(பெண்) தேவதைகள் வேண்டாம் | அ. சந்தோஷ்

நடக்கக் கூடாதது நடந்து விட்டது என்பதை நாம் கேட்டிருப்போம். இதை நாம் நடக்கவேக் கூடாதது நடந்து விட்டது என்றே சொல்லியாக வேண்டும். அதாவது, நடக்கக் கூடாத, மனிதர்களின் மேல் பெரும் சாபத்தை கொண்டுவருகின்ற, மனிதர்கள் அனைவரும் வெறுத்து ஒதுக்குகின்ற, மிகவும் கொடூரமான ஒன்று நடந்து விட்டது. அதைக் கேட்பதே அவ்வளவு கர்ணகொடூரமான நிகழ்வாக இருந்தது. அதைப் பற்றி விவரிப்பதற்காக வந்தவர்களை அந்த ஊரைச் சேர்ந்த பெரியவர்கள் கடுமையான ஆணைகள் பிறப்பித்து தடுத்து விட்டார்கள். வாய்களை பசையால் வைத்து ஒட்டாத குறையாக பேசவிடாமல் செய்து  விட்டார்கள். அதைப் பற்றிய விவரணம் கூட இரத்தத்தை கொதிக்க வைக்கும், உடலை நடுங்க வைக்கும், குரலை பதற வைக்கும், தலையில் ஏதோ மின்னல் பாய்ந்தது போன்ற உணர்வில் உடலெல்லாம் வெட்டி வியர்த்து விடும். அதனால் பெண்ணிலிருந்து பிறந்தவர்கள் யாரும் அதை விவரிக்க விரும்ப மாட்டார்கள். அதைச் செய்வதை அனுமதிக்கவும் மாட்டார்கள். நாராசமான செய்தி அது. காதுகளில் ஈயம் காய்ச்சி ஊற்றும் அனுபவம். இது எப்படி நிகழும் என்றும், எப்படி ஒருவரால் இப்படி எல்லாம் செயல்பட முடியும் என்றும் நினைக்க வைக்கும் கேவலமான, கொடூரமான, அநியாயான, அருவருப்பான, மிருகத்தனம் நிறைந்த, ஈவிரக்கமற்ற, மனிதப்பிறவிக்கே இழுக்கு ஏற்படுத்தும் சம்பவம் அது. சம்பவம் அல்ல அசம்பாவிதம் அது. அந்த தவறைச் செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் என்று பலரும் கொதித்தெழுந்தனர். திருமணமாகாத இளம்பெண்கள் பலரும் அவனை இப்பொழுது இங்கேயே கொண்டு வந்து தலையைத் துண்டித்து கொலை செய்ய வேண்டும் என்று கூறினார்கள். முப்பது வயதைக் கடந்த இளந்தாய் ஒருவள், தன்னுடைய பெண்குழந்தையை மார்போடு அணைத்து வைத்துக் கொண்டு அந்தக் கொடூரத்தைச் செய்தவனின் உறுப்பை துண்டித்து எறிய வேண்டும் என்றும் அது அனைவருக்கும் ஒரு பாடமாகவும் அமைய வேண்டுமென்று உரக்க, உறுதியாகக் கூறினாள். அவனுடைய வம்சமே ஊரில் இருக்கக் கூடாது என்றும் அவன்வழி வருகின்ற வித்துக்கள் அனைத்தும் அதே கொடூரத்தின் அணுக்களைச் சுமந்ததாக இருக்கும் என்றும், அவனை கண்காணாத இடத்துக்கு நாடுகடத்த வேண்டும் என்றும் இரு பேத்திகளை அணைத்துப் பிடித்தவாறு ஆர்ப்பரித்துக் கொண்டுக் கூறினாள் முதியவள் ஒருவள். ஊரெல்லாம் கொதித்துக் கிடந்தது. மழையும் இல்லை, காற்றும் இல்லை. மரங்களின் இலைகள் எல்லாம் சலனமற்றுக் தொங்கின. எங்கோ தூரமாக ஓடும் ரயிலின் சத்தம் மட்டும் அடிக்கடிக் கேட்டுக் கொண்டிருந்தது. அது எழுப்பிய ஓசை ஊராரின் கோபக்குரலுடனும், அழுகுரலுடனும் இரண்டறக் கலந்து பேரொலியாக ஒலித்துக் கொண்டிருந்தது. 

இது கொதிப்பதற்கான நேரமல்ல, நிதானமாக யோசித்து நீண்ட காலத்திற்கான தீர்வுகளை எடுக்க வேண்டியத் தருணம் என்பது அறிவிலும், வயதிலும், மூத்தவர்களின் எண்ண ஓட்டமாக இருந்தது. நாம் தண்டிப்பது சரியல்ல, சட்டத்தைக் கையில் எடுப்பதும் முறையல்ல என்றும் வயது மூத்த மிதவாதிகள் வேறு சிலர் முன்வந்து சொன்னார்கள். மிதவாதிகளின் குரல் மூத்தவர்களின் கருத்துக்கு இசைவாக இருந்தது. ஆனால், அதிலிருந்து ஒருவர், ஆங்காரத்துடன்,  சொன்னார். நீண்ட காலத்திற்கான தீர்வை நாம் விரும்புகிறோம் என்றால், குறுநில மன்னனிடம் சொல்லி நியாயம் கேட்க கூடாது. பேரரசனிடம் கொண்டு செல்ல வேண்டும். அப்போது தான் பேரரசு முழுவதும் இந்த அநியாயத்தை குறித்து அறிய வருவார்கள்; இத்தகைய வக்கிரமான செயல்களை கொடூரர்கள் இனிமேல் செய்யாமல் இருப்பார்கள். அவனுடைய குரலை பலரும் ஆமோதித்தார்கள். பதைபதைத்துப் போய், உணர்ச்சிவசப்பட்டுப் பேசிக்கொண்டிருந்த பெண்கள் கூட்டமெல்லாம் மெத்தப்படித்தவர்களின் குரல்களிலிருந்து வெளிப்பட்ட நியாயங்களால் தெளிவுப் பெற்றவர்களாய் சற்றே அடக்கி வாசித்தார்கள். அவர்கள் உணர்ச்சிகளைத் தூண்டும் உடம்பின் சுரப்பிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு, நிதானம் நோக்கி நகர ஆரம்பித்தார்கள். பேரரசரின் மாபெரும் சபைக்குக் கொண்டு செல்வதாய் தீர்மானிக்கப்பட்டது. அதற்கான ஆதாரங்களும், ஆட்பலங்களும் சேர்க்கப்பட்டன. அசம்பாவிதத்தை/சம்பவத்தைப் பற்றிய அனைத்தையும் அவர்கள் சேகரித்தார்கள். அவன் நிகழ்த்திய கொடூரத்தின் எச்சங்களாக மிஞ்சியத் தடயங்களை எல்லாம் சிந்தைத் தெளிவுடன் கோப்பாக்கிக் கொண்டார்கள். பேரரசர் அவை கூட்டும் நாளைப் பற்றிய தகவல்களை குறித்துக் கொண்டார்கள். 

photo: pixabay.com

விசாரணைக்கு வந்தது சம்பவம் பேரரசனின் முன்னால். அமைச்சர் பெருந்தகைகள் எல்லாரும் கூடியிருந்தார்கள். அந்த அவைக்கு தனிச்சிறப்புகள் பல உள்ளன. அது ஞானம் குடிகொள்ளும் அவை. மக்களை நீதிவழுவாமல், நேர்மையின் பாதையில் நடத்திச் செல்வதற்கான புத்திக் கூர்மையைப் பெற்றிருந்த பல அமைச்சர்கள் கூடியிருந்த அவை அது. அதற்கு ஈடான அவைகள் அந்த சாம்ராஜ்யத்தில் வேறெங்கும் இல்லை. புலவர்கள் பலர் வந்து பாடல்கள் பாடி, அதுவே உலகின் ஆகச்சிறந்த ஞானத்தின் பிறப்பிடம் என்று வாயார வாழ்த்தியிருக்கிறார்கள். புலவர்கள் பாடிய பாடல்கள் பல, மக்கள் ஊர்களில் பாடித்திரிந்ததும் உண்டு. அவ்வளவுக்குப் பெருமை வாய்ந்தது அந்த அவை. அதைவிடவும் பெருமை வாய்ந்தது பேரரசரின் அரியணை. அதற்கு ஈடான நீதித்தலைமை இகத்தில் இல்லை என்பதை பல வெளிநாட்டு தூதர்களும் வந்துப் புகழ்ந்துச் சென்றிருக்கிறார்கள். 

பேரரசர் ஞானபீடத்தின் அதிபதியாகவும், பாரபட்சமற்றவராகவும் நீதியிருக்கையில் வீற்றிருந்தார். மனித மாண்பை கட்டிக்காப்பது அவரது பொறுப்பு. ஒவ்வொரு மனிதருக்கும் மாண்பு உண்டு, அவர்களின் உரிமைகளை காப்பது இவரது கடமை. 

வாதம் தொடங்கியது. ஒன்பது வயது சிறுமியை ஈவிரக்கமின்றி பலமுறை வன்புணர்ச்சி செய்த 40 வயதானவனை தண்டிக்க வேண்டும் என்றார்கள். எதிர்தரப்பு வாதங்களும் முன்னெடுக்கப்பட்டன. சிறுமியின் கண்ணீர் கலந்த, சிதைந்த வாழ்வின் எச்சங்களை பேரரசர் ஒன்று விடாமல் கேட்டார். ஞானப்பீடத்தின் அதிபதி மிகவும் விசித்திரமான, யாருமே சிந்திக்காத, கனவில் கூட எண்ணாத அதீத புத்தி சார்ந்த, கூர்புத்தியின் வெளிப்பாடாகிய அக்கேள்வியைக் கேட்டார். பேரவையே அதிர்ந்தது. பேரரசு முழுவதும் அதிர்வலைகள் எழுந்தன. அக்கேள்வியைக் கேட்ட, ஒன்பது வயது சிறுமியின் அப்பாவும் அம்மாவும் சிலை போல் உறைந்து போனார்கள். சிறுமியை தாய் மார்போடு அணைத்து அப்பாவை அரண்டக் கண்களுடன் நோக்கினாள்.

பலரும் அக்கேள்வியின் உள்ளர்த்தங்களை தங்கள் சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்ப சாதகமாகப் பார்க்கத் தொடங்கினார்கள். தங்களுக்கும் வாழ்வு வந்துவிடும், இளமை திரும்பி விடும் என்று பகல் கனவில் மிதக்க ஆரம்பித்து விட்டார்கள் இனி வயது ஒரு பொருட்டல்ல என்று உள்ளப்பூரிப்பு கொண்டார்கள். அகத்தில் பூரிப்புடன், மனிதர்களுக்கு மட்டுமே கைவந்தக் கலையாகிய கவலையின் தோரணையை முகத்தில் காண்பித்தார்கள். இனிமேல், வயது பொருட்டல்ல விரும்பிய பெண்களை சொந்தமாக்கலாம் என்ற ஆசைகள் துளிர்விட ஆரம்பித்தன. இன்னும் பல பல ஆசைகளையும், பேராசைகளையும் ஆதீத ஆசைகளையும் அக்கேள்வி எழுப்பியது. 

அந்த கேள்வியின் அதிர்வலைகள் பேரரசு எங்கும் எழும்ப ஆரம்பித்தன. அரக்கனைப் போல சமூகம் மாறிக்கொண்டிருந்தது. மனசாட்சி அற்றதாக சமூகம் உருமாறும் தோரணை எங்கும் பரவியது. சிலரின் உள்ளத்தில் தொற்றிக் கொண்டிருந்த அச்சத்தின் மிச்சங்கள் எல்லாம் நிர்மூலமாக்கப்பட்டது. எங்கும் தீமைகள், காளான்கள் போல திடீரென முளைக்க ஆரம்பித்தன. ஆண்கள் எல்லாம் தீமையின் உருவாக வலம் வருவதானத் தோரணை பெண்கள் மனதில் உருவாகத் தொடங்கியது. 

என்னதான் அக்கேள்வி அது, “ஒன்பது வயது சிறுமிக்கு வாழ்வு கொடுக்க நாற்பது வயது ‘கிழவன்’ தயாரா? அவன் சம்மதம் சொன்னால், பேரரசரே தாலி எடுத்துக் கொடுத்து மிகவும் ஆடம்பரமாக இதுவரை சாம்ராஜ்யம் கண்டிராத விதத்தில் திருமணம் நடத்தப்படும் என்றும் தனது ‘ஆக்கப்பூர்வமான’ விருப்பத்தை முன்வைத்தார்.

அந்த பேரரசின் பெண்கள் அனைவரும், மறுநாள் தொடங்கி, வயது அறியாத விதத்தில் பெண்பிள்ளைகளைப் பொதிய ஆரம்பித்தார்கள். பிணத்தை துணிகளால் சுற்றுவது போல சுற்றிக் கொணடு நடந்தார்கள். பெரும்பாலும் அவர்கள் பாதம் வரை மூடி தூக்கிக் கொண்டு நடந்தார்கள். பாதங்கள் கிளர்ச்சியூட்டும் என்பதை அவர்கள் தங்கள் உள்ளுணர்வால் உணர்ந்திருந்தார்கள். தீர்ப்பைப் பற்றிக் கேள்விப் பட்ட வெளிநாட்டவர்கள், பெண்களுக்காக விமானத்தில் இருக்கையை முன்பதிவு செய்வதற்குப் பதிலாக, கூடுதலாக ஐம்பது, அறுபது கிலோ என பயணமூட்டையை எடுத்துச் செல்வதற்கான பணத்தைக் கட்டினார்கள். அவர்கள் கண்கள் மட்டும் தெரியும் விதத்தில் பெண்களை முழுமையாகப் பொதிந்து சாமான்களுடன் சேர்த்து அனுப்பினார்கள். விமானம் விட்டு இறங்கியவுடன் தோள்களில் சுமந்து வெளியே வந்தார்கள். பேரரசெங்கும் நடைபிணங்கள் போல, பல மூட்டைகள் சுமந்துத் திரியப்பட்டன. 

பேரரசன் இறந்து மண்ணோடு மண்ணாய்ப் போகும் வரை பெண் தேவதைகளைப் பெற்றெடுப்பதில்லை எனப் புதுத்தம்பதியர் பலர் தீர்மானம் எடுத்தனர். பலர் பெண் பிள்ளைகள் வேண்டாம் என்று சொல்லி கடவுளிடம் நீண்ட வேண்டுதல்களை ஏறெடுக்க ஆரம்பித்தார்கள். மொட்டையடிக்கலாம், கால்நடையாக புனித தலம் செல்லலாம் என்றெல்லாம். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்