"அவனுக வெளங்காத போணும்... வக்கம் கெட்டுப் போணும்... குடி முடிஞ்சு போணும்...'' தாடகை மண்வாரி இறைத்து அதை தொழுத வாறு சாபம் போட்டுக் கொண்டி ருந்தாள். “பெண்ணே ... மதி பெண்ணே சாபமிட்டது... மதி...'' என்று சந்தைக்குச் சென்று திரும்பியவர்கள் அவளது நாவின் கொடூரத்தைக் குறைக்க எத்தனித்தனர். “கும்... எனக்க வயிறு எரியுது.. பனையைப் போல இருந்தவன்... எனக்க மாப்பிள. இப்பக் கிடக்குது பாருங்க... இதச்செய்தவனுவ வௌங்காட்டிணும்...' தாடகையின் சாப வார்த்தைகள் தொடர்ந்தன. மண்வாரி கூரையின் மேல்தான் இறைத்தாள். அவளது உள்ளக் குமுறலுக்கு எதோ சாந்தி கொடுக்கும் வண்ணமாய் அமைந்தது அச்செய்கை.
தாடகை அப்படியே கொஞ்ச நேரம் வாசற்படியில் உட்கார்ந்தாள். சற்று நிதானித்தவள் வீட்டிற்குள்ளே எட்டிப்பார்த்தவாறு ''குடியன்... லே... நீ என்னத்துக்குவல அங்க போன... அங்க பொனு இருக்குன்னா போன. அவனுவளுக்க தெய்வத்தப் பிடிச்ச ஒனக்கென்னா நீக்கம்பா... அது ஆருக்ககாவு.. ஒனக்கக் கொப்பனுக்கதா...?''
தாடகை கணவன்பால் கொண்ட பாசமானது வசைமொழிகளாய் வெளிவந்து அவர்களுக்கிடையே உள்ள பிணைப்பை உறுதி செய்து கொண்டு நின்றது. கோபம் கொள்ளும்போது கணவனை 'அவன்', 'இவன்', 'லே', 'நீ' என்றெல்லாம்தான் பாசம் பொழிய அழைப்பாள். தாடகையின் மனத்திரைமுன் காலையில் நடந்த அந்த நிகழ்வுகள் ரணங்களின் மேல் வேல் பாய்ச்சினாற் போன்று உருண்டோடத் தொடங்கின.
காலையில்தான் அனைத்தும் நடந்தேறின. சுந்தனைப் பார்த்தால் குழந்தைக் கதைகளில் வரும் ஐம்பது யானைகளின் வலுவை உடைய அரக்கனைப் போல்தான் இருப்பான்... பத்துத் தலைகள் இல்லை. ஆனால் இதிகாச நாயகன் இராவணனின் வலிமை அனைத்தும் இவனுக்கும் இருந்தது. தொழில், பனையேறி பதனி இறக்குதல். பெரிய வெட்டுக்கத்தி மீசையும், கோடரி கிறுதாவும் வைத்திருந்தான். முகத்திலெல்லாம் முடியின் ஆதிக்கம் நிரம்பவே உண்டு. தடித்த உதடுகள்... கறுத்த மேனியன். உடலெல்லாம் குரங்கைப் போன்று முடி நிரம்பியே இருந்தது. அவனுடைய குரல் பாறையின்மேல் உரசினாற் போல் வெளிவரும். கரகரத்த குரல். தனி அசுரன்தான்... இதிகாசங்கள் உருவகிக்கும் அசுரனின் அல்லது அரக்கனின் அனைத்து ஒப்புமைகளையும் பெற்றவனாய்த்தான் இருந்தான். அவன் நிமிர்ந்து நடப்பதைப் பார்க்கும் குழந்தைகள் அஞ்சி விலகியே நிற்கும். அவன் கொஞ்சம் கள் மட்டும் ஊற்றிக் கொண்டால் போதும் நாட்டில் நடக்கும் அனைத்து அநீதிகளையும் பற்றி விலாவாரியாகப் பேசி அவனே அதற்கு தீர்ப்பும் கொடுத்து வசைமொழிகளால் தண்டனையையும் கச்சிதமாய் நிறைவேற்றி முடிப்பான்.
பாண்டிக்குப் பனையேறச் சென்றவன் நேற்றைக்கு இரவில்தான் வந்திருந்தான். காலையிலே யாரோ கொடுத்த கள் கொஞ்சம் அதிகமாகவே தலைக்குப் பிடித்திருந்தது. கொஞ்ச நேரம் அப்படியும் இப்படியும் பேசிக் கொண்டும் திட்டிக்கொண்டும் நின்றவனுக்கு என்ன தோன்றிற்றோ என்னமோ நாகக்கடவுளின் காவை நோக்கி தனது நடையைக் கட்டினான். தள்ளாடிச் சென்றவன் காவின் முற்றத்தை அடைந்தான்...... 'லே பாம்புக் கடவுளே.. அஞ்சுதல உள்ள தெய்வமே... நாகக்கடவுளே... நீ எனக்கவனாக்கும்.. நீ எனக்கவன்னா எனக்கவன்... உன்ன நான் இந்து கொண்டு போவன்....' வார்த்தைகளை உளறியவாறு காவுக்குள் நுழைந்தான்... இரண்டு சிலைகள்தான் காவுக்குள் இருந்தன. இவை நடுகாவுனுள் இருந்தன. அதைச்சுற்றி கற்களாலான சிறிய மதிற்சுவரும் எழுப்பப்பட்டிருந்தது ஏதோகடவுள் மனிதனின் பாதுகாப்பை அவசியமாய்த் கேட்டதைப்போன்று. காவினுள் நுழைந்தவன் மதிற்சுவருக்குள்ளே நுழைய முயல்பவனாய் சுவரின் மேல் எட்டிப்பிடிக்க எத்தனித்தான். கால்கள் அவன் விருப்பத்திற்கு இணங்காதவையாய் அவனை இழுத்து இழுத்து கீழேத்தள்ளிய வண்ணமாய் இருந்தன. கைகளால் எட்டி எட்டிப் பிடிக்க சுவரும் வலிதாங்காமல் கொஞ்சம் கொஞ்சமாய் இடியத் தொடங்கியது.
இதற்குள் காவு காவல் காத்து வந்த இருவருக்கும் தகவல் பறந்தது. இவர்களும் இதிகாச நாயகர்களைப் போன்று ஊர்காக்கும் காவுக்கு காவலர்கள் போலும்.... தோல் வெள்ளை வெளேரென இருந்தது. உரித்த கோழியைப் போன்று மூஞ்சியும் இருந்தது. முகத்தில் புருவங்களில் தவிர மயிர் என்று சொல்ல ஏதுமில்லை. மலையாளம் தான் அவர்களின் பேச்சுமொழி. அவர்களின் சாதியினர் மற்ற சாதியினரினின்று விலகியே இருந்தார்கள். அவர்கள் மேல் சாதியினர் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்... மொழி மட்டுமல்ல பழக்க வழக்கங்கள், குணநலன்கள் இவற்றிலும் அவர்கள் வேறுபட்டவர்கள்.
''ஆரடா அது.. புல்லன்ற மோன...'' என்று கொக்கரித்துக் கொண்டு வந்து சேர்ந்தனர்.... அழகிய மேனியைக் கொண்டவர்கள் ஆதலால் அவர்கள் உயர்ந்தவர்கள் என்றே வெள்ளைத் தோலை உயர்வுத்தன்மைக்கு இலக்கண மாய் வகுத்தவர்கள் சொன்னார்கள். வந்தவர்களின் முகம் சிவந்து, காதுகள் இரண்டும் குங்குமம் போல் நிறம் பூண்டு இருந்தன. வந்தவர்கள் சுந்தனை ஒருவழியாக புரட்டிக்கீழே போட்டனர். இருவரும் அவனுடைய உடல் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு அவனைத் தாக்கத் தொடங்கினர். குளத்தில் குளிப் பதற்காய் இறங்கும் எருமையின் மேல் கொக்குகள் வந்து இருப்பது போன்று காட்சியளித்தது அந்த நிகழ்வு. இரண்டு கைகளிலும் தங்களது சக்தியை எல்லாம் திரட்டி அவனைத் தாக்கத் தொடங்கினர்.
"இவன இந்நு விடருது... பிடிச்சு கெட்டணும்" என்றவாறு ஒருவன்சற்றே எழுந்து கயிறு ஏதாவது தென்படுமா என்று தேடத் தொடங்கினான். சுந்தன் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு கால்களை தரையில் ஊன்ற முயன்றவனாய் ஆடி அசைந்து எழுந்து நின்றான். ''டே... எவனுக்காவது தைரியம் இருந்தா ஒத்தக்கு ஒத்த வாங்கடா... மோதலாம்.... வாங்கடா அங்க போவம்...'' என்றவாறு சுந்தன் நடக்க இயலாதவனாய் ஓட ஆரம்பித்தான், பக்கத்தில் இருந்த தென்னந்தோப்பை நோக்கி. ஓடியவனின் கால்கள் தரையில் சரியாக ஊன்றாமல் தத்தக்க பித்தக்க என்று தான் நகர்ந்தன. ஓடியவன் குளக்கரையில் இருந்த ஒரு பெரிய கல்லின் மேல் மோதி நிலைதடுமாறி விழுந்தான். விழுந்தவுடன் குளத்தின் கலிங்கின் மேல் மோதி தெறித்துப் போனான். பச்சைப் பனைமரம் வந்து விழுந்தாற்போன்று சகதியும், சேறும் நிறைந்த குளத்தில் அவன் உடல் பதிந்தது.
காவும் குளமும் இணைந்தே இருந்தன. குளத்திற்கு 'காவுக்குளம்' என்றுதான் பெயர். நாகக்கடவுளை வணங்குபவர்கள் குளித்தப் பின்னர்தான் காவினுள் நுழைவர். அந்தக் கடவுளை வணங்குபவர்கள் ஏமான் சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான். குளத்தினுள் விழுந்தவனிடமிருந்து பேச்சு வரவில்லை. அசைவுகளோ தென்படவில்லை. தாடகை தலைவிரி கோலமாய் அங்கே வந்தாள். இவள் பாசம் என்னும் நிலையான வரம் பெற்றவள். நேசித்தவருக்காய் உயிர்கொடுக்கவும் துணியும் உன்னத சாகாவரம் பெற்றவள். தாடகை பருத்த, கரிய மேனியைத் தாங்கிய உடலை உடையவள். சேலையை அவள் விசேஷ வேளைகளில் மட்டும் தான் கட்டுவாள். மற்றபடி சாதாரண உடையில்தான் அலைவாள். இவளுக்கும் இராவணனின் தங்கை சூர்ப்பனகையின் பானை வயிறு. கட்டுமஸ்தான உடலுக்கு சொந்தக்காரி அவள். கணவன் பனையினின்று இறக்கி வைக்கும் பதனியை இவள் ஒருத்தியாகவே சுமந்து வருவாள். தலையிலே பானை, இடது இடுப்பிலே குடம், வலது கையிலே இன்னொரு குடம் தூக்கிப் பிடித்தவண்ணமாய். இம்மூன்றையும் பிறரின் உதவியின்றி தனியாக எடுத்து வர கருத்துப் படைத்தவள் அவள். பதனி வாசனை எப்போதும் அவள் உடலினின்று வந்து கொண்டு தான் இருக்கும். அவள் இயற்கையோடு ஒன்றியவள். எந்தக் கரடுமுரடான மலையிலும் ஏறி இறங்கக் கருத்துடையவள்.
தாடகையின் வரவைக் கண்ட வெள்ளத்தோல் கொண்ட இருவரும் கொஞ்சம் விலகியே நின்றனர். அவளை முகத்தோடு முகமாய் இன்றைக்குத்தான் நிறைவாய் பார்க்கிறார்கள். வேடிக்கைப் பார்க்கக் கூடியவர்களும் விலகிக் கொண்டனர். ''ஐயோ எனக்க மாப்பிள... யாருவல்ல இந்த கோலம் செய்தோ அவனுக்கு...." தாடகை ஒப்பாரி வைத்துக் கொண்டு அலறி அடித்தவண்ணம் கணவன் கிடக்கும் கோலத்தை தரிசித்தாள். அலங்கோலமாய் சேற்றினுள் கொஞ்சம் அழுந்தி இருந்த கணவனைக் காணச்சகியாதவள் குளத்திற்குள் ஓடினாள்.
கணவனின் இரண்டு கைகளையும் பிடித்து இழுத்து ஒருவழியாய் கரையை வந்தடைந்தாள். கணவன் மூர்ச்சையினின்றும் இன்னும் திரும்பவில்லை என்று கண்டவள் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்தாள். பனையேறி காய்த்துப் போயிருந்த கணவனின் நெஞ்சின் மேல் கீறல்கள் தென்பட்டன. சுந்தன் மூர்ச்சையினின்று கொஞ்சம் அறிவு தெளிந்தான்.
தாடகை சுந்தனை கைத்தாங்கலாய், அவன் கைகளுள் ஒன்றை தன் தோள் மேல் தூக்கிப் போட்டபின் அவனைத் தாங்கிப் பிடித்தவண்ணம் நடக்க ஆரம்பித்தாள். தாடகையின் நெஞ்சு கொதித்துக் கொண்டிருந்தது. அவள் 'பெரிய', 'பெரிய' வார்த்தைகளை உதிர்த்த வண்ணமாய் வசைபாடிக் கொண்டு கணவனை அரவணைத்துக் கொண்டுச் சென்றாள். பனை போன்ற கரடுமுரடான உடலைக் கொண்ட தாடகையும் சுந்தனும் பாசம் என்னும் கயிற்றால் பிணைக்கப்பட்டவர்களாய் இணைந்தே சென்றனர், இயற்கையோடு ஒன்றிய அவர்களது வாழ்க்கையைப் போல. சுந்தனின் தலை கொஞ்சம் தொங்கியவாறே இருந்தது. அவன் இன்னும் முழுச் சுரணைக்குத் திரும்பவில்லை. ஏதோ பலத்தில் கால்களை முன்வைத்து தாடகையின் உதவியுடன் சென்று கொண்டிருந்தான்.
வீட்டில் வந்தபின் கணவனை பாய் ஒன்றில் கிடத்தினாள். அன்று முழுதும் நாயாய், பேயாய் அலைந்து திரிந்து, கிராமத்து வைத்தியர்களையெல்லாம் சென்று பார்த்து எண்ணெயும் கஷாயமும் சேகரித்து வந்து கணவனை கவனிப்பதிலேயே முழுக்கவனம் செலுத்தினாள்.
மாலையில் சந்தையினின்று ஆட்கள் வீடு திரும்பும் நேரத்தில்தான் மண்வாரி வானத்தை நோக்கி இறைத்த வண்ணம் தனது ஏங்கல்களை அறிக்கையிடத் தொடங்கியது. ஆனால் தாடகைக்கு ஒன்று மட்டும் இன்னமும் விளங்க வில்லை. ஏன் தன் கணவன் காவிற்குச் சென்றான் என்பது.
தாடகையின் தந்தையின் வரவுதான் அவளை நிழல்களின் உலகினின்று நிஜ உலகிற்கு இழுத்து வந்தது. தாடகையின் தந்தை நிகழ்ந்தவை அனைத்தையும் கேள்விப்பட்டவனாய் தாடகையின் வீடு நோக்கி வந்தான். மாலையில் ஏறவேண்டிய பனைகளிலெல்லாம் ஏறி கூம்பு செதுக்கி கலையங்களில் சுண் ணாம்பும் தடவி விட்டுத்தான் வந்தான். அவன் கையில் ஒரு பெரிய பையும் அதனுள் சிலப் பொருள்களும் இருந்தன. பையினின்று கோழி ஒன்றின் 'கொக்... கொக்...' சத்தமும் கேட்டுக்கொண்டிருந்தது.
கிழவன் ஊர் தெரிந்த புகழ்மிக்க பனையேறி. மகளை அவனைப்போல பனை ஏறுபவனுக்குத்தான் கொடுப்பேன் என்ற சபதத்தைக் கொண்டவனாய் அதைகச்சிதமாய் முடிக்கவும் செய்தவன்.
கிழவன் தாடகையை நெருங்கி வந்தவனாய் அவன் மனதினுள் நிறுத்தி நிதானித்து சிந்தித்துச் செயல்படத் துணிந்த காரியத்தை மகளிடம் விவரிக்க முயன்றான். அவன் அனுபவம்மிக்கவன். ஊரில் நிகழும் காரியங்களுக்கெல்லாம் காரண காரியங்களை தெரிந்து வைத்திருந்தவன்.
''பெண்ணே தாடக... எனக்குத் தோணுது ஒனக்க மாப்பிள்ளைய அந்த யச்சிதான் பிடிச்சிருப்பாண்ணு. அல்லங்கி பின்னெ என்னத்துக்கு அவன் அந்தக் காவுக்கு எழுந்தருளினாய்... அவதான் இவனக் கூடிக்கிடக்க.. அவதான் இவன காவுக்கு அடிச்சோண்டு போனது... யச்சி ஒங்களுக்க மேல் ஏதோ கோவம் கொண்டு நிக்குது.... அவளுக்கு என்னெங்கிலும் செய்துதான் ஆவணும்.... அவளுக்கு கோழி.... கரும் பெடக்கோழி குடுத்தா அடங்குவா... குடுத்தில்லெங்கி...... பின்னீடு என்னென்ன வருமோ...''
''என்னெண்ண தாடக கொப்பன் அங்க வந்திருந்தோண்டு காதுல ஊதுதான். எனக்கு பேய் பிடிச்சிருக்குண்ணா ... பெண்ணே அது யச்சி... அவ எங்களுக்கு காலம் காலமா தொண நிக்குதவா... காலம்காலமா அவளுக்கு கோழி ரத்தம் குடுத்குததுதான். அவ என்னப் பிடிச்சாலும் நல்லதுக்குத்தான் பிடிப்பா...'' சுந்தன் உள்ளறையினின்று குரல் கொடுக்கத் தொடங்கினான். அவனது தெளிவுரை மீண்டும் தொடர்ந்தது.
''எங்களுக்க சொத்தில இருந்தது தான் அந்தக் காவும் அங்க இருக்கக் கடவு ளும் எல்லாம். தோலில கொறச்சு வெளுப்புள்ள அந்த நாய்ப்பயலுவ வந்த உடனே இங்க உள்ள சாணான்மாரு சேர்ந்து காவ அவனுவளுக்குத்தான் காக்கத் தெரியும்னு சொல்லி குடுத்தானுவ... ம்... இப்ப எனக்குப் பேய் பிடிச்சிருக்காம்... அதுகொண்டு அவனுவளுக்க தெய்வத்த எடுக்கப் போனேனாம்.... அப்படிப் பிடிச்சாலும் அது நல்லதுக்குத்தான்...''
தாடகை எதையும் சொல்லாமல் அமைதியாய் உட்கார்ந்தாள். கணவன் சொல்வதில் நிறைய யதார்த்தங்கள் உண்டு என்பதை மட்டும் அவளுடைய உள்ளம் உணர்த்திக் கொண்டிருந்தது. தாடகை தனது தந்தையின் வார்த்தை களுக்கு சரிவைக்கவுமில்லை. யக்ஷிக்கு கோழிபலி கொடுக்க கிழவனைக் கேட்டுக் கொள்ளவுமில்லை.
கிழவன் எதையும் கண்டு கொண்டதாய்த் தெரியவில்லை. தான் செய்ய நினைத்ததை செய்யத் துணிந்தவனாய் செய்கையில் இறங்கினான்.
கிழவன் தன்னோடு இருவரை அழைத்து வந்திருந்தான். அவர்கள் யக்ஷிக்குக் கொடுக்கும் இடமும் குளக்கரைதான். ஆனால் மறுகரை... இரண்டு கமுகு மரங்களுக்கிடையே யக்ஷிக்குக் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் எல்லாம் விரைவாய் நடந்தேறத் தொடங்கின.
மூன்று வாழை இலைகளின் நடுபகுதிகள் போடப்பட்டன. இளந்தென்னக் கீற்றை வேய்ந்து இரண்டு கமுகம் மரங்களுக்கிடையே கட்டினர். தோரணமாய் சில கீற்றுகளையும் தொங்கவிட்டனர். இலைகளின் மேல் கமுகம் பூ, தெற்றிப்பூ, வாழைப்பழசீப்பு இரண்டு, சர்க்கரை, அவல் இவையும் வைத்தனர். யக்ஷிக்கு இரத்தத்தால் தான் பலி ஒப்புக் கொடுப்பார்கள். வழிபாடும் இரத்த வழிபாடே. இரத்தத்திற்காகத் தான் யக்ஷி அலைந்து திரிகிறாள் என்பது பரம்பரை நம்பிக்கை. மனித இரத்தத்திற்கு ஈடாக கோழியின் இரத்தத்தைக் கொடுத்து அவளுடைய ரத்த தாகத்தை தணித்தனர் சாணார்கள். அப்படியாக அவளுடைய கோபாவேசத்தினின்று மனிதர்கள் தப்பிப்பிழைத்துக் கொண்டனர். நேரம் நன்றாக இருட்டிய பின்புதான் பலி ஒப்புக்கொடுப்பு நடந்தேறும்.
கோழியின் இரண்டு சிறகுகளையும் அடக்கி தன் ஒரு கைக்குள் பிடித்தான். கிழவன். நல்ல துடிப்பான கோழி அது. கிழவன் கத்தியைக் கையில் எடுத்து கோழியின் தலையை ஒரே வெட்டில் துண்டித்தான். ரத்தம் பீச்சிக் கொண்டு இலைகளிலும் மற்றப் படையல்களிலும் தெறித்தது. கழுத்தினின்று வடிந்து கொண்டிருந்த இரத்தத்தை மற்ற இடங்களிலெல்லாம் கிழவன் தெளித்தான்.
நாகக் கடவுளுக்கு காவில் இதையெல்லாம் பலியிடவும் மாட்டார்கள். இப்படியான வழிபாடும் அங்கே நடந்தேறாது. நாகக்கடவுளுக்கு சர்க்கரைப் பொங்கல், பால் பொங்கல் என பல நேர்த்திக் கடன்களும், வழிபாடுகளும் செலுத்தப்படும். நாகக்கடவுளின் தொல்லையினின்று தப்புவிப்பதற்காக வெடி வழிபாடும் உண்டு. வாரத்திற்கு இரு முறை வெடிவைப்பவன் வருவான். காவிற்கு நெருக்கமாய் வீடு வைத்திருப்பவர்கள் அனைவரும் வெடிக்கு ஐம்பது காசு என்ற விகிதத்தில் வெடி நேர்ச்சை நிறைவேற்றி தங்களை நாகக்கடவுளின் தொல்லையினின்று தப்புவித்துக் கொண்டார்கள்.
ஆனால் பேயினுடைய தொல்லை தீர இரத்தந்தான் ஒரே வழி. கிழவன் கோழியைப் பலி கொடுத்ததால் இனி தனது மருமகனுக்கு தொல்லைகள் ஏதும் நேராது என நினைத்தவனாய் திரும்பினான்.
தாடகையின் மனதில் எண்ண அலைகள் எழும்பியவண்ணம் இருந்தன. வெளியே உட்கார்ந்திருந்தவள் வீட்டிற்குள் சென்றாள். காவு காவல்காக்கும் அந்த இருவரின் முகங்களும் அவள் முன் வந்து போயின. கணவனை உற்றுப் பார்க்கத் தொடங்கினாள். ஏதோ வெறித்தனம் அவள் மனதினுள் மெல்லமாய் நுழைய ஆரம்பித்தது. கணவனின் மார்பில் ஏற்பட்டிருந்த காயங்கள் இரத்தக் கோடுகளாய் கொஞ்சம் தடித்த வண்ணம் வாய்ப்பிளந்து கொண்டு நின்றன. தாடகை சுந்தனின் தலைமுடியை கோதிவிட்ட வண்ணமாய் உட்கார்ந்திருந்தாள். அவள் கணவனை அங்குலம் அங்குலமாய்ப் பார்க்கத் தொடங்கினாள். யக்ஷியினுடைய ஞாபகமும் அவள் முன் வந்தது. ஊரார் வருணிக்கும் யக்ஷியினுடைய, அவள் இதுகாறும் விளைவித்த ஊறுகளைப் பற்றியதுமான சிந்தனைகள் அவள் மனத்திரையில் உருண்டோடத் தொடங்கின.
தலைவிரி கோலமாய், நெடிய கரிய உருவத்துடன், கைவிரல்களில் நீண்ட நகத்துடன், இரண்டு பற்கள் நீண்டு வாயின் இருமுனைகளிலும், இரத்தம் குடிக்க ஆசையாய் இருக்கும் அவளுடைய வெறித்த பார்வைகள்... அவளுடைய மாய உருவங்கள்.... பிறரை வஞ்சிக்க எடுக்கும் உருவங்கள்...... பூனையின் வடிவம்... அழகிய பெண்களின் உருவம்... 'அக்கரையில் உள்ள சோமனுக்க முன்ன அது பூச்சக்க உருவத்திலதான் முதல்ல வந்ததாம்... அவன் கிழங்கு வாங்க போனப்போ... அங்க அப்புறத்தில் உள்ள மலையில்... கிழங்கு வாண்டிக்கொண்டு வரும்போ வழியில ஒரு கறுத்த பூச்ச... கண்ணு ரண்டும் தீ போல எரிஞ்சு கொண்டு.... சோமன் இரண்டு அடிதான் முன்னோட்டு வச்சிருப்பான்... திரும்பிப் பார்த்தா ஒரு பெண்ணு, சுந்தரிப் பெண்ணு... இஞ்சவா... இஞ்சவான்னு, தலையை ஆட்டி விளிச்சோண்டு... பய வீட்டுல வந்து விழுந்தான்... ஜன்னியும் வெட்டலும்... பின்னீடு பயலுக்கு கொறஞ்சது யக்ஷிக்கு கோழி ரத்தம் குடுத்த பின்னீடுதான்... இந்நும் இடை இடையே சோமனுக்கு அந்த வெட்டுண்டு .....' தாடகையின் உதட்டினின்று இவை வார்த்தைகளாய் மௌனமாய் ஞாபகத்தின் உந்துதலால் வெளிவந்தன.
'யச்சி.... யாருக்க யச்சி.... ஒந்நும் இல்ல...' தாடகை மனதை தெளிவுப்படுத்த முயன்றாள். ஆனால் யக்ஷியைக் குறித்த அந்த உள்ளத் திரையின் வண்ணப் படங்கள் அவளுடைய உள் மனதில் ஏதோ தெம்பையும் பழிவாங்கும் எண்ணங்களையும் உருவாக்கி விட்டன.
பேயின் ஞாபகங்கள் கொஞ்சமாய் மறைந்து கணவன் சொன்ன வார்த்தைகள் மனதை அலைக்கழிக்கத் தொடங்கின. ''நக்கிச்சூ.... பயலுவ... நம்பளக்க கையிலேந்து காவ வாங்கினதும் போதாதுண்ணு, இப்ப காவுக்க உள்ள ஆளயும் விடல்ல.'' தாடகை சத்தமாய் இவ்வார்த்தைகளைச் சொன்னாள்.
சுற்றம் யாவும் உறங்கின. கணவனும் அரை மயக்கத்தில் இருந்தான். அவன் வாய் ஏதேதோ உளறத் தொடங்கியது.
0 கருத்துகள்