்தங்களும் கேட்டுக் கொண்டே இருந்தது.  


கருத்துரையிடுக

0 கருத்துகள்