அது புனிதமான இடம். இடம் என்பதை விட, வெளி எனலாம். வெளி என்றால், வாழ்வதற்கான இடம் என எளிதில் புரியும் படிச் சொன்னாலும், அது வெறுமனே நிலம் சார்ந்தது மட்டுமல்ல. ஐயோ நிலம் என்றாலும், அது நான் நிற்கும் மண் என்பதற்குள் சுருக்கி விடவும் முடியாது. எல்லாம் சிக்கல் தான். 'வெளி'க்கு வருவோம். வெளி என்றால், தனிமனிதருக்கு நிற்பதற்கும் நடப்பதற்குமான இடம் என்பது மட்டுமல்லாமல், அவள் பழகுவதற்கும், நகர்வதற்கும், சுதந்திரத்தை வாழ்வாக்குவதற்கும் கொடுக்கப்பட்டிருக்கும் பெரிய இடம் எனலாம். அதற்குள் மொழி, நிலம், அமைப்பு, அதிகாரம், இயற்கை எனப் பல உள்ளன.
அவ்வகையில் இது புனிதமான வெளி எனலாம். அதற்கெனப் புனிதமான பெயர் உண்டு. அதில் சாதாரணக்காரர்களுக்கும் வாழலாம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவர்களுக்கென உருவாக்கப்பட்டது தான் அது. அடையாளமற்றவர்களுக்கு, அடையாளம் கொடுக்கும் இடம். ஆழ்ந்த நம்பிக்கைகளுடன் வாழ்ந்திட பெரிய வெளியைத் திறக்கும் இடம். அவ்விடத்தில், மரபு, பூர்வீகம், செல்வம் போன்ற எவ்வித அடையாளங்களின் அதிகாரங்களும் இல்லாதவர்கள், சொந்த அடையாளங்களை உருவாக்கிக் கொள்ளலாம். அப்படி இருந்தாலும், புதிய நம்பிக்கையின் அடையாளங்களை உருவாக்கிக் கொள்ளலாம். சுருங்கச் சொன்னால், 'கடவுள் நம்பிக்கை என்னும் தைரியம் தரும் வெளியில், உன்னை நீ செதுக்கிக் கொண்டு, உனக்கெனவும் உன் தலைமுறைக்கெனவும் அடையாளம் உருவாக்கும் இடம்.' இனி இதை விட எளிதாகக் கூற முடியாது. மன்னிக்கவும்.
அவ்விடத்தில், இப்போது எல்லாம் செழிப்பாக இருக்கிறது என்று சொன்னால், அதுதான் எனக்கு சவுகரியமாக இருக்கும். அதைத்தான், அடையாளமற்றவர்களுக்கு அடையாளம் கொடுப்பதாக நினைப்பவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லாம் சுகம். எல்லாம் சுபம் (பழயை காலத்து திரைப்படங்களின் இறுதியில், பெரும் சிக்கல்களுக்கு இறுதியில், காதலனும் காதலியும் கரம்பிடித்து திருமணம் செய்து கொள்ளுவதை நீங்கள் கற்பனையில் கொண்டு வரலாம்). ஆகையால் இப்போது இங்கே சுபம் என்று தான் சொல்ல வேண்டும். அதற்கெனத்தான், வாட்ஸ்அப் தொடங்கியிருக்கிறார்கள் என்று நான் சொன்னால், நீங்கள் நம்பா விட்டாலும் பரவாயில்லை, அப்படித்தான் நான் நம்புகிறேன். அங்கே நீங்கள் போட்டோக்களைப் பார்த்ததில்லையா? அவர்கள் அடையாளம் இழந்தவர்களுக்காகச் செய்து கொண்டிருப்பதை எல்லாம், அப்படியே படம்பிடித்து, வாட்ஸ் வரலாற்று நூலில் பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இன்னும் பொடிபடிந்த வரலாற்று நூல்களை புரட்டி நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், அது உங்கள் தவறு. அதிநவீன, சூடான வரலாறுகளை படிக்காமல், பழமைவாதிகளாக நீங்கள் மாறிவிட்டதற்கு நான் பொறுப்பேற்க முடியாது.
சூடான போட்டோக்களைப் பார்க்காமல், ஏதோ காலத்தில் அச்சேற்றம் செய்து, புத்தகமாக்கப்பட்டு, பழையதாகிப் போனதை பார்க்கிறவர்கள், அவிவேகிகள், ஞான சூனியங்கள். அவர்கள் இன்னும் பழங்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். போட்டோக்களில் யார் இருக்கிறார்கள் என்று நீங்கள் கேட்கக் கூடாது. அதில் சிரித்துக் கொண்டிருப்பவர்களை நீங்கள் பார்க்கவில்லையா. அவர்கள் முன்னால், ஏராளமானவர்கள் சிரிப்பதை அவர்கள் பிரதிபலிக்கிறார்கள் என்று நீங்கள் நம்பத்தயாராய் இல்லையா. அது என் தவறு அல்ல.
அவர்கள் முன்னால், படம்பிடிப்பவர் மட்டுமே இருக்க முடியும்?
அதை நீங்கள் நம்பக் கூடாது. அது விஷமிகளின் கொடூரச் செயல். அப்படி விஷங்களை விளம்புவர்கள், நவீன காலத்தவர்கள் அல்ல. விதவிதமாய் அவர்கள் ஆடைகள் அணிந்து நிற்பதைப் பார்த்தாவது நீங்கள் உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு படமும், அடையாளம் கொடுப்பவர்களின் பணியின் வெற்றியை பறைசாற்றுகின்றன என்று சொல்லுகிறேன். இவர்கள் நம்பவில்லையே.
இல்லை ஐயா, அடையாளம் பெற்றவர்கள் அல்லவா, போட்டோவில் இருக்க வேண்டும். அவர்கள் தானே, முக்கியமானவர்கள்.
இவர்கள் நன்றி கெட்டவர்கள். யாருடைய போட்டோக்களை படம் பிடிக்க வேண்டும்? அடையாளம் பெற்றவர்களா? அடையாளம் கொடுத்தவர்கள்தானே. அவர்கள் இல்லாமல் எப்படி இங்கே உள்ளவர்களுக்கு சுயமரியாதையும் ஒழுங்கும் கற்பிக்க முடியும். அவர்களை வணங்காதவர்கள், எப்படி தங்கள் வாழ்க்கையில் அவர்களைப் போன்ற அடையாளங்களைப் பெற முடியும். இனியாவது, வாட்சஅப் யூனிவேரிசிட்டியில் படித்து, அறிவை சம்பாதித்துக் கொள்ளுங்கள். அங்கே நீண்ட நேரம் அவசியமில்லை. உங்களுக்குத் தேவையானது, நொடிப்பொழுதில் தருவார்கள். நீண்ட இருத்தைந்து காலம் நீங்கள் படித்தவை எல்லாம் குப்பைகள். அது வாழத்தெரியாதவர்கள் பழகிய வாழ்க்கை. இனியாவது திருந்தி வாட்ஸ்அப் யூனிவேர்சிட்டியின் மாணவராக மாறி வாழ்வை மறுகட்டமைப்புச் செய்து கொள்ளுங்கள்.
ஐந்தாண்டுகளுக்கு முன்னால் இங்கே என்ன செய்து கொண்டிருந்தார்கள். எல்லாம் முட்டாள்கள். அடையாளம் கொடுப்பவரை விட அடையாளம் பெறுபவர் முக்கியமான வாழ்ந்தார்கள். அப்படி செய்வதால் என்னத்தான் லாபம். அன்றாடம் சிக்கல்கள். மக்கள் பிரச்சனைகள். அவர்களைப் பற்றிய நினைவுகள். எங்களுடைய சுதந்திரத்தை தின்று கொண்டிருந்தார்கள். சுய கவுரவம் இழந்து வாழ்ந்த மூடர்கள். அவரவர் இருக்க வேண்டிய இடங்களில் அவரவர் இருக்க வேண்டாமா? நம்மைப் போல அவர்களை மாற்றிவிட்டால், பிறகு நமக்கு இங்கே என்ன விலை? யார் நம்மை மதிப்பார்கள். இது சுயநலம் என்று சொல்வார்கள். சொல்பவர்கள் சொல்லிவிட்டு போகட்டும். அது அவர்களின் உள்மனதின் வக்கிரம் என்று சொல்லாமல் வேறு என்னதான் சொல்ல முடியும். சுயநலத்தின் சுகத்தை நாங்கள் அனுபவித்து விட்டுப் போகிறோம்.
அப்படியானால் உங்கள் பணி.
அதுதான் அன்றாடம் போட்டோக்களைப ்போடுகிறோம். சிறப்பு நிகழ்வுகள் வரும்போது, பலவற்றைப் போடுகிறோம். எவ்வளவு பயன். இவற்றை எல்லாம் பார்த்து விட்டு எத்தனையோ பேர் மெச்சுகிறார்கள். எங்களை வாழ்த்துகிறார்கள். எங்களைப் போன்று பணி செய்தவர்கள் இவ்வுலகில் இல்லை என்று எவ்வளவு பெருமையாகப் பேசுகிறார்கள்.
அது உங்களைச் சார்ந்தவர்கள் அல்லவா வாழ்த்துகிறார்கள்.
ஆமாம், அது தான் உண்மை. என் சொந்தங்கள், என் நட்பு வட்டங்கள், என் நலம் விரும்பிகள், எனது உடல் உள்ள நலன் விரும்புவர்கள், என்னைப் போன்று வாழ்பவர்கள். இவர்கள் தரும் ஊக்குவிப்பில் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதே உண்மை. அவர்கள் சொல்லும் உண்மையைத் தாண்டி வேறேது உண்மை இருக்க முடியும். போதாக்குறைக்கு அதிகாரிகளும் எங்களை எவ்வளவோ மெச்சுகிறார்கள். எங்களைப் போன்று இதுவரையும் யாரும் வாழ்ந்ததில்லை, செய்ததில்லை, இப்போது கூட, அப்படி யாரும் செய்யவில்லை என்று சொல்கிறார். இதை விட அங்கீகாரம் எனக்கு இனி என்ன வேண்டிக் கிடக்கிறது. அதிகாரிகள் வழியாகத்தானே கடவுள் செயல்படுகிறார். எல்லாம் சுபம்.
மக்கள் வளரவில்லையே. அவர்களில் தலைவர்கள் உருவாகவில்லையே?
நீங்கள் எல்லாம் துரோகிகளாக மாறிவிட்டீர்கள். யார் தலைவர்? நீங்களா நாங்களா? அற்பவிசுவாசிகள். நாங்கள் விதவிதமாக விழாக்களைக் கொண்டாடுகிறோம். எத்தனை விதமான ஆடைகள், உணவுப் படையல்கள், கலை நிகழ்ச்சிகள். அணிவகுத்து அழகழகாய் வருகிறார்கள். புது விழாக்களை நாங்கள் கண்டுப்பிடித்துக் கொண்டு வந்து அவர்களுக்குக் கொடுத்துக் வருகிறோம். அவர்கள் மகிழ்ச்சியாய் இருப்பது தெரியவில்லையா? அவர்களைத் தலைவர்களாக மாற்றிவிட்டால், நம்மை யார் மதிப்பார்கள். எல்லாம் சுபம் என்று அவர்கள் நம்புவது உங்களுக்குப் பிடிக்கவில்லை அல்லவா?
அடையாளம் கொடுக்க உருவாக்கப்பட்ட இடத்தில் இப்போது அடையாளம் கொடுப்பவர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள் என்னும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.
அது யார் குற்றம். நாங்கள் வாழ்வை சுமந்துக் கொண்டு நிற்கிறோம். எங்களிடம் கடவுளின் ஞானமும் உலகின் ஞானமும் இருக்கின்றன. எங்களிடம் வராமல் விலகி நிற்கக் காரணம் என்ன. எங்களிடம் வருபவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று பாருங்கள். எங்கள் வாகனங்களின் பயணிக்கிறார்கள். நாங்கள் சொல்வதைக் கேட்கிறார்கள். அவர்களின் விழாக்களுக்கு எங்களை அழைக்கிறார்கள். இதுதானே வாழ்வு. அவர்கள் எங்களிடமிருந்து ஞானத்தைப் பருகுவதை விட்டுவிட்டு விலகிச் சென்றால், நாங்கள் என்ன செய்ய முடியும். எங்களுக்கும் இரக்கம் உண்டு. நாங்கள் 'கொடுக்கிறோம்' வாங்காமல் விலகிச் சென்றால் நாங்கள் என்ன செய்ய முடியும். நாங்கள் நடுஇருக்கைகளில் இருக்கிறோம். எங்களோடு அதே மேடையில் 'விளிம்புகளில்' இருக்க நாங்கள் இடம் கொடுக்கவில்லையா? இதைவிட பெரிதாக என்னச் செய்துவிட முடியும். அதற்காக அழுதழுது எங்கள் கண்களைக் குளமாக்க விரும்பவில்லை. நாங்கள் எத்தகைய வாழ்க்கையை விட்டுவிட்டு வந்திருக்கிறோம் தெரியுமா? நாங்கள் செய்யும் தியாகத்திற்கு ஈடுஇணை இங்கு உண்டோ. இடங்கள் சூன்யமாகட்டும். அது இவ்விடத்தின் விதி. இம்மக்களின் விதி.
அப்போ இயேசு கிறிஸ்து.
உனக்குக் கொடுத்த நேரம் நெருங்கி விட்டது. மிச்சத்தை வாட்ஸ்அப் இல் வாசித்துத் தெரிந்து கொள்.
0 கருத்துகள்