"கடவுளுக்கு வேறு வேலை இல்லை போலிருக்கிறது." இதை நான் சொல்லவில்லை அடிப்படைவாதிகள் சொல்வதை வைத்துச் சொல்கிறேன். அப்படி என்னதான் அவர் செய்து கொண்டிருக்கிறார்.
"அவர் உன்னைப் பற்றிய கணக்குப் புத்தகத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்."
"என்ன கணக்குப் புத்தகமா? அவர் என்ன நிதி அமைச்சரா? இல்லை வங்கி நடத்திக் கொண்டிருக்கிறாரா?"
"மன்னிக்கவும், கணக்குப் புத்தகம் அல்ல, உனது செயல்களைப் பற்றிய நூலை அவர் வைத்திருக்கிறார்."
"என்ன, அவர் பத்திரிகைத் துறை நடத்துகிறாரா? அவர் ஏதாவது, தொலைக்காட்சி ஊடகமோ, இல்லை வலையொளி வரிசை ஏதாவது தொடங்கப் போகிறாரா? இல்லை, அவர் ஏதாவது பதிப்பகம் தொடங்கப் போகிறாரா?'"
"தேவையற்றக் கேள்விகளை நிறுத்தவும். அதெல்லாம் இல்லை. கோபம் வருகிறது. சொல்ல வந்ததைக் கூற விடமால் எனது சிந்தனையைக் குழப்பப் பார்க்கிறாய். ஏதோதோ எல்லாம் ஆலோசித்து வந்தேன். அவை எல்லாம் உன் கேள்விகள் சிதறடித்து விட்டன. முட்டாள் கேள்விக்குப் பிறந்தவன். இவன் என்ன சாக்ரட்டீஸ் - இன் வம்சத்தினனா? அதுதான் அவர் இளைஞர்களை நெறிதவறச் செய்கிறார் என விஷம் கொடுத்துக் கொன்று விட்டார்களே. இன்னுமாத் திருந்தவில்லை. அடிமுட்டாள். எங்களது சாபத்தின் இரும்புக் கரம் உன் மேல், இறங்கும். நாங்கள் சாபம் போட்டால் கடவுள் அப்படியேச் செயல்படுவார் என்று உனக்குத் தெரியாதா? அபத்தமாகக் கேள்விகள் கேட்டு மாட்டிக் கொள்ளாதே. நீ மட்டும் சாபத்துக்கு உட்பட்டால் அதில் எவ்விதச் சிக்கலும் இல்லை. உன்னுடையத் தலைமுறையினரையும் அல்லவா அது அழித்து விடும். உன் மடத்தனத்தால் எத்தனைத் தலைமுறை இன்னும் சாபங்களைச் சுமந்து நடக்க வேண்டும். ஆகையால், கடவுளின் காரியங்களைப் பேசும் போது, நீ அமைதி காக்க வேண்டும் என்பது என்பது எனது கண்டிப்பான வேண்டுகோள்."
"ஐயா, நீங்க கணக்குப் புத்தகம் என்று சொன்னீர்கள், இரண்டாவது எங்களது செயல்களைப் பற்றிய நூலை வைத்திருக்கிறார், என்றீர்கள். அதனால் தான் தெளிவுப் படுத்திக் கொள்ளலாம் எனக் கேட்டுவிட்டேன். எனது அபத்தப் புத்தியில் தோன்றியதைக் கேட்டேன். பள்ளிக் கூடங்களில், கேள்விகள் கேளுங்கள் என்று சொல்லி பழக்கி விட்டார்கள். நான், தமிழ்வழிக் கல்விகூடத்தில் வேறு படித்துத் தொலைத்து விட்டேன். சுதந்திரமாகச் சிந்திக்க அனுமதித்து விட்டார்கள். அது மட்டுமல்லாமல், சுதந்திரச் சந்தைத் திறந்து விட்டிருக்கிறார்கள். சுதந்திரம், நீதி, சம உரிமை போன்றவை எல்லாம் எங்கும் பரவி வருவதால், சந்தேகங்களைக் கேள்வியாக வைத்தேன்"
"ம்... மீண்டும் பேச ஆரம்பித்துவிட்டீர்களா? பேச வேண்டாம். சொல்வதைக் கேள்."
"சொல்லுங்கள் ஐயா."
"நாங்கள் போதித்து வைத்திருப்பதற்கு மாறாக செயல்பட்டால், அவற்றை எல்லாம் கடவுள் குற்றங்களாகப் பதிவு செய்வார்."
"ஐயா அவர் ஏதாவது அதிநவீன மெம்மரி கார்ட் வைத்திருக்கிறாரா?"
"சாபம், சாபம், கடவுளை கிண்டல் செய்கிறாயா? கடவுளைப் பழித்துரைப்பது எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா?"
"தெரியும் ஐயா. அதற்காகத் தான் இயேசு கிறிஸ்துவையும் கொன்றார்கள்."
"இவன் சரிபட்டு வரமாட்டான். கடவுளை மீண்டும் பழித்துரைக்கிறான். கடவுளே இவன் சொல்வதையெல்லாம் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றையும் துருவித்துருவி ஆராய்ந்து தண்டனைக் கொடுக்க வேண்டுகிறேன்."
"ஐயா, இயேசு கிறிஸ்து, வழக்கறிஞர் (குழப்பமாக இருக்கிறது, வழக்கறிஞரா, வழக்குரைஞரா - சரி ஏதோ ஒன்று) ஒன்றும் இல்லையே. இவன் செய்வது இன்னதென்று இவனுக்குத் தெரியாது என மன்னித்து விடுவார்."
"என்ன, கடவுளுக்கே நீ போதிக்கிறாயா? இதெல்லாம் அவர் சும்மா விடமாட்டார். பெரும் பாதகம் செய்துக் கொண்டிருக்கிறாய். அசுத்த ஆவிகளின் பிடியில் நீ சிக்கி இருக்கிறாய் நீ. நீ விக்கிரக ஆராதகனாக மாறி விட்டாய். நீ கேள்விகளைக் கேட்கிறாய். கடவுளுக்கு எதிராக பேசுவதற்கு நீ யார்?"
"ஐயா நான் கடவுளை எதிர்க்கவில்லை."
"அப்படியானால் நீ யாரை எதிர்க்கிறாய்? ஐயோ நானும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டேனா? அபத்தம் அபத்தம். உன்னோடு இருந்தால் அசுத்த ஆவிகள் என்னையும் பாதிக்கும் போல இருக்கிறது. உண்மைக் கடவுளை நான் அறிவித்திருக்கிறேன். அதிலிருந்து நீ விடுபட்டால், உனக்கு மட்டுமல்ல சாபம். உன் சந்ததியினருக்கும் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்."
"ஐயா நாங்கள் கர்மா என்பதை நம்புவதில்லையே. கடவுள் மன்னிப்பவர் என்று தான் கற்றிருக்கிறோம்."
"மீண்டும் கேள்வியா? உனக்கு வரும் தண்டனையிலிருந்து உன்னை யாரும் விடுவிக்க முடியாது. நீ பாதாளத்திற்குச் ெசல்வாய்."
"ஐயா இயேசு கிறிஸ்து பாதாளத்திற்குச் சென்று மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் அல்லவா. அங்கிருந்த பாவிகளை எல்லாம் விடுவித்து விட்டாராமே."
"என்ன என்ன? இவற்றையெல்லாம் உனக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள். அந்த விக்கிரக ஆராதகர்களாத் தான் இருப்பார்கள். கண்டிப்பாக அவர்கள்தான். எவ்வித சந்தேகமும் இல்லை. அவர்கள் நரகத்தில் தீ தின்று கொண்டிருக்கிறார்கள் என்று தெரியாதா?"
"ஐயா, மனிதன் நல்வாழ்வு வாழ்வதற்காகத் தான் இயேசு வந்தார் என்று நம்புகிறோம். அவன் அழிந்தால் கடவுளின் நிம்மதி தொலைந்து போய் விடும் என்றே தோன்றுகிறது. எனது பிள்ளையின் அழிவில் நான் மகிழ்கிறேன் என்றால், நான் மனிதனாக இருக்க முடியாது அல்லவா? இரக்கத்தின் பிறப்பிடம் எப்படி சாபங்களைப் போட்டுக் கொண்டிருக்க முடியும்? பாவியின் வருகைக்காக வாசல் திறந்து காத்திருந்த தாய் அல்லவா அவர்."
"உன்னை யாரோ குழப்பி இருக்கிறார்கள்.
ஐயா பதில் கூறாமல், நீங்கள் என்னை சபித்துக் கொண்டே இருக்கிறீர்கள்."
"அபத்தவாதிகளுக்கு சாபம் கொடுக்க கடவுள் எங்களை நியமித்து இருக்கிறார்."
"அப்படி உங்களை வருத்திக் கொண்டிருக்கிறீர்கள். சாபங்கள் இயல்பிலே, அழிவை நோக்கியே நகர்கின்றன. அவற்றினுள் தீமைகளும், தீயச் சொற்களும் கலந்திருக்கின்றன. அவை அழிவை சுமப்பதால், கடவுளிடமிருந்து வருவதற்கு எவ்வித சாத்தியமும் இல்லை. நன்மையே ஆன கடவள், நல்லனவற்றை மட்டுமே சிந்திக்கிறார். ஆதலால் தான் அவரை நல்லவர் என்கிறோம்."
"அபத்த விசுவாசியே. கடவுள் உன்னை எரிநரகில் தள்ளட்டும்."
0 கருத்துகள்