ஜெயகாந்தனின் எழுத்தாக எங்கோ வாசித்த நினைவு. கதையின் பெயரும் நனவு மனதில் இல்லை, எழுதிய வரிகளும் அப்படியே நினைவில் இல்லை, கருத்து மட்டும் ஒட்டி நிற்கிறது. கையில் பிடித்திருந்த அந்தக் கடிதத்தை காற்றின் வேகத்திற்கு ஏற்ப விரலை நகர்த்தி பறக்க அனுமதித்திருந்தால், அது பறந்தே போயிருக்கும் பிரச்சனையும் குடும்பக் குழப்பங்களும் அத்தோடு முடிவுக்கு வந்திருக்கும்.
அன்றைய இரவும் அப்படித்தான். இரவு பதினொன்றரை மணிக்கு மின்னஞ்சல் பெட்டியை திறக்காமல் இருந்திருந்தால் அவ்விரவு சாதரணமாய்க் கடந்தே போயிருக்கும். இரவின் பயங்கரம் என்னை ஆட்டிப்படைத்திருக்காது. நினைவுகள் ஆழமாய் பதிந்து நெஞ்சில் வடுக்களாய் பதிந்து, நனவு மனதை அடிக்கடித் தொந்தரவு செய்திருக்காது. தூக்கம் விழித்து மிகு கடமை உணர்வுடன் தொழில் தர்மம் தந்த பரிசு அது. அது நோயாய் பீடித்திருக்கிறது. தூக்கம் பெருங்கடமைகளுள் ஒன்று என்னும் அரிச்சுவடி எங்கோ தொலைத்தேன் போல. விடியலின் வெளிச்சம் தீர்வுகளை சுமந்து வரும் என்னும் அறிவை பெறாமல் போனதற்காக இப்போது வருந்துகிறேன். ஓர் இரவின் தாக்கம் வாழ்வின் வலிகளாய்த் தொந்தரவுத் தந்துக் கொண்டிருக்கிறது. இப்போது என்ன சொல்ல? சுயகழிவிரக்கம் பெரும்பகையாய் உருவெடுத்து வாழ்வை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. மின்னஞ்சலை எழுதியவரை நோக்கித் திரும்பி கழிவிரக்கம் பழிவாங்க எத்தனிக்கிறது. உறக்கம் என்னும் பெருங்கடனை நிறைவேற்றமால் அந்நாளில் நிறைவேற்றாததால் கதிநிலங்கி நிற்கிறேன் இப்போது.
அன்றைய இரவு நீங்காத நினைவுகளை அள்ளித் தந்தது, வடுக்களாக பெருஞ்சுமைகளாக. கணினியை விட்டு நகர்ந்தபின், வெளிச்சம் இல்லா உலகில் தனிமையின் பாரங்கள் பேரிடியாய் உள்ளுக்குள் இறங்க ஆரம்பித்தன. நினைவுகளுக்கு பாரம் அதிகரித்துக் கொண்டிருந்தது. பகலின் வெளிச்சத்தில் தெரியும் மரங்களும், புற்பூண்டுகளும், பறவைகளும் இப்போது இல்லை. அவை நம்பிக்கையற்றைவையாய் நிழல்களாய்த் தெரிந்தன. அவற்றிற்குள் உயிரில்லை. செத்துக் கிடந்தன. நான் காண அவைகள் தலைகளாவது அசைத்திருக்கலாம். அவைகள் வாழ்கின்றன எனும் உணர்வு அற்றுப் போய் விட்டது. நான் நீரூற்றி வளர்த்திய செடிகளும் இப்போதுத் தென்படவில்லை. தீனிபோட்டு வளர்த்தும் 'காதல் பறவைகளும்' எதுவும் பேசவில்லை. அவை அவற்றிற்குள் பேசும் போது எழும் மன அமைதியைத் தரக் கூட அவை மறுத்தன. காரிருளின் கோரப்பிடி எங்கும் பரவிக் கிடந்தன. சில நிழல்கள் மட்டும். அவை என் மேல் உருவமற்று விழுந்தன. எல்லாம் நான் செய்த பிழை. தூங்குவதற்கானது இரவு என்னும் உணர்வை இழந்ததற்கானத் தண்டனை.
மின்னஞ்சலிருந்து அறுந்து விழும் எழுத்துகள் எனக்குள் நுழைந்தன அன்று. கறுப்பு மையில் தட்டச்சுச் செய்யப்பட்ட எழுத்துக்கள் இவ்வளவு வன்மங்களைச் சுமந்து வரும் என்பதை யார் அறிவார்? அது நிரபராதிபோல், வெறுமனே வெள்ளைச் சுவரில் தெரிகின்றன. ஆனால், அவற்றிற்குத் தான் எத்துணை ஆற்றல். அவை வெறுமனே, ஆங்கிலத்தின் இருபத்தாறு எழுத்துக்கள் தான். அவைத் திரும்பத் திரும்ப திரையில் வந்தன. வெறும் எழுத்துக்கள். ஆனால், அவை, நெஞ்சம் கிழிக்கும் வல்லமை படைத்தவை. உடலுக்குள் ஊடுருவி, உடலை உலுக்கி, இருத்தலை கேள்விக்குள்ளாக்கும் வல்லமைப் படைத்தவை. அவை உடலெல்லாம் அட்டைப் போல் அப்பிக் கொண்டு, வாழ்வின் இரத்தத்தை ஈவிரக்கமின்றி உறிஞ்சின. உடலிலிருந்து அவற்றைப் பிய்த்தெெடுக்க முயல்கையில், அவை சதையையும் பறித்துக் கொண்டு வெளிவருகின்றன. இதயமற்ற எழுத்துகள். அவை மூளையை செல்லரிக்கத் தொடங்கின. வைரஸ் அது. மூளை தின்னும் வைரஸ். இதுவரை சம்பாதித்து வைத்த அனைத்து நம்பிக்கைகளும் தின்று அதில் சுகம் காணும் வில்லன். நம்பிக்கைக்கு இடம் இல்லாமல் செய்து கொண்டிருந்தது. நேர்மறை எண்ணங்களை எல்லாம் சுக்கு நூறாக்கும் அணுகுண்டாய் அது பரிணமித்தது.
அவை காட்டும் வன்மம் தான் அளவிட இயலாது. இருபத்தாறு எழுத்துக்கள் உருவாக்கும் மாயவலையில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை எண்ணிமாளாது. பிறர் உயிர் பறிக்க ஆணைகளாய் வருவதோடு, சுயத்திற்கு கழிவிரக்கம் உருவாக்கி, தன்னுயிரை தானே பறித்திடும் நிலை நோக்கியும் தள்ளும். அதுதான் எழுத்துச் செய்யும் வன்மத்தின் உச்சம் எனலாம். தற்கொலைத் தான் மிகப்பெரிய உயிர்பறித்தல். அதுதான் மிகவும் இழிவானது, கொடூரமானது, மிகப்பெரிய கொலை. தனக்குத்தானே ஒருவர் எதிரியாகும் வினோதம். அதை அந்நாளில், அவ்வெழுத்துகள் என்மீதும் நிகழ்த்த போதுமானதாய் இருந்தன. எழுத்தின் வீரியம் உணர்ந்த நாள். வாழ்வின் விளிம்புகளைக் கண்ட நாள்.
எழுத்து ஆயுதம் தாங்கி என்மீது போர்தொடுத்த நாள். சுயத்தை கிழித்தெறிந்த நாள். சுய கவுரவத்தை சுக்குநூறாக்கிய நாள். இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை அர்த்தமற்றதாக்கிய நாள். நேர்மையை பூஜ்யமாக மாற்றிய நாள்.
இன்று, ஆயுதம் ஏந்திய எழுத்துக்கு எதிராக நான் ஆயுதம் ஏந்த கற்றுக் கொண்ட நாள் என்னும் ஆசுவாசம், அன்று எழுத்து உருவாக்கிய வடுக்களிலிருந்து மீண்டெழ உதவுகிறது. எழுத்தெனும் ஆயுதம் ஏந்திப் போராட நான் கற்றிருக்கிறேன். நான் சமூக சீர்திருத்தவாதியாக மாறி, பேனாவால் அல்லது விரல் நுனியால் தட்டச்சு செய்து போர்தொடுக்கிறேன் என நினைக்க வேண்டாம். அது பெரிய அபத்தம். எனக்கெதிராக எழுத்து ஆயுதம் ஏந்தும் போது, நானும் எழுத்தெனும் ஆயுதம் எடுக்கக் கற்றிருக்கிறேன். அதன் ஒவ்வொரு அசைவுகளையும் தாக்குதல்களையும் எதிர்கொண்டு, எதிர்த்துப் போரிட கற்றிருக்கிறேன்.
எழுத்து, ஆக்கவும் அழிக்கவும் ஆயுதங்களைத் தருகிறது.
0 கருத்துகள்