முதலில் மன்னிப்பு வேண்டுகிறேன். கோமாளி என்பது எந்த நபரையும் குறிப்பிடவில்லை. அப்படி யாராவது உணர்ந்திருந்தால் மன்னிக்கவும். இது வேறு கோமாளி. எனது சின்ன வயது கோமாளி.
"கோமாளி வாரி குளிச்சிட்டு பள்ளிக் கூடத்துக்குப் போ," இது அன்றாட வேலையின் பகுதி. நன்றாகக் குளித்தாலும் கோமாளி வாரியதன் நாற்றம் போவதில்லை. மண சோப்பு - உடம்பில் தேய்ப்பது - போட்டு கையை நன்றாகக் கழுவினாலும், உள்ளங்கையை முகர்ந்துப் பார்க்கும் போது, அதிலிருந்து பசு மாட்டின் மணம் வரும். மலையாளத்து நண்பர்கள் மணம் என்று தான் சொல்வார்கள். அதுவே இங்கேயும் சவுகரியமாக இருக்கும். பசு நாற்றம் எனச் சொல்ல மனம் வரவில்லை. ஆனால் அம்மணம் அவ்வளவு சுகமானதாக இருக்காது. இதை மறைப்பதற்கென்று வழி உண்டு. பக்கத்தில் இருப்பவன், ரப்பர் தட்டுதல் - டாப்பிங் - வேலை முடித்து விட்டு தான் வருவான். அவன் கையில் படிந்திருக்கும் ரப்பர் கறையை உருட்டிக் கொண்டிருப்பான். அதிலிருந்தும் மணம் வரும். அவனுடைய கைகளிலிருந்து வரும் மணம் எனது மணத்தை மறைக்கிறது என்பது சவுகரியம் தானே. கோமாளி என்ன என்பது இதுவரைக்கும் புரியாதவர்களுக்குச் சொல்லி விடுகிறேன். மாட்டுத் தொழுவத்தில் கிடக்கும், மாட்டு மூத்திரமும் சாணியும் கலந்த கலவை.
மற்றவர்களின் நாற்றம் எனது நாற்றத்தை மறைக்கிறது என்பது எவ்வளவு வசதியாக மாறிவிட்டது. அப்படித்தான் பள்ளிக்கூடத்தில், சமாளித்துக் கொண்டேன். தனியாகச் சிக்கினால் தான் சிக்கல். அவன் வரவில்லை என்றால் சிக்கல் தான். எனது மணம் மேலோங்கி நிற்கும்.
photo: pixabay.com
இப்போது வளர்ந்த பின்னும், இந்த மனநிலை மாறவில்லை. சுய நாற்றத்தை மறைக்க இன்னொரு நாற்றத்தோடு சேர்ந்து நடக்கும் மனநிலை. அதுமட்டுமல்லாமல், பிறரின் நாற்றத்தை விட எனது நாற்றம் குறைவு என்னும் ஒப்புமைப்படுத்திப் பார்க்கும் மனநிலையும் வளர்ந்திருக்கிறது. என்னை சுத்தமாய் வைப்பதை விடவும், மற்றவரை விட நான் சுத்தமாக இருக்க வேண்டும் என்னும் மனநிலை. இப்போது கோமாளி என்பது நீங்கள் நினைத்த அர்த்தத்தோடு பொருந்திப் போக ஆரம்பித்திருக்கும். சுயம் நன்றாக இருப்பதை விட, மற்றவரை விட நன்றாக இருக்க வேண்டும் என்னும் கோமாளி மனநிலை. அழுக்கோடு சேர்ந்து நடக்கும் போது, எனது அழுக்குத் தெரியாது என்னும் எண்ணம். தவறுகள் செய்யும் போது. கைக்கூலி வாங்கும் போது, ஊழலில் ஈடுபடும் போது, இன்னும் இப்படிப்பட்ட அரிய அழுக்குகளில் விழும் போதெல்லாம், இந்த கோமாளி ஞாபகம் வந்து போகிறது என்ன செய்ய. எனது புத்தியைத் தான் செருப்பால் அடிக்க வேண்டும்.
0 கருத்துகள்