கோயிலில் பலிபீடத்திற்கு மேலே சிலுவையில் தொங்கும் இயேசுவை பார்த்துக் கொண்டு நீண்ட நேரம் இருந்ததுண்டு. எங்களுடைய பழைய கோயிலில் அதுதான் இருந்தது. ஏனோ அது இயத்தோடு ஒட்டிப் போய்க் கொண்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது கிடைக்கும் நிம்மதி வேறெங்கும் கிடைப்பதில்லை. எங்கள் சின்ன வயதில் பங்குத்தந்தையாக இருந்த பெரிய பாதர், அந்தச் சிலுவையை சுட்டிக் காட்டித் தான் எங்களுக்கு ஒழுக்க நெறிகளைக் கற்பிப்பார். குறிப்பாக அவருடைய தலையில் சுமத்தப்பட்டிருக்கும் முள்முடியும், முகத்தில் வழியும் இருத்தமும் சுட்டிக் காட்டி, "இது யாருக்காக என்று தெரியுமா? உங்களுக்காக. நீங்கள் கெட்ட வார்த்தைப் பேசும் போது, இயேசுவின் தலையில் முள் குத்தும். நீங்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளும் போது, இயேசுவின் நெற்றியிலிருந்து இரத்தம் வடியும்."
பிற்காலத்தில், அதை எங்கள் கோயிலிலிருந்து மாற்றிவிட்டு பூ போன்ற சிலுவையை வைத்தார்கள். இதைப் பார்த்து விட்டு வந்த அக்கா புலம்பித் தீர்த்தாள். "அது என்ன வெச்சிருக்கு... கோயிலுக்குப் போகவே தோணல... அழகா இருக்கு ஆனா செபம் செய்யத் தோணலியே." நாம் மகிழ்ச்சியின் மக்கள் அதனால், தொங்கும் இயேசுவைப் பார்த்து அழ வேண்டாம் என்று யாரோ போதனைச் செய்து கொண்டிருந்தார்கள் ஆலயத்தில். அவ்வார்த்தைகள் ஏனோ மனதில் ஒட்டவில்லை.
இன்றும் சிலுவையில் தொங்கும் இயேசுவுடனான உறவு தீர்ந்து விடவில்லை. சிலுவையில் தொங்கும் இயேசு வாழ்வின் பகுதியாகி விட்டார் என்றே தோன்றும். சிலுவையில் தொங்கும் இயேசுவின் உருவம் இருக்கும் ஆலயங்களில் நீண்ட நேரம் இருந்து செபிக்கத் தோன்றும், மற்ற இடங்களில் அழகை ரசித்து விட்டு நகரத் தோன்றும்.
அந்த சிலுவை இன்று வேறு பல அர்த்தங்களைத் தருகின்றன. இளம் வயதில் பட்ட பாலியல் துன்புறுத்தல்களில் கதைகளைப் பேசும் பெண் பிள்ளைகள் உண்டு. மூளையில் கிறுக்கப்பட்ட பாலியல் அறிவுகள். மாமா, சித்தப்பா, வாடகைக்கு இருந்த தாத்தா, சொந்த அப்பா என கொடூரர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இப்பிள்களைகளுக்கு என்னப் பதில் சொல்ல முடியும். பாலியல் குழப்பங்களுடன் வாழும் இப்பிள்ளைகளின் வாழ்வை சீரழித்தவர்களை சிறையில் அடைக்கச் சொல்லவா? ஒருவேளை அவர்களும் இது போன்று துன்புறத்தப்பட்டிருக்கலமோ? அழகானப் பிள்ளைகள் உள்ளம் நிறைய காயங்களும் உள்ளத்தைத் திறக்கும் போது, எதைச் சொல்லி ஆசுவாசப் படுத்தலாம்? அவர்களிள் காயங்களுக்கு என்ன தான் மருந்து போடலாம்? அந்தக் காயங்களை மாற்றி வாழ்வை அழகாக்கும் வல்லமை யாருக்குத்தான் உண்டு. சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார்க்கத் தான் தோன்றும். அக்காயங்களுக்கு வல்லமை உண்டு என்றுத் தோன்றிப் போகிறது. அக்காயங்கள், மாசற்றவை அல்லவா? அவற்றிலிருந்து வடியும் இரத்தம் மாசற்ற இரத்தம் அல்லவா?
பிள்ளைகளிடம் சொல்வதுண்டு. அவரை நோக்கிக் கொண்டு, இளமையின் காயங்களை அவருடைய காயங்களுடன் சேர்த்து வைக்க. வாழ்வு மலர காயங்கள் அவசியம். நம் காயங்கள் அல்ல, இயேசுவின் காயங்கள். அவர் காயங்களால் நாம் குணமடைவோம். வெறுப்பு மறைய, எதிர்காலத்தை பிரகாசமாக்க... இனியும் இயேசுவின் உருவம் சிலுவையில் ஆலயங்களில் தொங்கட்டும்.
0 கருத்துகள்