பெண் விடுதலை - கிழவி கன்னியாகிறாள்

சுதந்திரம் கைக்கு வந்தும் பிடிக்கும் ஒதுங்காமல் விலகி விலகிச் சென்றது. எத்தனையோ முறை அதைப் பிடித்து விட்டேன் என்று நினைத்தாள்  கவிதா. ஆனால், அது வினோத வேடிக்கைகளைக் காட்டி கை நழுவிச் சென்றுக் கொண்டிருந்தது. எரிச்சல் அடைந்திருக்கிறாள் பலமுறை. சுதந்தித்தை அவள் வெறுக்க ஆரம்பித்திருந்தாள். அது தன்னுடைய வாழ்வில் காட்டும் வித்தைகள் அவளுக்குப் பிடிக்கவில்லை. தனக்கென இருக்கும் வாழ்வில் சுதந்திரம் காட்டும் இக்கண்ணாமூச்சி விளையாட்டு, சதிச் செயல் என அவளுக்குத் தென்பட்டது. இம்முறை அதை எப்படியாவது கைகளுக்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தாள். சுதந்திரம் கிடைத்ததும் அதைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஆயத்தங்களை வெகுவாகச் செய்ய ஆரம்பித்திருந்தாள். சுதந்திரம் அவளிடம் காட்டும் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு இன்று நேற்றுத் தொடங்கியதல்ல. பல ஆண்டுகளாக இது நடக்கிறது. பல ஆண்டுகள் அல்ல பல பதிற்றாண்டுகள். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், 1991 இல் திருமணமானது தொடங்கி. 

திருமணமான அன்று அவளுடைய சிறகுகள் அறுக்கப்பட்டதாக உணர்ந்தாள் என்று கூற முடியாது. அவள் சிறு வயது முதல், பேணி வளர்த்து வந்த சுதந்திரச் சிறுகுகளுக்கு அன்று ஆற்றல் கிடைத்தது என்று நினைத்துத்தான் கழுத்தில் தாலியை (தாலிக் கயிறு😎😎) ஏற்றுக் கொண்டாள்.  கோழி அடைகாத்து (பிராய்லர் குஞ்சுகள் அல்ல,) பொரித்தெடுக்கும் குஞ்சுகள்  போல் அவள் தன்னுடைய சிறகுகளை வளர்த்தெடுத்திருந்தாள். அவற்றை வைத்துக் கொண்டு வீட்டுக்குள் அப்பா அம்மா அண்ணன் கொடுத்த பரப்புக்குள் பறந்துத் திரிந்தாள். ஆனால் திருமணம் அதுவல்ல. உயரப் பறப்பதற்கான அனுமதிச் சீட்டை பெற்றுத் தரும் என்று நம்பினாள். வாழ்வில் பக்கபலமாய் இன்னொரு ஆள் கிடைத்தால் பலம் பன்மடங்காக மாறுமல்லவா! இப்படியெல்லாம் அவள் நினைத்திருந்தாள். ஆனால் முதல் இரவின் தலையணை மந்திரமே, அவளுக்குக் சிறைக்கம்பிகளாக மாறிக்கொண்டிருந்தது. அவை, பாதளாம் நோக்கி அவளைத் தள்ளிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. கண்களில் இருள் மூடி, அகல பாதாளம் நோக்கி அவளை நகர்த்திக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. அன்பு என்னும் போர்வையில், ஆணாதிக்கமும், பாதுகாப்பு என்னும் போர்வையில் குடும்ப மரபுகளும் அவன் திணித்துக்கொண்டிருந்தான். அன்பு எதிர் அபிப்பிரயாங்களை கேட்பதில்லை என்பது அவளுக்கு விசித்திரமாகப் பட்டது. மாற்றுச் சிந்தனைகள், மாற்றுக் கருத்துக்கள் எல்லாம் அன்பிற்கு இல்லை. அதற்கு செவிடு. 

தலையணை மந்திரம் ஏற்படுத்திய அழுத்தங்களைத் தாண்டி திமிர்த்தெழுவதற்கான புரட்சிச் சிந்தனைகளை  அவளுக்கு எழுந்தது என்பது உண்மையே. ஆனால், மணவறையும், அவர்களுடைய அந்தரங்க வாழ்வுக்கு  காவல் காக்கும், நெருங்கிய உறவுகளும், கலாச்சாரச் சம்பிரதாயங்களும் அவளுடைய புரட்சியின் நெருப்பை தண்ணீர் ஊற்றி அணைத்துக் கொண்டிருந்தது. கைகளில் விலங்குப் பூட்டப்படும் உணர்வு அவளுக்குள் ஏற்பட்டது. உணர்வு அல்ல, அது உண்மையே. சங்கிலிகளைத் தூக்கிக் கொண்டு அசையக் கூட முடியாத பாரத்தை அவை அவளுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தன. 

photo: pixabay.com

அவள் விலங்குகளை உடைத்தெறிய ஆறு மாதங்கள் தாண்டி முதன்முறை முயன்றாள். சுதந்திரம் கைக்கெட்டியதுப் போல் தோன்றியது. பெண் பாதுகாப்பு என்னும் சமூக குறியீடு அவளை துரத்திப் பிடித்து மீண்டும் சிறைக்குள் அடைத்தது. பிறகு சங்கிலியின் பாரம் மேலும் வலுவானது. கம்பிகள் மேலும் உறுதிப் படுத்தப்பட்டன. மதில்சுவர்களின் உயரங்கள் கூட்டப்பட்டன. மேலும் பலமுறை முயன்றிருக்கிறாள். பிறகு காலம் மாறிய போது அவளை புதிய சங்கிலிகள் பிணைக்க ஆரம்பித்தன.வேலிகள், புகை மண்டலங்கள், மாயை வித்தைகள், சடங்கு சம்பிரதாயங்கள், ஆண்மைக்கு வலிமை சேர்க்கும் பெண்ணியம் பற்றிய தீராத (மறை) போதனைகள் ஆகியவை அவளுக்கு மேலும் மேலும் புதிய புதிய விலங்குகளைப் போட்டுக் கொண்டிருந்தது. காலம் மாறிய போது, மனித கேமராக்கள் போதாது என்னும் நினைப்பில் சுற்றும் திறனமிக்க கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்ப்டடன. ஆவள் திக்கமுக்காகிப் போனாள். எங்கும் ஆயிரம் மேமறாக் காண்கள்.

இன்று 2021 அவள் சுதந்திரம் சுவாசிக்கத் தொடங்கி இருக்கிறாள். அது மரணம் வழியாக கைகூடியது. ஆண்மையின் மரணம். மரித்துக் கிடப்பவனின் முன் இருந்தவள் அழுவதாகத் தெரியவில்லை. மறுநாள் அவளின் முகத்தில் தோன்றிய வெளிச்சம் எவ்வளவோ பெரிது. அவள் மீண்டும் குமரி ஆகி இருந்தாள். சிறகுகள் எல்லாம் நன்றாக விரிந்திருந்தன. கல்லூரியில் பேசிச் சுற்றித் திரிந்த பருவம் திரும்ப வந்தது போல் தோன்றியது. அவள் களையாக இருந்தாள். பேரக்குழந்தைகள் அவளைக் கொண்டாடிக் கொண்டிருந்தன. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்