குளக்கரையில் நெருப்பு பற்றி எரிந்து கொண்டிருந்தது. கைதைக்கு யாரோ தீவைத்திருக்கிறார்கள். காலையில் அக்காவுக்காக நான் தாழம்பு அதிலிருந்துதான் பறித்தேன். பச்சை கைதை ஓலைகள் எரிந்து தணியும் ஓசை கேட்டுக் கொண்டிருந்தது. திண்ணையிலிருந்துப் பார்த்தப் போது நெருப்பு குளத்திலும் எரிவது போல் தோன்றியது. யாரோ குளத்தில் குளிக்கிறார்கள். ஐயப்பப் பக்தனாகத்தான் இருக்கமுடியும். பக்கத்தில் குளத்தின் அருகில் ரப்பர் மரங்களுக்கிடையே இரண்டு மூன்று பேர் நின்று கொண்டிருந்தார்கள். 'பேய்க்குக் கொடுக்க'த்தான் வந்திருக்கிறார்கள். இளம் தென்னை ஓலை வேய்ந்தாயிற்று. இரண்டு இரப்பர் மரங்களுக்கிடையே கட்டிவிட்டு கீழே இரண்டு வாழை இலைகளின் மேல் பழம், வத்தி, கமுகம்பூ எல்லாம் வைத்தாயிற்று. கோழியை வெட்டுவதற்காக ஒருவன் கோழியை அதன் கழுத்தில் துாக்கி பிடித்தான். கோழியை வெட்டுவதை என்னால் பார்க்க இயலாது என முகத்ததை திருப்பிக்கொண்டேன். கோழி இறக்கைகளை பலமாக அடிப்பது செவியில் நன்றாக விழுந்தது. தலையற்ற கோழியை சாமி எடுத்துக்கொண்டான். இதற்குள் 'ஐயப்பசாமி' குளியல் முடித்து கரையில் இருந்த நாகக்கடவுளின் காவிற்குள் சென்று “சாமியே சரணம் ஐயப்பா" என்று சொல்லி தொழுவது கேட்கத்தொடங்கியது.
மூலையில் அக்கா இருக்கும் தைரியத்தில் தான் நான் திண்ணையில் இருந்தவாறு இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். அம்மா நடு அறையில் உட்கார்ந்திருந்தாள். மாலை நான்கே கால் மணிக்கு உட்கார்ந்தவள் இடையில் விளக்கை ஏற்றமட்டும் தான் எழுந்தாள். அதன் பின்னும் அதே இடத்தில்.
அம்மாவின் முகமெல்லாம் இதற்குள் வீங்கிப்போயிருந்தது. ஏதோ சக்தியை வரவழைத்தவளாய் "ஏம்பல வெளியில இருக்க'' என்ற கேள்வியோடு நிறுத்திக்கொண்டாள். திண்ணையில் விளக்கு கொஞ்சம் வெளிச்சத்தை தந்து கொண்டிருந்தது. மண்ணெண்ணெய் சுத்தமாய் வற்றிவிட்டது. திரியில் இருந்த எண்ணெயின் நனைவால் விளக்கு வெளிச்சம் தந்து கொண்டிருந்தது.
நான் உள்ளே போகலாம் என நினைத்தவனாய் மெல்ல எழுந்தேன். நான் எழுந்திருக்கவும் கிணற்றினுள்ளில் வாளியும் கயிறும் விழவும் ஒன்றாய் இருந்தது. கைகள் விறைத்து நெஞ்சம் படபடத்தது. யாரோ?.. எவரோ?.. திரும்பிப்பார்க்க பயம். அக்காளைப் பார்த்தேன். அக்கா அங்கே தான் இருக்கிறாள் என்பதை உறுதி செய்து விட்டு கிணற்றங்கரையில் பார்த்தேன். கிணற்றின் அருகில் உள்ள தொட்டியின விளிம்வில் நெருப்பு பிழம்புகள் போல் இரண்டு தென்பட்டன. "அம்மா" என்று செவியை பொத்திக்கொண்டு கதற ஆரம்பிக்குமுன் புத்தி சொன்னது "பூனை" என்று. நெஞ்ங்சத்துடிப்பு கொஞ்சம் நிதானமானது. அப்படியே நின்றேன்.
வயல் வரம்பில் தீப்பந்தம் ஒன்று முன்னும் பின்னும் அசைந்த வண்ணம் சென்று கொண்டிருந்தது. அச்சம் தொற்றிக் கொண்டது. பேய்க்கதைகள் ஞாபகத்துக்கு வந்தன. “பேய்க்கு கொடுத்ததால் பேய்கள் ஊரை விட்டுப் போகிறதோ?' மனம் ஏதேதோ சொல்லி குழம்பிக்கொண்டது. அம்மா சொன்ன கதை ஞாபகத்தில். "நாகப்பாம்பு காவு விட்டு காவுக்குச்செல்லுமாம் தீப்பந்தம் வடிவில் தான் செல்லுமாம் சிலவேளை அதுவோ?''
"சே.. இருக்காது அப்படியானா நம்ப வீட்டு பக்கமாத்தான் போணும் இரண்டு காவுக்கு இடையில தான் நம்ம வீடு. சீ ஏன் நான் இப்படி என்னேைய குழப்பிக்கொள்கிறேன். அது ஜங்சனுக்கு பொருள் வாங்கப் போனவங்க திரும்பி போறது'' காரணம் சொல்லி மனம் அமைதிப்படுத்த முயன்றது.
குளக்கரையில் கைதைக்கொம்புகளிலிருந்து புகைவந்து கொண்டிருந்தது. காற்றில் தீக்கனல்கள் பறந்து மங்கின. கீழே சருகுகளில் பிடித்த நெருப்பு இன்னும் அணையாமலே இருந்தது.
பக்கத்து வீட்டில் ஏதோ சலசலப்பு குடிகார கணவன் வந்திருக்கிறான். வழக்கம் போல் வாய் நல்ல வார்த்தைகளை வெளியிட்டது. "ஏன் சும்மா இருந்துகூடியா?" மூத்தமகனின் அதட்டல் சத்தம் கேட்டது. குடிகாரனின் வாயில் பீடிக்குச்சு இருந்தது. புகையை இழுக்கும் போது கனல் நன்றாகத் தெளிந்தது. "லே உள்ள ஏறினால்லியா?" அம்மா என்னைப்பார்த்துக் கொஞ்சம் சத்தமாகவே சொன்னாள். பக்கத்தில் சத்தம் வந்ததால் ஒருகணம் உடல் நடுங்கிற்று.
காரிருளில் குடிகாரனின் வார்த்தைகள் சத்தமாய் ஒலித்ததால் என்னுடைய பயம் கொஞ்சமாய் குறைவதுபோல் தோன்றிற்று. ஓங்கி ஒலித்த அவனது குரல் எனது மனதின் படபடப்பை கொஞ்சம் அமைதிப்படுத்தியது. "ம்.. பேச்சுக்குத்தான் எவ்வளவு வலிமை” என்று நான் சொல்லிக் கொண்டேன்.
குடிகாரன் உரைக்கிடையில "இடிவிழுந்த பயலுவ'' என்று சொல்லி யாரையோ சபித்தான். வானத்தில் மின்னல் தோன்றி மறைந்தது. அவனது சாபங்கள் எனக்குள் ஆறுதலாய், சாந்தியின் கீற்றுகளாய் பதித்தன.
இதற்குள் ஏதோ சத்தம் கேட்டது குடிகாரனின் வீட்டினுள் இளையமகன் தகப்பனை அடித்திருப்பான். "எல்லாருமா அவன அடிச்சு கொல்லுங்கால'' மனைவி கோபமாய் கத்தினாள். குடிகாரனின் சத்தம் வரவில்லை. எனது பயத்தை குறைத்துக் கொண்டிருந்த பயங்கர வார்த்தைகளும் அடங்கின.
மீண்டும் பயம் என்னை விழுங்க ஆரம்பித்தது. திண்ணையில் போய் நான் உட்கார்ந்தேன். வீட்டினுள் அமைதி. அப்பா வாங்கிவந்த கடிகாரம் இதயத்துடிப்பு போல் சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. மயான அமைதியில் உட்கார்ந்திருந்த எனக்கு 'அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது' என்ற நம்பிக்கையை மட்டும் பயத்தினிடையே அது கடிகாரத்தின் ஓசை தந்துக் கொண்டிருந்தது.
குடிகாரனின் சாபத்தைக் கேட்டோ என்னமோ வானம் மின்னலைத் தொடர்ந்து சற்று அதிகமாகவே இடிக்க ஆரம்பித்தது. தென்னையிலிருந்து ஓலை அடர்ந்து விழும் சத்தம் கேட்டது. சிறிது தூறல்கள். "லே பிள்ள துணி எடு மழ பெய்யும் போல இருக்கு” அம்மா சொன்னாள். அம்மாவின் குரல் கம்மியிருந்தது. அம்மாவின் அழகான முகம் வீங்கிப்போய், பெருமூச்சு இடையிடையேவிட்டாள். உதடுகளை அசைத்து அம்மா ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். அம்மா செபம் பண்ணுகிறாள் விளக்கு இன்னும் உயிர்மூச்சை விடத்தயாராயில்லை. அக்கா கவனித்திருக்கிறாள். மண்ணெண்ணெய் ஊற்ற மனமில்லாதவளாய் இருந்த இடம் நகராமல் அப்படியே இருந்தாள்.
நான் எழுந்தேன். பயம் தான். கிணற்றங்கரையில் பார்த்தேன் பூனை அங்கே இல்லை. சுற்றும் பார்த்தேன் தீப்பந்தம் பிடித்துக் கொண்டு ரோட்டில் யாரோ சென்று கொண்டிருந்தனர். என் கால்கள் வேகமாய் நகர்ந்தன. அவர்கள் வீட்டை கடந்து செல்லும் முன் துணிகளை பொறுக்கி கொண்டு வீட்டிற்குள் நுழைந்தேன்.
கடிகாரச் சத்தம் மீண்டும் காதில் ஒலிக்க ஆரம்பித்தது அப்பாவின் ஞாபகம் வந்தது "அப்பா எப்படி இருக்காரோ ஒண்ணும் ஆகாது" என திரும்பத் திரும்ப உள்ளம் உறைத்தது. "அப்பா... அப்பா...'' என இதயம் வேகமாய் துடிப்பது போல இருந்தது.
அண்ணன் இவ்வேளைக்கும் மெடிக்கல் காலேஜ் போய் சேர்ந்திருப்பான். மாமா தான் அழைத்துச் சென்றார். பக்கத்து ஊர்க்கார அண்ணாவுக்கு வீட்டில் வந்து விஷயத்தை சொல்லும் மனத்திடம் இல்லை போலிருக்கிறது. மாமா வந்தார். வழக்கமாக "அக்கோ '' என வீட்டை நெருங்கும் போதே கூப்பிடுபவர். இன்று கூப்பிடவில்லை அண்ணன் வாழைக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்தான். அவனை கூப்பிட்ட மாமா காதுக்குள் ஏதோ கிசுகிசு என்று வைத்தார். அம்மா இதற்குள் "என்னல றோசு " என்று கேட்ட வண்ணம் வந்தாள். நான் பள்ளியிலிருந்து அப்போதுதான் வந்து அம்மாவின் அருகில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
"ஒண்ணும் இல்ல அக்கா'' என்று சொல்ல ஆரம்பித்த உடன் ஏதோ விஷயம் இருக்கிறது என்ற மனதுக்கு உறைத்ததால் நானும் அம்மாவின் பின்னால் ஓடிவந்து சேலையை பிடித்தவண்ணம் நின்றேன். "ஒண்ணும் இல்ல அக்கா" மாமா மீண்டும் ஆரம்பித்தார். "மச்சினனுக்கு .... மரம் முறிக்கப்ப...'' மாமா தொடர முடியாமல் ஒருகணம் தவித்தார் "ஏதோ சிறிய அடியாம்" வாய் பொய் சொல்கிறது என்பதை தரையில் ஊன்றியிருந்த கண்கள் எனக்கு உறுத்தியது. "வலுதா ஒண்ணும் இல்லியாம் " எதிர் மறையாய் உண்மையைச் சொன்னார். "மெடிக்கல் காலேஜ்ல கொண்டு போனா சீக்கிரமா குறயும்ணு அங்க கொண்டு போயிருக்காங்க. மருமோன் போனா கொஞ்சம் உதவியா இருக்கும்" மாமா சொல்லவந்ததை ஒருவழியா திக்கித்திணறிச் சொல்லி முடித்தார்.
அம்மா ஏதேதோ கேட்க முயல்வதை நான் கண்டேன். "ம்..." வேறு சொற்கள் எதுவம் வரவில்லை. கண்ணீர் மட்டும் தான் ஒழுகியது. என்னை அணைத்துப் பிடித்துக் கொண்டாள் ஏதோ பாதுகாப்பு இழந்தவள் போல். மாமா போய்விட்டார். அண்ணன் ஏதாவது சொல்லி அம்மாவை அமைதிப்படுத்தலாம் என்று நினைத்து அருகில் வந்தான் அவன் கண்களும் நிறைந்திருந்தன. முடியவில்லை... அப்படியே போய்விட்டான். "அப்பாவுக்கு ஒண்ணும் ஆகாது'' மனம் உறுதியாய் சொல்லியது. 'ஏன் மெடிக்கல் காலேஜுக்கு கொண்டு போனாங்க" மாமா சொன்ன காரணம் நம்பத்தக்கதாய் இல்லை.' ரோட்டில் சந்தைக்கு போன பெண்களின சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது "பாவம் சுந்தரன் ஆளு'' யாரோ அப்பாவுக்காக இரங்கும் வார்த்தைகள் கேட்டதும் காதுகள் கூர்மையாயின. “பொழக்கிற காரியம் கஷ்டம் தானாம்" யாரோ ஒருத்தியின் குரல் இடியாய் வந்து காதில் முழங்கி இதயத்திற்குள் ஆழ்ந்து இறங்கியது. அம்மாவின் துயரமெல்லாம் ஒருநொடியில் பெரும் அழுகையாய் வெளிவந்தது. சமைக்க அரிசி எடுத்து வந்த அம்மா அப்படியே உட்கார்ந்து விட்டாள்.
இப்போது குடிகாரனின் வார்த்தைகளால் அப்படிச் சொன்னவளை மனதில் திட்டித்தீர்த்தேன் "ஒருவேளை அவள் சொன்னது உண்மையானால்...'' சபல மனம் சஞ்சலப்பட ஆரம்பித்தது. நரி ஊளை இடும் சத்தம் கேட்டது. நாய்கள் குரைக்க ஆரம்பித்தன. நாய்களின் கூட்டம் குரைப்பது ஏதோ பெரும் சண்டை நடப்பது போல் இருந்தது. மனம் வலியால் துடித்தது கைகளும் கால்களும் மரத்துப்போய் இருந்தது. நெற்றியில் சூடுதட்டியது.
மயான அமைதியில் நானும் ஊசலாடும் கடிகாரமும், இணைந்திருந்தோம், கூட அப்பாவின் ஞாபகமும். திடீரென வண்டியின் காரன் ஒலி கேட்டது. ஒளிக்கீற்றுகள் ஜன்னல் வழியாக உள்வந்தன. அக்கா எழுந்துவிட்டாள் ஜன்னல் கம்பியின் நிழல் அவள் நெற்றியில் விழுந்து அப்படியே கீழிறங்கியது.
மனப்பாரம் அதிகமாயிற்று அப்பாவைக் கொண்டு வருகிறார்களோ? 'சந்தைக்கு போனவளின் சொற்கள் உண்மையோ? இதயம் பயங்கரமாய் இடிக்க ஆரம்பித்தது. கால்களில் நடுக்கம். தட்டுத்தடுமாரி நான் எழுந்தேன். அம்மா எழுந்திருக்கவில்லை. அம்மா கொஞ்சம் மயங்கிவிட்டாள் போலிருக்கிறது. மரத்து போய் இருந்த கைகள் நடுங்க ஆரம்பித்தன. "இந்த நேரத்தில் வண்டி... அப்பாவாகத்தான் இருக்கவேண்டும்" சஞ்சல மனம் தீர்மானம் நிறைவேற்றியது. இல்லை இல்லை... கடிகார மணி பத்து முறை இரட்டைகளாய் அடித்தது 'அதில் அப்பா இல்லை' என்று அடித்துச் சொல்வது போல்பட்டது. "அம்மா காரு வருதும்மா காரு'' இதுவரை அமைதியாயிருந்த அக்கா இவ்வளவும் சொல்லி விட்டு அழ ஆரம்பித்தாள். அம்மாவைத் திரும்பிப் பார்த்தேன். "ஐயோ ஆண்டவா" என்று சொன்னவள் எழுந்திருக்க முயன்றாள். முடியவில்லை அவளால்.
கார் வந்து கொண்டிருந்தது. ரப்பர் மரங்களுக்கிடையே ஒளிவெள்ளம் விழுந்தபோது ஏதோ நெடிய உருவங்கள் ஒடுவது போல் இருந்தது. வீட்டின் அருகில் வண்டிவந்து நின்றது. எனது இதயமும் ஒருகணம் ஸ்தம்பித்தது 'ரிவேர்ஸ் லைட்' எரிந்தது. ஒருநிமிடம் நின்றது. யாரும் வண்டியிலிருந்து வெளியே வரவில்லை உள்ளே விளக்கும் எரியவில்லை. வீட்டு முற்றத்தை நோக்கி வண்டி 'ரிவேர்ஸ்'-ல் வந்தது. இதற்குள் அக்காவும் அம்மாவும் பயங்கரமாய் கதற ஆரம்பித்து விட்டனர். பக்கத்து வீட்டு குடிகாரன் மனைவியும் மக்களும் ஓடிவந்து விட்டனர். இதற்குள் வந்த கார் புழுதியைக் கிளப்பிக்கொண்டு முன்நோக்கி ஓடி சாலையில் சென்று ஒளியைப் பாய்ச்சிக் கொண்டு இருட்டைக்கிழித்த வண்ணம் சென்றது.
எங்கள் ஊருக்குள் எந்த வண்டி வந்தாலும் எங்கள் வீட்டுபக்கம் வந்துதான் திருப்பி ஆக வேண்டும். "பாவிப்பயலுவ வண்டி கொண்டுவரக் கண்ட சமயம் '' குடிகாரன் மனைவி திட்டியவண்ணம் நகர்ந்தாள்.
நான் திண்ணையிலிருந்த விளக்கைப்பார்த்தேன் கடைசி மூச்சை விடும் தருவாய்க்கு விளக்கு எட்டிவிட்டது. "அம்மா விளக்கு அணையப் போகுது'' அக்கா சொன்னாள். அம்மாவுக்கு சற்று புத்துணர்ச்சி வந்தது போல் இருந்தது 'இனி ஒண்ணும் ஆகாது என மனம் சொல்லிற்றோ என்னமோ?' மண்ணெண்ணெய் கேனை அம்மா எடுத்துவந்தாள். விளக்கு அணையாமல் திரியை ஏற்றி வைத்து மண்ணெண்ணெய் ஊற்றிவைத்தாள். விளக்கின் அருகில் செபம் பண்ண உட்கார்ந்தாள் அம்மா. நான் அம்மாவின் மடியில் தலையைச் சாய்த்து சற்று அயர்ந்தேன். 'பயலுக்கு மேலு காயுது' அம்மா சொன்னாள். விளக்கு வெளிச்சத்தில் அக்காவின் முகம் நன்றாய் தெரிந்தது தாவணியால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தாள். எண்ணெயை உறிஞ்சிய விளக்கு கரும்புகையை விட்டு நீளமாய், சுடர்விட்டு எரிய ஆரம்பித்தது.
0 கருத்துகள்