ஊழ்வினை/கர்மா கருத்தியலுக்கும் கிறிஸ்தவத்திற்கும் சம்மந்தம் இல்லை | அ. சந்தோஷ்

சுருக்கம்:

மனிதரைக் கடவுள் படைத்தார். ஒவ்வொருவரையும் தனித்துவமாய்ப் இன்றும் படைக்கிறார். பழைமையின் – முன் ஜென்மத்தின் – எச்சமல்ல தனிமனிதர். கடவுளின் உருவம் பெற்றிருக்கும் மனிதர், மாண்பு மிக்கவர், மீற முடியாத உரிமைகளை உடையவர். அது பிறப்பாலோ, பதிவியாலோ நிர்ணயிக்கப்படுவதில்லை. கிறிஸ்தவத்தில் மறுபிறப்பு – reincarnation – என்பதும் இல்லை. இவ்வுலக வாழ்வின் இறுதியில் கடவுளின் மாட்சிக்குள் நுழைவோம். பிறகு பிறப்புகள் இல்லை. ஒரே பிறப்பு, என்றென்றைக்குமான ஒரே முடிவு. உலகம் கூறும் குறைகள் அனைத்தும் கடவுள் பார்வையில் மாற்றுத்திறன்களே அல்லாமல் சாபங்கள் அல்ல. இது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும். அனைத்தும் காணும் கடவுளின் விந்தை மனிதர்கள் அவர்கள். மனித மனங்கள் மாறினால், சமநீதி ஓங்கும். பணம், பதவி, அதிகாரம் ஆகியவற்றில் ஊறிப்போனவர்கள், தங்கள் இடங்களில் பிறர் அமர்வதை சகித்துக் கொள்வது கடினம் தான். அதற்காகப் பலவற்றை கட்டமைப்பார்கள். மாறித்தான் ஆக வேண்டும் இல்லையென்றால், அதற்காக மற்றவர்கள் நிர்பந்திப்பார்கள்.

photo: pexels.com

மகா விஷ்ணு என்பவர் அரசு பள்ளி ஒன்றில் ஆற்றிய உரையில் அடங்கியிருக்கும் ஊழ்வினை அல்லது பூர்வ ஜென்ப பாவம் குறித்த கருத்துகளுடன் கிறிஸ்தவத்திற்கு துளியளவும் உடன்பாடில்லை. சில தெளிவுகளைப் பெறுதல் நன்று. இந்தியாவில் வாழும் கிறிஸ்தவர்களுள் பாதிக்கும் மேற்பட்டோர் ஊழ்வினை என்னும் கருத்தை நம்புகிறார்கள் என்னும் நிலையில் சிலவற்றை தெளிவுப் படுத்திக் கொள்வது நலம். இக்கட்டுரை முதலில், இந்தியச் சூழலில் எப்படி கிறிஸ்தவர்கள் கர்மா கருத்தியலை ஏற்கிறார்கள் என்பதைப் பற்றிய சமூக உளவியல் பார்வையை முன்வைக்கிறது. இரண்டாவதாக,  நான்கு இறையியல் சிந்தனைகளையும் முன்வைக்கிறது. அவையாவன: கத்தோலிக்கப் பார்வையில் படைப்பு, மனிதர் கடவுளின் சாயல், புதுவாழ்வு (new life), உலகில் நிலவும் தீமை.

கர்மா – ஊழ்வினை: இந்திய கிறிஸ்தவர்கள் ஏற்றிருக்கும் மனநிலை

சமூக உயிரியாக வாழும் மனிதர்கள் பிற மனிதர்களுடன் உறவாடி வாழ வேண்டும் என்பது கட்டாயம். மனிதர் ஒரு சமூக உயிரி என்பது அரிஸ்டாட்டில் போன்ற கிரேக்க மெய்யியலாளர்கள் தொடங்கி, கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த, தோற்றவியல் கருத்தாளர்களான (Phenomenologists) தெரிதா, லெவினாஸ் உட்பட பலரும் முன்வைக்கும் உண்மை. இதையே சமூகவியல், உளவியல், சமூக-உளவியல் போன்ற மானுடவியல்களும் நமக்கு உணர்த்துகின்றன. அறிவியல்களை தாண்டி, தனி மனித வாழ்வு தனிமையில் சாத்தியமில்லை என்பது பொது அறிவுக்கு (common sense) புலப்படும் உண்மை என்பதை மறுக்க இயலாது. சமூக வாழ்வானது மனிதர் பிறரோடு ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகள், அவர்களோடு நடத்தும் உரையாடல்கள் ஆகியவற்றால் நடக்கிறது. இது உறவு, தொழில், வேலை, பொழுதுபோக்கு ஆகியவற்றின் அடிப்படையில் அமைகிறது. இவற்றிற்கு ஏற்ப குழுக்களாகக் கூடுதல், அமைப்புகளை உருவாக்குவதோடு அவற்றில் உறுப்பினர்களாக சேர்தல், விவாதங்களில் ஏற்படுதல், தொழில் சார்ந்த பேரங்களில் ஈடுபடுதல், உறவுகளோடு தொடர்பில் இருத்தல், அவர்களின் வீட்டு விழாக்களில் பங்கேற்றல் போன்றவை நடக்கின்றன. இங்கெல்லாம் உரையாடல்களும் தொடர்பாடல்களும் நடக்கின்றன. இவற்றுள் மதக்குழு தவிர்த்து மற்ற அனைத்திலும், உரையாடும் குழுக்கள் பல சமயங்களை சார்ந்தவைகளாக இருப்பார்கள். இந்தியா போன்ற பெரும் மக்கள் தொகை கொண்ட நாட்டில் பலதரப்பட்ட நம்பிக்கைகள் உள்ளன. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், பிற மதங்களின் தாக்கங்கள் உரையாடல்கள் மற்றும் சிறிதும் பெரிதுமான ஊடங்கள் வழியாக ஒருவர் மற்றவரை பாதிக்கின்றன. இதில் கிறிஸ்தவர்களும் விதிவிலக்கல்ல. கர்மா அல்லது ஊழ்வினை என்பது பொதுவெளியில் காணக்கிடக்கும் பொருள். அதை நம்புவோரும், வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப அவற்றைப் பயன்படுத்துவோரும் உள்ளனர். இந்திய கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரைக்கும், அவர்களுடைய சமூக வாழ்வு என்பது பிற மதத்தினரோடு சேர்ந்து வாழாமல் இயலாது. அவர்கள் இந்து மதத்தாரோடும் உறவாடுவார்கள். தங்களுடைய வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப அவர்கள் சொல்லும் கருத்துகளையும் பயன்படுத்திக் கொள்வார்கள். இதைப்போன்ற பிற கருத்துக்களை இந்துக்களும் கிறிஸ்தவர்களிடமிருந்தும் பெற்றுக் கொள்வதோடு பயன்படுத்தவும் செய்யலாம். இச்சமூக-உளவியல் பார்வையை ஆய்வுகளும் (empirical researches) நிரூபிக்கின்றன. இந்தியாவில் வாழும் 54 விழுக்காட்டு கிறிஸ்தவர்கள் கர்மா அல்லது ஊழ்வினையை நம்புவதாக, Pew Research மையம் 2021 இல் வெளியிட்ட 8 key findings about Christians in India என்னும் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிடுகிறது. மேலும், மறுப்பிறப்பில் (reincarnation and not the resurrection of the body) 29 விழுக்காட்டினரும், கங்கா ஆற்றில் புனிதம் உள்ளது என்பதை 32 விழுக்காட்டினரும் நம்புகிறார்கள். இவைகள் அனைத்தும் கிறிஸ்தவ படிப்பினைகள் அல்ல, மாறாக இந்து மதம் சார்ந்த நம்பிக்கைகள்.

இச்சூழலில் கிறிஸ்தவர்கள் சில தெளிவுகளைப் பெறுதல் நன்று. நான்கு இறையியல் சிந்தனைகளை பார்த்தல் உதவியாக இருக்கும். முதலாவாத, கத்தோலிக்கப் பார்வையில் படைப்பு.

படைப்பு: கத்தோலிக்கப் பார்வை

ஒரு கருத்துத் தெளிவைப் பெறுதல் சிறந்தது. பரிணாமவளர்ச்சி - evolution என்னும் கோட்பாடு கிறிஸ்தவத்திற்கு முற்றிலும் முரணானது என்னும் கருத்து நிலவுகிறது. இது தவறு, திருச்சபை பரிணாமவளர்ச்சி என்பதை சில தெளிவுகளுடன் ஏற்கிறது. அதேவேளையில் படைப்புவாதத்தை (evolutionism) ஏற்கவில்லை. அதாவது, இவ்வுலகில் காணப்படும் தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் என அனைத்தும் அதனதன் போக்கில் தற்செயலாக (accidental) உருவானவை என்பதை திருச்சபை ஏற்பதில்லை. இத்தகைய வாதமானது, அறிவியல்வாதம் (scientism) என்னும் பிறழ்வின் வெளிப்பாடு. அதாவது, புலன்களுக்கு முன்னால், ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படும் (empirically proven) பொருட்களோ யதார்த்தங்களோ மட்டுமே உண்மையானவை என்பதை இவ்வறியல்வாதம் முன்வைக்கிறது. இதன் அடிப்படையில் பார்த்தால், அன்பு, உண்மை, அழகு, நன்மை போன்ற இயற்பியலுக்கு அப்பாற்பட்ட (metaphysical) யதார்த்தங்களைப் பற்றி யாரும் பேச முடியாது. ஒருவிதத்தில் சொல்லப் போனால் அன்பு என்று ஒன்று இல்லை என்று ஒரு அறியவயல்வாதி வாதிடலாம். ஆனால், அன்றாடம் உறவிலும் உரையாடலிலும் ஈடுபட்டு நெருக்கமான குடும்ப உறவுகளை பாதுகாத்து அதில் இன்புறும் ஒருவரிடம் அன்பு இல்லை என்று கூற இயலுமா? மெய்மறக்க வைக்க கட்டடங்களையோ இயற்கை எழில்களையோ பார்க்கும் போது அவ்வழகில் மூழ்கும் ஒருவரிடம் அழகு என்று ஏதுமில்லை என்று கூற இயலுமா?

கடவுளும் புலன்களுக்கு அப்பாற்பட்டவர். புலன்களுக்கு அப்பாற்பட்டவராய் இருப்பதால், அவர் இல்லை என்று கூறுவது, அன்பு அல்லது அழகு என்னும் இயற்கைக்கு அப்பாற்பட்ட உண்மைகள் இல்லை என்று கூறுவதற்கு இணையாக இருக்கும். கடவுள் என்பவர், உலகை உருவாக்கி இயக்கும் ஞானமாக இருக்கிறார். அதில் விளங்கும் ஒழுங்கு, இயல்பு, ஆகியவை அனைத்தும் கடவுளின் திட்டமிடுதலின் பயன்தான். பரிணாம வளர்ச்சியின் பயனாக, நாம் நம் பெற்றோரிடமிருந்து பிறக்கலாம். ஆனால் அதிலும் கடவுளின் திட்டம் உண்டு. திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்:

நாம் நம்முடைய பெற்றோரின் வழியாகவே உலகில் பிறக்கிறோம் என்பதும், நாம் அவர்களுடைய பிள்ளைகளாக இருக்கிறோம் என்பதும் உண்மைதான். அதே வேளையில் நம்மை தமது சாயலில் படைத்து தமது பிள்ளைகளாக வாழ அழைப்பு விடுத்த கடவுளிடமிருந்து பிறக்கிறோம். ஆகையால், மனிதரின் தோற்றம் எவ்விதத்திலும் ஏதேச்சையானது அல்ல, மாறாக அது கடவுளின் அன்பின் திட்டத்தின் பகுதியாக உள்ளதுஎன்று கூறுகிறார்.

இரு காரியங்களை உன்னிப்பாக கவனித்தல் நன்று. முதலாவதாக, நாம் பெற்றோர் வழியாகப் பிறக்கிறோம் என்பது உண்மையே. ஆனால், அது நோக்கங்களற்றது (purposeless) அல்ல, தற்செயலானதும் அல்ல. மாறாக, கடவுளின் திட்டத்தின் பகுதி. பரிணாமவளர்ச்சி என்னும் கொள்கை, இவ்வுலகில் வாழும் உயிரினங்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்த பரிணாம – படிப்படியான – வளர்ச்சியின் விளைவாக உருவானதாகக் கூறுகிறது. ஆனால் இவ்வளர்ச்சியின் உள்ளாக இருந்து செயலாற்றுவது கடவுள்தான். இதுவே கத்தோலிக்கப் பார்வை. இது படைப்புவாதம் (creationism) என்னும் திரிபுக் கொள்கைக்கு எதிரானது. அதாவது, கடவுள் உலகில் உள்ள அனைத்தையும் ஆறே நாட்களில் படைத்து முடித்தார் என்று நம்பும் போக்கு. இது விவிலிய அடிப்படைவாதம் (biblicism) என்னும் திரிபுவாதத்தின் உட்பிரிவு.

அனைத்திற்கும் தொடக்கமாகவும், அதை பராபரிப்பவராகவும், அதை முழுமையை நோக்கி வழிநடத்துபவராகவும் கடவுள் இருக்கிறார். உலகில் தொடக்கத்தைப் பற்றி, பெருவெடிப்பு (big bang) கொள்கையால் அறிவியல் விளக்க முயன்றாலும், அதற்குக் காரணமாக கடவுள் இருக்கிறார் என்பதையே கிறிஸ்தவம் முன்வைக்கிறது. பெருவெடிப்பு என்பது தற்செயலானதும் அல்ல, அது நோக்கமற்றதும் அல்ல. மாறாக அதை அன்பால் திட்டமிட்டு செயல்படுத்தும் கடவுள் இருக்கிறார். மனிதரின் அன்றாட வாழ்வின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் நோக்கம் சார்ந்ததுதான். இந்த வாதத்தோடு (logic) மேற்கூறியதை பொருத்திப் பார்த்தால் புரிந்திட இயலும்.

கடவுள் எப்படி உருவாக்கினார்? கடவுளுக்கு முந்தையாத வேறு ஏதாவது ஒன்று உலகில் இருந்ததா? அப்படியிருந்தால், கடவுள் அப்பொருளை விட ஆற்றல் குறைந்தவராக அல்லவா இருக்க முடியும்? கடவுள் உலகை வெறுமையிலிருந்து உருவாக்கினார் (creation out of nothingness) என்பதை கிறிஸ்தவம் நம்பி போதிக்கிறது. கடவுளுக்கு முந்தையதாக எப்பொருளும் இருந்தது இல்லை. உலகம் உருவாக்க வேண்டும் என்னும் நிர்பந்தமும் கடவுளுக்கு இல்லை. அவர், சுதந்திரமாக (சுதந்திரம் இன்றி உண்மையான அன்பு வெளிப்படாது என்பது சாமான்ய புத்திக்குப் புலனாகும்) எவ்வித நிர்பந்தங்களுமின்றி உலகைப் படைத்தார். வெறுமையில் கடவுள் தமது ஞானத்தால் உலகைப் படைத்தார். இங்கு கடவுளைக் கட்டுப்படுத்தும் ஏதுமில்லை. ஆகையால் தான் அவரை எல்லாம் வல்லவர் என்று நாம் அழைக்கிறோம். உலகை உருவாக்கும் நிர்பந்தம் கடவுளுக்கு இருந்திருந்தால், அவரை நிர்பந்திக்கும் பொருளோ, ஆளோ, அவரை விட ஆற்றல்மிக்கவராக விளங்குவார். ஆகையால், வெறுமையிலிருந்து அனைத்தையும் படைத்தார் என்னும் நம்பிக்கை வாழ்வோடு தொடர்புடையது. எடுத்துக்காட்டாக மனித மாண்பு என்பது சக மனிதன் அனுமதிப்பதால் ஒருவருக்கு கிடைக்கும் பிச்சை அல்லை, அது கடவுளால் அவருக்குக் கொடுக்கப்பட்ட உரிமை. அம்மாண்மை பிற மனிதர்கள் பிச்சையாகப் போட வேண்டாம். இதன் அடிப்படையில்தான் உலக மனித உரிமைகள் பிரகடனமும், ஏன் நம்முடைய அரசியல் சாசனமும் எழுதப்பட்டிருக்கிறது. இவைகள் எழுதப்பட வேறுபல காரணிகள் இருந்தாலும், அவற்றின் அடிநாதமாக இழையோடி இருப்பது, கிறிஸ்தவம் உருவாக்கிய பண்பாட்டுச் சூழல் என்பதை மறுக்க முடியாது. இதன் அடிப்படையில் உருவான மெய்யியல்-அரசியல்-சமூக விவாதங்கள் இவை உருவாக வழிகோலின.

இனி கர்மாவுக்கு வருவோம். கடவுள் வெறுமையிலிருந்துப் படைத்தார் என்னும் கருத்து ஒவ்வொரு மனிதருக்கும் பொருந்தும். ஒவ்வொரு மனிதரும் கடவுளின் தனிப்படைப்பு. கடவுளின் படைப்பு. இன்னொன்றிலிருந்து உருவாக்கும் பிரதி அல்ல (not the copy of something else). இதையே நாம் தனித்துவம் என்கிறோம் (uniqueness). ஒவ்வொரு மனிதரும் மற்றவரிலிருந்து, உடலாலும், சிந்தனையாலும், ஆற்றலாலும், மன வலிமையாலும் வேறுபடுகிறார் (different from the rest).  ஆகையால்தான் சக மாணவர்களோடு, குழந்தைகளை ஒப்பீடு செய்யும் போது குழந்தைகள் கோபப்படுகிறார்கள். இல்லையென்றால், அவர்கள் மனம் உடைந்து போய், செயலற்றவர்களாக மாறி விடுகிறார்கள். ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தனித்துவம் வெளிப்படுத்தும் போதுதான் அவர் தன்னுடை வாழ்வு அர்த்தம் மிக்கதாக மாறுவதாக உணர்கிறார். ஒவ்வொரு மனிதரையும் கடவுள் தம் சாயலில் படைக்கும் போது, அது கடவுளின் சாயலே ஒழியே, முன் ஜென்ம பாவத்தில் சாயல் அல்ல. ஒவ்வொரு மனிதரும் புதுப்பிறப்பு என்னும் போது, அவர் முந்தைய பிறப்பின் எச்சமும் அல்ல, நீட்சே கூறுவதைப் போன்று மேலான வாழ்வுக்கான முன்னோட்டமும் அல்ல. அப்படியானால், மனிதரை பொருளாக தரம் தாழ்த்தும் (object) கொடூரம் அரங்கேறும். அதுதான் இன்று பெருமளவில் போதிக்கப்படுகிறது என்பது சோகமான உண்மை. இதைப் போதிப்பதில் கிறிஸ்வப் போதகர்களும் விதிவிலக்கல்ல.

மேலும் கடவுள் எல்லாம் வல்லவர் என்பதில் அடிப்படையில் பார்க்கும் போது, கர்மா என்பது கடவுளை நிர்ணியிக்கும் காரணியாக மாறிவிடும். கடவுள் புதிதாகப் படைக்கும் மனிதரை, நிர்ணயிக்கும் காரணியாக கர்மா மாறிவிடும். அவ்வகையில் கடவுள் தமது கடவுள்தன்மையை இழந்து விடுகிறார். அவர் சுதந்திரமாக, எவ்விதமான நிபந்தனைகளுமின்றி அன்புகூர்ந்து (நிபந்தனைகளற்ற அன்புக்காக ஏங்குபவர்கள் நாம்) மனிதரை படைக்கும் திராணி அற்றவராக மாறிவிடுவார். நிபந்தனையற்ற அன்பால் நாம் அன்பு செய்யப்பட வேண்டும் என்னும் ஏக்கமே, கடவுள் நிபந்தனையற்ற அன்பால் மனிதரைப் படைத்தார் என்பதற்கான வாதமாக எடுத்துக் கொள்ள முடியும். ஆக, ஒவ்வொரு மனிதரையும் கடவுள் வெறுமையிலிருந்து – கர்மாவிலிருந்து அல்ல – படைக்கிறார். மனிதர் பெற்றிருப்பது கர்மாவின் சாயல் அல்ல மாறாக அளவற்ற, நிபந்தனைகளற்ற கடவுளின் சாயல்.

மனிதர் கடவுளின் சாயல்

கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்” (தொநூ 1, 27) என்று விவிலியம் கூறுகிறது. மனிதர் பெற்றிருக்கும் உருவமானது கடவுளுடையது. வெறுமையிலிருந்து அனைத்தையும் படைக்கும் அன்பாய் இருக்கும்” (God is love” – his very essence is love) கடவுளின் சாயலைப் மனிதர் பெற்றிருக்கிறார். இதிலிருந்து விரியும் இரு மிக முக்கியான உண்மைகள் உண்டு. மனிதர் பயன்படு பொருள் அல்ல; இன்னொன்றிற்காக உருவாக்கப்பட்டவரும் அல்ல; மனிதர் ஒவ்வொருவரும் தன்னிலே அர்த்தம் உள்ளவர் (man is not a means but an end in herself/himself). அவர்கள், கட்டமைக்கப்பட்ட உயர் சாதியின் பகுதியாய் இருப்பதாலோ, பணம் படைத்ததாலோ இது நிர்ணயிக்கப்படுவதில்லை. வரவிருக்கும் பிறப்புக்காக குணங்களை சேகரிப்பதான கட்டமைக்கப்பட்ட ஈனப்பிறப்போ, உயர் பிறப்போ அல்ல அது. அவைகள் எல்லாம் பிறழ்வுகள். அவைகள் அனைத்தும் மனிதரை மனிதரல்லாதவராக மாற்றும். நான் தெய்வீகப் பிறப்பு என்பதும் பிறழ்வே; நான் ஈனப்பிறப்பு என்பதும் பிறழ்வே. இவைகள் இரண்டும் கடவுள் என்னும் எல்லாம் வல்லவரையும் நல்லவரையும் இழிவுப்படுத்தும் செயல்பாடுகள். மனிதர் என்பவர் மனிதர் – human is just a human. அறிவும் விவேகவும் பெற்றவர்கள். நல்லவராய் இருக்கும் கடவுள் நல்லது மட்டும் செய்வதைப் போன்று, சுய அறிவைப் பயன்படுத்தி நன்மையில் வாழ்வதற்கான உள்ளியல்பைப் பெற்றவர்கள்.

இரண்டாவதாக, மனிதர் மீற முடியாத உரிமைகளைப் பெற்றவர். இது அனைவருக்கும் பொருந்தும். மேற்கூறியதைப் போன்று, நான் உயர் சாதியைச் சார்ந்தவன் என்றோ, உயர் பதிவியை வகிக்கிறேன் என்று சொல்வதாலோ எவரும் சிறப்பு உரிமைகளைப் பெறுவதில்லை. இதையே சமதர்மம் என்றும், சமூக நீதி என்றும் பெரியார் அழைத்தார். கர்மாவை அதற்குள் திணித்தல், இருத்தியல் சார்ந்தும், அன்றாட வாழ்வியல் சார்ந்தும் தவறானது.

புதுவாழ்வு (new life)

இவ்வுலக வாழ்வின் இறுதியில் கடவுளோடு சேரந்து நாம் இன்புற்றிருப்போம் என்பதை கிறிஸ்தவம் போதிக்கிறது. மாறாக, மறுபிறப்பு (reincarnation or samsara) எடுத்து மீண்டும் பிறப்போம் என்பது போதனை அல்ல. உலகம் உண்ண உண்டு, உடுத்த உடுத்தி (பாரதிதாசன்) வாழ்வதன் பயனாய் கிடைக்கும் நிறைபேறுபலனே, விண்ணக வாழ்வு என்று கிறிஸ்தவம் போதிக்கிறது. இயேசு இதை, கடுகு விதையின் உவமை வழியாக விளக்குகிறார். தரையில் வேரூன்றி, பறவைகள் தங்கக் கூடும், உண்ண பழமும் கொடுத்து வானுயர உயர்ந்து நிற்கும் மரம் விண்ணரசுக்கான உவமையாக இயேசு முன்வைக்கிறார் (மத்தேயு 13, 31-32). இவ்வுலகில் வாழும் பயன்மிக்க வாழ்வின் தொடர்ச்சியே விண்ணக வாழ்வு. அப்படி வாழாதவர்கள் நரகத்திற்கு தள்ளப்படுவார்கள் அல்லது, உத்தரிப்பு நிலையில் தூய்மையாக்கப்படுவார்கள் என்று கிறிஸ்தவம் கூறுகிறது. ஆனால், அதுவும் அன்பாய் இருக்கும் கடவுளால் தான் நிர்ணயிக்கப்படுகிறது, மனிதர்கள் தீர்ப்பு அளிக்க அருகதை அற்றவர்கள் என்பதையே திருவிவிலியம் போதிக்கிறது. கடவுள் அநீதி செய்பவர்களை மன்னித்தால், அவரை கண்டனத்துக்கு உட்படுத்த யாராலும் இயலாது (மத்தேயு 10, 1-16).

உலகில் நிலவும் தீமை

மஹா விஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகளை கர்ம பலனுடன் இணைத்திருக்கிறார். இது பெரும் கண்டனத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. இது பொது புத்திக்கு ஒத்துப் போகாத ஒன்று என்பதை எல்லாராலும் ஏற்க இயலும். சில ஆண்டுகளுக்கு முன்னர், சுயமாக சம்பாதித்து வாழும் மாற்றுத் திறனாளி ஒருவர் இவ்வாறு பேசினார்: நாங்கள் சமூகத்தில் மாண்புடன் வாழ்கிறோம். எங்களை ஊனமுற்றவர்கள் என்று குறைகூறி, தாங்கள் நிமிர்ந்து நடப்பதாக சுயம் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் முழு மனிதர்களைப் போல நாங்கள், குடித்து விட்டு ஓடைகளில் விழுந்து கிடப்பதில்லை. தன்மானத்துடன் வாழ்கிறோம் என்றார். அவரை கேட்டவர்களுக்கு உத்வேகம் வந்தது என்பது உண்மை. அவர் கூறியதிலிருந்து ஒரு உண்மைத் தெளிவாய்த் தெரிகிறது. உலகம் கூறும் குறைகள் அனைத்தும் கடவுள் பார்வையில் மாற்றுத்திறன்களே அல்லாமல் சாபங்கள் அல்ல. 2009 ஆம் ஆண்டு Joshua Weigel என்பவர் இயக்கி Nick Vujicic நடித்து வெளிவந்த Butterfly Circus என்னும் குறும்படம் இக்கருத்தை அழகாகச் சித்தரிக்கிறது. இதை கிறிஸ்தவ இறையியலாளர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கூறிச் சென்றார்கள். இருவரின் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் சொல்வதை விவாதத்திற்கு உட்படுத்துதல் நன்று.

புனித தோமஸ் அக்யுனாஸ் அவர்கள் தரும் விளக்கத்தை முதலில் பார்ப்போம். கடவுள் மிகப்பெரிய ஓவியர். அவர் உலகத்தை தன் ஞானத்தால் வரைகிறார். அது விசாலமானது, பெரிது. இம்மாபெரும் விசலானமான அண்டத்தில் நாம் பார்ப்பதோ மிகச் சிறியத் துகள், நாமும் சிறு துகளே. சிறு மூளை பெற்ற சிறு/குறை அறிவாளிகள். அர்ப்ப ஞானத்தால் புரிந்து கொள்ள முடியாததாய்த் தோன்றும் சிலவற்றை நாம் குறைகளாகப் பார்த்து, அது கடவுளின் இயலாமையாக முன்வைக்கிறோம். இதை யோபின் நூலும் முன்வைக்கிறது. தனக்கு ஏற்பட்ட துயரின் அதி தீவிரத்தில், யோபு கடவுளிடம் குறைகூட முற்படுகிறார். கடவுள் பெரும் உரையுடன் வருகிறார். நீண்ட உரையாடலுக்கு பின்னர் யோபு கூறுகிறார்:

இதோ! எளியேன் யான் இயம்புதற்குண்டோ? என் வாயைக் கையால் பொத்திக் கொள்வேன். ஒருமுறை பேசினேன்; மறுமொழி உரையேன்; மீண்டும் பேசினேன்; இனிப் பேசவேமாட்டேன்” (யோபு 40,4).

கடவுள் விடுவதாய் இல்லை, இரண்டாவது உரையுடன் மீண்டும் தொடர்கிறார். விவிலியத்தில் காணப்படும் கடவுளின் நீண்ட உரைகள் இவை.

யானையின் வாலைப் பிடித்து, யானை விளக்குமாறு போன்றது என்பதற்கு இணையானச் செயல். மிகப்பெரும் ஓவியரான கடவுள் உலகின் நிறைவில் இன்று நாம் காணும் குறைகள் எதவும் குறைகளல்ல என்பதை காண்பிப்பார். இதில் நம்பிக்கை பெருமளவு உண்டு.

இரண்டாவது சிந்தனை டான்டே அலிகேரி (Dante Alighieri) தருகிறார். இது விண்ணக நிறைவாழ்வோடு தொடர்புடையது. அவர் இவ்வுலகை ஒரு நூலுடன் ஒப்பிடுகிறார். இதில் பல அதிகாரங்கள் உள்ளன. முழுமையாக நம் வாசிப்பிற்கென்று அது நமக்குத் தரப்படவில்லை. சில பத்திகள், சில வரிகள், சில வார்த்தைகள் வாசிப்பிற்கென்று தரப்பட்டிருக்கின்றன. ஆகையால் ஓரிரு வரிகளை வாசித்து விட்டு, அதுவே எல்லாம் என்பதை அபத்தம். சிலவற்றைக் காணும் போது அது குறைகளாகவோ தீமைகளாவோ காண இயலும். உலகில் நிறைவில் அது எல்லாம் முழுமையாய் நமது வாசிப்பிற்குத் தரப்படும். அனைத்தையும் முழுமையாய்க் காண்கையில் அனைத்தும் நலனாய்த் தெரியும்.

தீமைகளை விளக்குவதற்காக மேற்கூறியவை உதவும். அவற்றில் உண்மை உள்ளது என்பது ஏற்பது அவசியம். கடவுள் பார்வையில் எதுவும் குறையில்லை. தன் சாயலில் படைத்த மனிதரை, கடவுள் இழிவாகப் படைக்க மாட்டார். மனித மனங்கள் மாறினால், சமநீதி ஓங்கும். பணம், பதவி, அதிகாரம் ஆகியவற்றில் ஊறிப்போனவர்கள், தங்கள் இடங்களில் பிறர் அமர்வதை சகித்துக் கொள்வது கடினம் தான். மாறித்தான் ஆக வேண்டும் இல்லையென்றால், அதற்காக மற்றவர்கள் நிர்பந்திப்பார்கள்.

Fr. ஜோசப் சந்தோஷ்

தக்கலை மறைமாவட்டம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்