இதை நான் எழுதுகையில் என் மனதில் துளியேனும் துர்சிந்தனைகள் எதுவுமில்லை. அப்படிச் சொல்லும் ஆளும் இல்லை (இப்படிச் சொல்லித்தான் வாழ வேண்டும்). கண்டதை கண்டப் படியே சொல்ல வேண்டும் என்னும் நெறிகள் எனக்குப் போதிக்கப்பட்டிருப்பதாலும், அதுவே ஏற்றுக் கொள்ளப்படும் என்னும் நம்பிக்கை விதைக்கப்பட்டிருப்பதாலும், உள்மனதிலும் செயலிலும் 'அசிங்கமானவை' வெளிப்பட்டாலும், நான் உண்மையேப் பேசுகிறேன். எழுதும் போதும், பொதுவெளியில் பேசும் போதும், நான் துர்சிந்தனைகளுக்கும், துர்சொற்களுக்கும், துர்செயற்களுக்கும் அப்பாற்பட்டவன் என்றுக் கூறுவேன். அப்படித்தான் சொல்ல வேண்டும்.
இன்று இருச் செய்திகளைப் பார்த்தேன், தி இந்து ஆங்கிலப்பத்திரிகை குறியீடூகள் வைத்துப் பேசும் சினிமா மொழியை விட சிலவேளைகளில் பயங்கரமானது. அய்யோ, சினிமா எனும் போது எல்லாரும் குறியீடுகள் வழிப் பேசுகிறார்கள் என்றால் பெரும் பாதம் செய்தவன் ஆகிவிடுவேன். சிலர் சினிமா எடுப்பதற்குப் பதிலாக ஆடியோ போட்காஸ்ட்டுகளை வெளியிடலாம். தத்துவ மழை பொழிந்து உயிர் வாங்க அல்லவா செய்கிறார்கள். சரி அது கிடக்கட்டும். தி இந்து பத்திரிகைக்கு இவ்வளவு குறும்புக் கூடாது என்றே நினைக்கிறேன். வெறுமனே, கறுப்பு வெள்ளை எழுத்துக்களை வைத்தே பெரும் செய்திகளை, குறியீடுகள் வழியாகச் சொல்லி விடுகிறார்கள். கறுப்பு வெள்ளையில் கருத்துப் படம் வெளியிட்டிருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கக் கூடாது. இல்லை, அவர்கள் ஏதோ பல கதைமாந்தர்களையும், பல்வேறு நிகழ்வுகளையும் வைத்து, அலங்கார அல்லது உணர்வு பூர்வமான மொழிகளினூடாக கதை எழுதி இருக்கிறார்கள் என்றும் நினைத்து விடக்கூடாது. இல்லை, பொது மக்களுக்கு வெகு தொலைவில் இருக்கும் கவிதை (மன்னிக்கவும் யானைக்கு நிகராக பெரும் கவிஞர்கள் வாழும் உலகில் சிறு எலிகளைப் போன்ற கவிஞர்களின் வரிகள் விளங்கிட இயலும்) என்னும் மொழி வடிவைப் பயன்படுத்தி அவர்கள் கவிதைகளும் எழுதவில்லை. இலை மறைக் காயாக சொல்ல வந்தவற்றைச் சொல்லவுமில்லை.. ஒளிந்திருந்து எதிரியை தாக்கும் விதமாக, சூட்சி மொழிகளையும் பயன்படுத்தவில்லை. இந்துப் பத்திரிகை வெறுமனே வெள்ளை காகிதத்தில், கறுப்பு எழுத்துக்களால் மாயாஜாலம் நடத்தி வைத்திருக்கிறது. உடனே நீங்கள், ஏதோ விளம்பரம் என்று நினைக்கக் கூடாது. யாரோ பணம் கொடுத்து பெரியதொரு பெட்டகத்தில் எவற்றையோ எழுத்துக்களால் பொறித்திருக்கிறார்கள் என்ற அபத்தச் சிந்தனையும் வேண்டாம். பத்திரிகைப் பற்றி ஒன்றைச் சொல்ல வேண்டும் எனும் எழுத்துக்கள் விரல் நுனி வரை வந்து விட்டது அதையே தட்டச்சுச் செய்கிறேன் (எழுதுகோலால் எழுத்துக்களை நான் காவியங்களாகத் தீட்டவில்லை. தட்டச்சால் கிறுக்குகிறேன். தட்டச்சாலும் கிறுக்க முடியும்). செய்தி படிப்பதற்காகத் தான் பத்திரிகை வாங்குகிறேன். அதுவல்லவா பத்திரிகைகள் மிகவும் அழகாக, நேர்த்தியாக, அலங்காரங்களுடன் பதிவு செய்திருக்க வேண்டும். நாம் செய்திகளை வாங்குகிறோம், இல்லை செய்திகளை சுமந்தப் பத்திரிகையை வாங்குகிறேன். செய்திகளை வாங்கும் அளவுக்கு எனக்கு பண பலமுமில்லை, ஆள் பலமுமில்லை, அரசியல் செல்வாக்குமில்லை, பணம் போட்டு ஊடகம் நடத்தும் உறவினரும் இல்லை (நண்பர்கள் செய்யமாட்டார்கள் என்று நினைக்கிறேன்). ஆகையால் செய்திகளை நான் வாங்கவில்லை. செய்திகளைச் சுமந்து வரும் பத்திரிகையை வாங்குகிறேன். நான் எதற்காகப் பணம் கொடுக்கிறேனோ, அது எவ்வித அலங்காரமுமில்லாமல் அலங்கோலமாக வருகிறது. நீங்களேப் பாருங்கள், விளம்பரங்கள் பல வண்ணங்களைச் சுமந்து வருகின்றன.CMYK - cyan, magenta, yellow, and key (black) என பல வண்ணங்களை, கலந்து வருகிறது. நான் சற்று அதிகப் பிரசங்கி ஆகிவிட்டேன். கலர் கலவை பற்றி உங்களுக்குத் தெரியாது எனக்கு மட்டும் தெரியும் என்று காட்டிக் கொள்வதிலும் சந்தோஷம்.
பத்திரிகைத் திறந்தவுடன், பாழாய்ப் போன புலன்களுக்கு எது முதலில் தெரிகிறது? விளம்பரங்களா, இல்லை செய்திகளா? செய்திகள் தான் என்றால் நீங்கள், வேண்டுமேன்றே அப்படிச் செய்கிறீர்கள். பத்திரிகைத் துறைக்கே துரோகம் செய்கிறீர்கள். பத்திரிகை நடத்தும் பெரும் (சிறு முதலாளிகள் இருந்தால் மன்னிக்கவும்) அதை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. இதுவரையும் நாம் கற்ற அறிவியலுக்கு எதிராக நீங்கள் வேண்டுமென்றே செயல்படுகிறீர்கள் என்று பொருள். கிராதகர்கள். சரி அவர்களை விட்டுவிடுவோம். அவர்களும் வாழட்டும். நாம் விளம்பரங்களைத் தான் பார்க்க வேண்டும். இனி முதல் பக்கச் செய்தி என்று யாராவது சொல்லட்டும் பார்ப்போம். இனி நீங்கள், முதல் பக்க விளம்பரம் என்று தான் சொல்ல வேண்டும். முதல் பக்கம் இரண்டு மூன்று, நான்கு, என அது நீள்கிறது. விளம்பரம் படிக்கவா நான் பணம் கொடுக்கிறேன் என்று கேட்டால். ஒத்துக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் அது அப்படித்தான்.
ஏதோதோ பேசியாகி விட்டது இதுவரைக்கும் வாசித்துக் கொண்டிருந்தால், உங்களுக்கு நான் சொல்ல வந்ததைச் சொல்லி விட்டு விடைபெறுகிறேன். இன்றைய (07/12/2022 டெல்லி பதிப்பு) இந்துப் பத்திரிகையில், நான்காவது பக்கத்தில் அருகருகே இரண்டு செய்திகள். உ.பி இல், பி.ஜே.பி அரசு டாக்டர் அம்பேத்கருக்கு சிலைவைக்கப் போகிறார்கள். உடனே, அம்பேத்கருக்கு காவி ஆடை அணிவித்து, நெற்றியில் பட்டைப் பூசி சுவரொட்டி ஒட்டிய இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர் கைது என்னும் செய்தியும் அருகாமையில் போடப்பட்டிருக்கிறது. 'காவி(ய) தலைவனின் புகழ் போற்றுவோம்' என்பது சுவரொட்டியில் பொறிக்கப்பட்டப் 'பொன் மொழிகள்.' கவிஞர்கள் எல்லாம் நாட்டில் அதிக அளவில் உலவுகிறார்கள். ஆஸ்கார் வாங்கும் அளவுக்கு, குறியீடுகளைக் கொண்ட பெரும் சினிமா அளவுக்கு இல்லை என்றாலும், பிகைண்ட்வூட்ஸ் கொடுக்கும் அவார்டுக்காவது இந்துப் பத்திரிகையை தேர்வு செய்ய வேண்டும்.
செய்திகளில் என்னக் குறியீடுகள் உள்ளன என்பதை வாசகருக்கு விட்டு விட்டுகிறேன். உங்களைப் பூத்தி சூன்யங்களாக பாவித்து பெரும் விளக்கம் ஆணவம் எனக்கு கிஞ்சித்தும் இல்லை.
0 கருத்துகள்