கிறிஸ்தவ-இஸ்லாமிய உறவில் உரையாடலின் அவசியம்

ஒன்றில் அமைதியிலும் நல்லிணக்கத்திலும் சேர்ந்து பயணிப்போம், இல்லையேல், பலகூறுகளாகப் பிரிந்து அழிந்து போவோம்” (John Paul II. 1986).

வத்திக்கான் திருச்சங்கம் தொடங்கி, மத நல்லிணக்கம் ஏற்படுத்தும் பொருட்டு, பல்சமய உரையாடல் ஊக்குவிக்கப்பட்டது. ஆனால், தீவிர வலதுசாரி சிந்தனைகள் சமூகத்தின் மையநீரோட்டத்தின் பகுதியாக மாறுவதும், மையநீரோட்டக் கருத்துக்களை தீவிரவாதப்படுத்துவதும் நேர்ந்து வரும் இன்றைய சூழலில்  (M.K. Narayanan 2024, p. 8), இந்தியா, குறிப்பாக, கேரள சிரியன் கத்தோலிக்கர்கள் மத்தியில் இஸ்லாம் வெறுப்பு (Islamophobia) அதிகரித்திருக்கிறது என்றுதான் கூற இயலும். உரையாடல்களை விட வெறுப்புகளை சுமப்பவர்களாக மாறிவிட்டோமோ? என்னும் அச்சமும் ஐயமும் ஏற்பட்டிருக்கிறது. கத்தோலிக்க ஆயர் ஒருவர் வெளிப்படையாக திருவழிபாடு கொண்டாட்டத்தின் இடையில் இதைக் கூறினார் (R. Krishnakumar 2021). இஸ்லாம் வெறுப்பின் மூலமாக, ஓட்டுவங்கி தகராமல் அதிகாரத்தைக் கைப்பற்ற முழுமுனைப்புடன் ஈடுபடும் மையநீரோட்ட அதிகார அரசியலை கிறிஸ்தவர்கள், தங்களுக்கு சாதகமாக்கிட எத்தனிக்கிறார்கள். அதாவது, வெறுப்பின் மூலம் மத-வழிபாட்டுக் குழு சிதறிப்போகாமல் பத்திரப்படுத்த முயல்கிறார்கள் என்றுதான் கூற இயலும். அத்தோடு இழந்த பொருளாதார மேட்டிமையை மறுபடி நிலைநாட்டவும் எத்தனிக்கிறார்கள் (Kesava Menon 2023). இது கிறிஸ்தவ மதிப்பீடுகளுக்கு ஒவ்வாதவை என்பது உண்மை. இதிலிருந்து விடுதலை அவசியம். உரையாடலை தான் இதற்கான மாற்றாக திருஅவை வலியுறுத்துகிறது. இதைத்தான் இன்றைய திருத்தந்தையும் செயல்படுத்த முனைகிறார்.

photo: pixabay.com

1.  கிறிஸ்தவர்களின் இஸ்லாம் வெறுப்பு: தற்போதைய நிலவரம்

லவ்-ஜிகாத் என்னும் கருத்து, கிறிஸ்தவர்களால் முதலில் பயன்படுத்தப்பட்டது என்று, மதப்பெரும்பான்மை கருத்தாக்கம் மூலம் அரசியல் செய்வோர் கூறுகின்றனர். கர்னாடகாவைச் சேர்ந்த இந்து அமைப்புகள் இதை 2007இல் பயன்படுத்தினர் என்றும், 2009இல் கேரள ஆயர் பேரவை இதை முன்வைத்தது என்றும் கூறப்படுகிறது. ஆனால், 2009இல் கேரளா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு வழியாக இச்சொல்லாடல் பொதுச்சமூகத்தின் நடுவில் பெரும் புழக்கத்திற்கு வந்தது (Srinivasan Jain, Mariam Alavi and Supriya Sharma 2024). இயல்பான காதல் உறவுகள் திருமணங்களின் முடிந்தன என்பதுதான், நிகழ்வுகளின் மீதான பகுப்பாய்கள் கூறின. பெண்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பவர்கள் ஆண்கள் என்னும் ஆணாதிக்கச் சிந்தனை, திருமணமானப் பெண்களை திசைத்திருப்பின என்பது பின்னர் நிரூபணமாயின. தகவல்களும் தரவுகளும் லவ்-ஜிகாத் என்னும் செயல்திட்டத்தை நிரூபிக்கும் அளவில் இல்லை என்பதை அறிவர் பலரின் நூல்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன. (Brinda Karat 2024, p. 34; Srinivasan Jain, Mariam Alavi and Supriya Sharma 2024; Ashis Roy 2024). நிரூபிக்கப்பட்ட தரவுகள் இல்லாத சூழலில், கூடுதல் அச்சங்கள் முன்வைக்கப்பட்டன. மதப் பெரும்பான்மையினரின் அதிகார கைப்பற்றலுக்கும், தக்கவைத்தலுக்கும் உதவும் வகையில் வெளிவந்த The Kashmir files (2022) The Kerela Story (2023), கிறிஸ்தவர்களின் இஸ்லாம் வெறுப்புக்கு தீனி போட்டன. The Kerala Story உண்மைக் கதையாகச் சித்தரிக்கப்பட்டு, மறைக்கல்வி மாணவர்களுக்கு காண்பிக்கும் நிலையை அடைந்தது (Sandeep Vellaram 2024, p. 6; The Hindu Bureau 2024, p. 6). இதற்குள் அடங்கியிருக்கும் ஆபத்துகளைப் பற்றியும், அது நற்செய்தி மதிப்பீட்டிற்கு எதிரானது என்றும், மற்று பல கிறிஸ்த அமைப்புகள் கூறின. மைய அதிகாரத்தில் இருப்போர்கள் மதப்பெரும்பான்மை மூலம், மணிப்பூரில் தீ மூட்டி, இரு இனக்குழுக்களை அழிய வைக்கிறது என்பதை நினைவில் கொள்ள, கிறிஸ்தவ அமைப்புகள் வலியுறுத்தின. கிறிஸ்த சிறுபான்மையினருக்கு எதிராக, இந்துப் பெரும்பான்மைவாதம் அரசியலாக்கப்பட்டுள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட்டது. (G. Anand, 2024, 1 & 6). மனிப்பூரில் அவர்கள், கிறிஸ்தவர்களை நாக்ரோ-பயங்கரவாதிகள் என்றும், இந்துக்களின் நிலங்களை அபகரிப்பதற்கான வெளிநாட்டு கிறிஸ்தவர்களின் சதி என்னும் குற்றம் சாட்டினர் (Brinda Karat 2024, p. 36). சிலர் இஸ்லாம்-கிறிஸ்தவ நல்லிணக்கத்தை ஊட்டிவளர்க்கும் நோக்குடன், ஆலய வளாகத்தில் இத்-கா விழா கொண்டாட அனுமதித்தனர் (Abdul Latheef Naha 2024, 6). மேற்கூறிய இவ்வெறுப்புக்கு சமூக-பொருளாதாரச் சூழல்கள் காரணமாயின என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

2.  இஸ்லாம் வெறுப்பு: சமூக பொருளாதார காரணங்கள்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து, திருவிதாங்கூர்-கொச்சி மலபார் மலைப்பகுதிகளில் சிரியன் கிறிஸ்தவர்கள் தோட்டத்தொழிலில் ஈடுபட்டனர். இக்காரியத்தில் அவர்கள் பிறமதத்தினரை முந்தினார்கள். இதில் பெரும் பொருளாதார முன்னேத்தை அடைந்தனர். இவ்வெழுச்சியும் வளர்ச்சியும், நல்ல கல்வியைப் பிள்ளைகளுக்குக் கொடுப்பதற்கும் உதவியது. 2010ஆம் ஆண்டுக்குப் பின்னர், பொருளாதார செழிப்பு வீழ்ச்சியை சந்திக்கத் தொடங்கியது. இந்தியாவும் ஆசியான் அமைப்பும் சுதந்திர வணிகத்திற்கான புரிந்துணர்தலில் கையொப்பமிட்டன. இதன்பின் வியட்னாம் ரப்பர் இந்தியாவிற்கு இறக்குமதியானது. இது ரப்பர் தொழில் மேற்கொண்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இச்சூழலில், சிரியன் சபையைச் சேர்ந்த இளந்தலைமுறையினரில் பலர் வெளிநாடுகிளில் செவிலியர்களாக பணிபுரியத் தொடங்கினார்கள். குடும்பமாக புலம் பெயர்ந்தவர்களும் உண்டு. அங்கு வளர்ந்த பிள்ளைகள் ஊர்களுக்குத் திரும்ப விரும்பவுமில்லை. இவ்வாறாக, சிரியன் மக்களின் எண்ணிக்கைக் குறையத் தொடங்கியது. இதே வேளையில், இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், கல்வி மூலம் உயர்நிலைகளை அடையத் தொடங்கினர். விற்பனைக்கு வந்த, சிரியன் சபை உறுப்பினர்களின் வீடுகளை வாங்கும் பொருளாதார உயர்வை அவர்கள் அடைந்தார்கள். மதப்பெரும்பான்மையினர் முன்னெடுத்த இஸ்லாமியர்களின் மக்கள்தொகை-ஜிகாத் என்னும் கருத்தாக்கத்தை கிறிஸ்தவர்கள் உள்வாங்கிக் கொண்டார்கள் (Srinivasan Jain, Mariam Alavi and Supriya Sharma 2024). ஆனால், அவர்கள் மத்தியில் இனப்பெருக்க விகிதம் குறைந்து வருகிறது என்பதை வசதிக்கேற்ப மறந்தார்கள், ஏற்க மறுக்கிறார்கள். தேசிய குடும்ப நல ஆய்வு-4இன் கணக்குப்படி, 2001க்கும் 2011க்கும் இடையில், இந்துக்கள் மத்தியில் மொத்த கருவள வீதம் 1.5 குறைந்திருக்கிறது. அதாவது, 4.1இலிருந்து 2.6 என்னும் நிலையை அடைந்திருக்கிறது. இதே வேளையில் இஸ்லாமியர்கள் இடையில் இது, 1.9 குறைந்திருக்கிறது. அதாவது, 4.8இலிருந்து 2.9ஐ அடைந்திருக்கிறது (Parakala Prabhakar 2023, p. 86). சொந்த சமூகத்தின் இயலாமைகளுக்கான வடிகாலாக, இஸ்லாம் வெறுப்பு மாறிவிட்டது என்றே அறிவர்கள் கூறுகிறார்கள். இதில், பொது வெளியில் பரவிக்கிடக்கும், பெரும்பான்மைவாதம் வழியாக அதிகாரம் தக்கவைத்தலின் கருத்தியல்களை இவர்கள் சொந்தமாக்கியிருக்கிறார்கள்.

3.  வெறுப்பு: உள்ளுறையும் இயலாமைகளின் வடிகால்

நான் நல்லவள்/ன் மற்றவர்கள் கெட்டவர்கள் என்பது குழந்தைகளின் வளர்ச்சிப் படிநிலையின் பகுதியாக இருக்கிறது என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். நன்மையை ஏற்று, தீமையை விலக்கி வாழ வேண்டும் என்பது சிறுவயதிலிருந்து குழந்தைகள் மனதில் ஊட்டப்படுகிறது. தீயவை தீய பயத்தலான் தீயவை தீயினும் அஞ்சப் படும்என்பது குறள் தரும் பாடம். இதன் அடிப்படையில் ஒருவரின் ஏற்புடைமை சமூகத்தில் நடைபெறுகிறது என்பதும் உண்மை. நல்லன செய்வோர் நல்லவர்களாகவும், தீயன செய்வோர் தீயவர்களாகவும் சமூகத்தில் கட்டமைக்கப்படுவதும், அதன் அடிப்படையில் அவர் சமூகத்தில் ஏற்கப்படுவதும் நிராகரக்கப்படுவதும் நடக்கிறது. நெஞ்சம் நிமிர்த்து நேர்மையின் பாதையில்…” என்பது கூறப்பட்டாலும், சமூகம் அதை அதிகமாகக் கொண்டாடுவதில்லை. ஆகையால், நேர்மையாய் வாழ்வதை கற்பதைத் தவிர்த்து நல்லவராகவாழும் பயிற்சியை குழந்தைகள் சிறுவயதிலிருந்தே பெறுகிறார்கள். தீமைகள் வெளிப்படும் போது, அதை மறைக்க பொய் சொல்லுவதும், அதைப் பழிகளாக பிறர் மீது சுமத்துவதும் வாடிக்கையானச் செயலாக இருக்கிறது. தனக்குள்ளிலிருந்து வெளிப்படும் மிருகத்தன்மையை மறைப்பதற்காக சுற்றியிருக்கின்றவற்றின் உதவியை நாடும் பிள்ளைகள், காலப்போக்கில், அதை ஒரு குழுவினர் மீது சுமத்துகிறார்கள். அது மொழிக்குழு, இனக்குழு, மதக்குழு என எதுவாகவேனும் இருக்கலாம். இவ்வாறாக, தனிமனிதர், தனக்குள் உறையும் மிருகத்தன்மையை சுயம் ஆராய்தல் மூலம் களையும் கலையை சொந்தமாக்கமால், பொது எதிரியின் மீது திணித்து தப்பிக்கப் பார்க்கிறார் (Sudhir Kakar, 2003, p. 189; Ashis Roy 2024).

4.  வெறுப்பு: கிறிஸ்துவின் நற்செய்திக்கு முரண்

தனிமனித வெறுப்பு, இன வெறுப்பு, மொழி வெறுப்பு, மத வெறுப்பு ஆகிய அனைத்தும், கிறிஸ்து போதித்த சகோதர அன்பிற்கு எதிராக நிற்கிறது. வெறுப்பு, உள்ளுறையும் இயலாமைகளை வடிகால் செய்யும் முயற்சி என்பதும் ஏனோ மறக்கப்படுகிறது (காண் Sudhir Kakar 1996, p. 189). தொடக்க கால கிறிஸ்தவர்களுக்கு, திருத்தூதர்கள் சகோதர வெறுப்பை ஒதுக்கி வாழவேண்டும் என்பதை அழுத்தமாக முன்வைத்தார்கள். திருத்தூதர் யோவான், தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் அனைவரும் கொலையாளிகள்” (1 யோவா 3, 15) என்றும், நாம் சகோதர அன்பு கொண்டுள்ளதால், சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்து வந்துள்ளோமென அறிந்துள்ளோம்” (1 யோவா 3, 14) என்றும் கூறுகிறார். மேலும் அவர், கடவுளிடம் அன்பு செலுத்துவதாகச் சொல்லிக் கொண்டு தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் பொய்யர்” (1 யோவா 4, 20) என்றும் கூறுகிறார். திருத்தூதர் பவுல், கடவுள் மீது கொள்ளுகின்ற அன்பும் பற்றும், பிறரிடத்தில் கொள்ளும் அன்பு வழியாக நிறைவடைகிறது (உரோ 13, 8) என்று கூறுகிறார்.

வெறுப்பு தனிமனித வாழ்வையும் சமூக வாழ்வையும் உலக அமைதியையும் சீர்குலைக்கும் என்பது பொது அறிவுக்கு அன்னியமல்ல. நம்பிக்கை வாழ்வின் பட்டறிவும், நூற்றாண்டுகளாக சொந்தமாக்கிக் கொண்டமும் ஞானமும் இதைத்தான் கற்பிக்கிறது (Pope Francis 2020, n. 274 FT). இஞ்ஞானத்தைச் சொந்தமாக்கிய, இருபதாம் நூற்றாண்டிம் மாபெரும் தலைவர்களுள் ஒருவரான திருத்தந்தை புனித இரண்டாம் ஜாண் பால், ஒன்றில் அமைதியிலும் நல்லிணக்கத்திலும் சேர்ந்து பயணிப்போம், இல்லையேல், பலகூறுகளாகப் பிரிந்து அழிந்து போவோம்” (John Paul II. 1986), என்று பல்சமயத் தலைவர்களோடு உரையாடிய போது பேசினார். அழியாமல் சேர்ந்து பயணிக்க ஒரே ஒரு வழிதான் உண்டு: உரையாடல். இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான சுமூக உறவு சிக்கல்களை சந்தித்த வேளையில், திருத்தந்தை பிரான்ஸிஸ் பதவி ஏற்றார். அது தொடங்கி, இஸ்லாமியர்களோடு நல்லிணக்கத்தைப் பேணுவதற்காகப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார்.

5. இரண்டாம் வத்திக்கான் சங்கமும் இஸ்லாமியர் பற்றிய பார்வையும்

கிறிஸ்தவமல்லாச் சமயத்தைச் சார்ந்தவர்களை நான்கு குழுக்களாக வத்திக்கான் திருச்சங்கத்தின், திருச்சபைப் பற்றிய கோட்பாட்டு விளக்கம் (Vatican Council II 1964) பிரிக்கிறது: யூதர்கள், இஸ்லாமியர்கள், யூத-இஸ்லாமிய சமயங்கள் கூறும் வெளிப்படுத்தப்பட்ட கடவுள் அல்லாத பிறிதொன்றில் நம்பிக்கைக் கொண்டர்வர்கள் மற்றும் நாத்திகர்கள். வத்திக்கான் சங்கம் நடந்து கொண்டிருந்த போது, 1963இல் விவாதத்திற்கு வந்த திருஅவை பற்றிய கோட்பாட்டு விளக்கத்தின் பிரதியின் தலைப்பானது இவ்வாறு இருந்தது: கிறிஸ்தவமல்லாச் சமயத்தைச் சேர்ந்தவர்களை திருச்சபையை நோக்கி வழிநடத்துதல்.” ஆனால் அத்தலைப்பும் கருத்தும் பின்னர் வந்த பிரதிகளிலிருந்து நீக்கப்பட்டன. இவ்வேட்டின் 14 மற்றும் 15ஆம் எண்கள், கிறிஸ்துவின் வெளிப்பாட்டின் தன்மையைப் பற்றியும், அது அனைவருக்குமான மீட்பைக் கொண்டு வந்தது என்றும் கூறுகிறது. இதன் தொடர்ச்சியாக வரும் 16ஆவது எண்ணானது, கிறிஸ்தவமல்லாச் சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான உறவை முன்வைத்துப் பேசியது. அதாவது, பிற நம்பிக்கைகளை பின்பற்றுவோர், கத்தோலிக்க நம்பிக்கையில் உள்ளவர்களோடு கொண்டுள்ள உறவின் தன்மையை விவரிக்கும் விதமாக அது அமைந்தது. அதாவது, அவர்கள் அனைவரும் தண்டனைக்குரியவர்கள் என்னும் பார்வை முற்றிலுமாக நீக்கப்பட்டது. அவர்களும், கிறிஸ்துவால் மீட்கப்பட்டவர்கள், கிறிஸ்துவின் ஒளியைப் பெற்றிருக்கிறார்கள் என்று பேசியது. ஆகவே அவர்கள் அன்னியர்களோ, எதிரிகளோ அல்ல, மாறாக கிறிஸ்துவின் ஒளியை வேறு முறைகளில் கொண்டிருப்பவர்கள் என்னும் நிலைப்பாட்டை எடுத்தது. அவ்வகையில் கத்தோலிக்கர்களோடு அவர்கள் உறவில் இருக்கிறார்கள். அவர்களோடு உரையாட வேண்டியதும் நட்பு பாராட்ட வேண்டியதும் அவசியம் என்னும் உண்மையை முன்வைத்தது (Aloys Grillmeier 1967, p. 182).

அவ்வகையில், வத்திக்கான் திருச்சங்கமானது, திருஅவை பற்றிய கோட்பாட்டு விளக்கத்தில், யூதர்களுடன் ஏர்படுத்த வேண்டிய நல்லுறவுக்கு அடுத்ததாக, இஸ்லாமிய சகோதரர்களோடு ஏற்படுத்த வேண்டிய உறவைப் பற்றிப் பேசியது. ஆபிரகாமின் நம்பிக்கையைத் தாம் கொண்டிருப்பதாக அறிக்கையிட்டு, இரக்கமுடையவரும் இறுதிநாளில் மனிதருக்குத் தீர்ப்புக் கூறுபவருமான ஒரே கடவுளை நம்மோடு சேர்ந்து தொழும் இஸ்லாமியர் முதலிடம் பெறுகிறார்கள்என்று, யூதர்களுக்கு அடுத்ததாக இஸ்லாமியர்கள் நம்பிக்கையில் நம்மோடு நெருங்கியத் தொடர்புடையவர்கள் என்று திருச்சங்கம் கூறுகிறது (Vatican Council II 1964, n. 16).  மேலும், கிறிஸ்தவமல்லாச் சமயங்களோடு திருச்சபைக்குள்ள உறவு பற்றிய விதித்தொகுப்பில், வத்திக்கான் திருச்சங்கமானது, திருச்சபைக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே வரலாற்றில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளையும் பகைமையையும் நினைவு கூர்வதோடு, அவற்றை எல்லாம் மறந்து முன்னேறவும் அழைப்பு விடுத்தது. ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள வேண்டும் என்றும், மனிதருடைய நன்மைக்காக, சமூக நீதி, ஒழுக்க நலன்கள், சுதந்திரம், அமைதி ஆகியவற்றை பேணிக்காக்க இருகுழுக்களும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. விண்ணையும் மண்ணையும் படைத்தவரும் மக்களிடம் பேசியவருமான ஒரே கடவுளை அவர்கள் நம்புகிறார்கள். அத்தோடு, அவர்கள் இறைத்திருவுளத்திற்கு கீழ்ப்படிந்து வாழ்கிறார்கள். அது மட்டுமின்றி, இயேசுவை அவர்கள், இறைமகனாக ஏற்கவில்லையெனினும் ஓர் இறைவாக்கினராக ஏற்கிறார்கள் என அவர்களுக்கம் கிறிஸ்தவத்திற்கும் இடையே நிலவும் பொதுப்பண்புகளை திருச்சங்கம் எடுத்துரைக்கிறது (Vatican Council II 1965a, n. 3).

6. உரையாடலுக்கான திறப்புகள்

தன்னை அறியும் திருஅவை: திருஅவை பற்றிய கோட்பாட்டு விளக்கத்தில், திருஅவை தன்னையே ஒளியாக முன்னிலைப் படுத்தாமல், கிறிஸ்துவின் ஒளியைப் பிரதிபலிக்கும் அருளடையாளமாக தன்னை உருவகப்படுத்துகிறது (Vatican Council II 1964, n. 1). இவ்வுலகில் பயணிக்கும் திருஅவையானது, புனிதர்களை தன்னகத்தேக் கொண்டிருந்தாலும் அது பாவிகளையும் கொண்டிருக்கிறது என்றும் சுயம் ஏற்றுக் கொள்கிறது. அவ்வகையில் அதுப் புதுப்பிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது (Vatican Council II 1964, n. 8). இப்புதுப்பித்தலானது, தன்னை இன்னும் அதிகமாக அறிவதன் வாயிலாகவும் நடக்கிறது. அவ்வாறு அறிகின்ற திருஅவை தன்னை முன்னிலைப் படுத்தாமல், கிறிஸ்துவை முன்னிலைப் படுத்துவதில் கவனமாக இருக்கிறது. ஆகையால்தான், திருத்தந்தை ஆறாம் பவுல் வெளியிட்ட Ecclesiam suam  என்னும் திருத்தூது மடலானது, திருஅவையானது மனித குடும்பத்தின் தாய் என்றும், அது மீட்புக்கு ஊழியம் புரிகிறது என்றும் சுயபுரிதலை எடுத்துரைக்கிறது. திருத்தந்தை இதில் தொடர்ந்து, இன்றைய உலகில் எப்படி, கிறிஸ்துவை கொடுப்பதற்கான கருவியாக எப்படி தகவமைத்துக் கொள்ள முடியும் என்பதைப் பற்றி ஆய்கிறார். அதற்காக அவர் முன்வைக்கும் முக்கிய பாதை, உரையாடல் (Paul VI 1964).

மீட்புக்கு ஊழியம் புரியும் திருஅவை: Ecclesiam suam, எண் 58இல் திருத்தந்தை, யோவான் நற்செய்தி அலகு, 17 இறைவார்த்தைகள் 15-16 ஆகியவற்றின் உள்ளர்த்தங்களை புரிந்து கொண்டு, உரையாடலுக்கான வழித்தடங்களைத் திறக்கிறார். கிறிஸ்து தனது சீடர்களுக்காக செபிக்கும் போது, அவர்களை உலகிலிருந்து எடுத்துவிட வேண்டும் என்று செபிக்கவில்லை. அவர்கள் இவ்வுலகத்தில் வாழ்ந்து, விண்ணுலகு சார்ந்தவற்றில் ஈடுபட வேண்டும் என்று வேண்டுகிறார். அதாவது, உலகில் வாழும் தனது சீடர்கள், கிறிஸ்துவை உலகிற்கு கொடுப்பவர்களாக மாற வேண்டும் என்பது தெளிவு. இவ் அடிப்படையில், கிறிஸ்துவை உலகிற்கு அளிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கம் திருஅவை மனநிலை மாற்றத்தை ஏற்றாக வேண்டும். உலகில் இயங்கும் திருஅவை, உலகப் போக்கில் ஒழுகாமல், கிறிஸ்தவ விழுமியங்களை உலகிற்கு ஏற்ற முறையில் கொடுப்பதற்காக முயல வேண்டும் என்கிறார். அவ்விழுமியங்களை இன்றைய உலகில் எப்படிக் கொடுக்கலாம் என்பதைப் பற்றிய அக்கறையோடு அது சுய ஆய்வில் ஈடுபட்டு தன்னையே நிகழ்நிலையாக்கம் செய்து கொள்ள வேண்டும்.

கொடைளைப் பகிர்தல்:  நற்செய்தி என்பது கொடை என்னும் கருத்தாக்கம், திருத்தந்தை ஆறாம் பவுலும், திருத்தந்தை இரண்டாம் ஜாண் பவுலும் வெளிப்படுத்துகிறார்கள். தாம் பெற்றிருக்கும் நம்பிக்கையை காப்பது மட்டுமல்ல அதை, பிறரோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று திருத்தந்தையர் கூறுகிறார்கள். திருச்சபை கிறிஸ்து எனும் அளப்பரிய கொடையைப் பெற்றிருக்கிறது. அதைப் பகிர்ந்து கொள்வதற்கு அவசியம். அன்பு சுயத்துக்குள் அடைபட அனுமதிப்பதில்லை. தலைச்சிறந்தப் பண்பாக புனித பவுலால் சித்தரிக்கப்படும் அன்பு (1கொரி 13, 13) பகிர்வுக்காக அழைக்கிறது. ஒருவருக்குள் இருக்கும் அன்பு, அவர் பெற்றிருக்கம் நற்செய்தி என்னும் கொடையைப் பகிர்வதன் வழியாக, செயலாக்கம் பெறுகிறது. இந்த அன்பைப் பகிர்வதற்கான ஏற்ற கருவியாக உரையாடல் விளங்குகிறது. உலகோடு பேசிட, உலகிற்கெனக் கொடுக்க, உலகோடு ஊடாடல் புரிந்திட மாபெரு புதையலாக நற்செய்தி திகழ்கிறது (Paul VI 1964, nn. 64,65).

திருஅவை தன்னைப் புரிந்து கொள்ள வேண்டும், அது மீட்புக்கு ஊழியம் புரிகிறது என்னும் தனது அழைப்பை தேர்ந்து தெளிய வேண்டும், மேலும் கிறிஸ்தவ அன்பு பகிர்வதற்காகத்தானே ஒழிய தன்னலத்திற்கானது அல்ல என்பதையும் நாம் பார்த்தோம். ஆக முதலாவதாக, தன்னையே கூடுதலாக அறிய வேண்டும் என்றால், அது உலகோடு ஊடாடல் புரிய வேண்டும். அதாவது, தான் பேசுவது மட்டுமல்ல, உலகம் பேசுவதையும் கேட்க வேண்டும். அதனால் தான் இன்றைய உலகில் திருஅவை (Vatican Council II 1965b) என்னும் வத்திக்கான் திருச்சங்கத்தின் ஏடு, நவீன உலகிற்கு ஏற்றவாறு நற்செய்தியை எடுத்துரைப்பதற்கான திருஅவையில் திறந்த மனநிலையைத் தான் வெளிப்படுத்துகிறது. அதாவது, உளவியல், சமூகவியல் போன்ற நவீன புது அறிவியல் முறைகளை ஏற்றுத் திருஅவை, அவற்றின் புரிதல்களுக்கு ஏற்ப நற்செய்தியைப் பகிர தன்னைத் தயார்படுத்த முயற்சியாக இவ்வேடு திகழ்கிறது. இரண்டாவாதக, திருஅவை, நற்செய்திக்கு ஊழியம் புரிகிறது. ஆகையால் முதன்மைப்படுத்தப்பட வேண்டியது மீட்பே ஒழிய திருஅவை அல்ல. திருஅவை நற்செய்திக்கு ஊழியம் புரிவதன் வழியாகத்தான் தன்னுடைய இருத்தலை நியாயப்படுத்த முடியும். அப்பணியிலிருந்து அகன்று சுயத்திற்குள் முடங்கினால் அது திருஅவை என்னும் நிலையை இழக்கும். மூன்றாவதாக, திருஅவை கிறிஸ்துவின் அன்பை செயலாக்கம் செய்ய வேண்டும் என்றால், தான் பெற்றிருக்கும் ஒப்பற்ற செல்வமான நற்செய்தி எனும் கொடையைப் பகிர்ந்தாக வேண்டும். இம்மூன்றுக்கும், உலகோடு உரையாடுதல் ஒன்றுதான் வழி. அதின்றி வேறில்லை.

உரையாடல் என்பது கருத்துக்களை பகிரும் முறையாகப் பார்க்கக்கூடாது என்பதையும் திருஅவை கூறுகிறது. அது மனித மாண்போடும், இருத்தலோடும் பிணைக்கப்பட்டது.

7.  உரையாடலும் மனித மாண்பும்

உரையாடல் இருத்தலின் வெளிப்பாடு:ஊடாடுவதால் நான் வாழ்கிறேன்என்று சமூக உளவியலாளர் மார்க்கோவா அவர்கள் கூறுகிறார். அதாவது, தனிமனிதர், சக மனிதர்கள், பொருட்கள், நிகழ்வுகள், கருத்தியல்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றோடு அன்றாடம் உறவு கொள்ள வேண்டும். அவற்றைப் பற்றி தனக்குள் சிந்திப்பதோடு, (தன்னோடு உரையாடுதல்) அவற்றைப் பற்றிய கருத்துக்களையும் பகிர வேண்டும். குடும்பம், சமூகம், சமயக்குழு, இனக்குழு, தொழிற்குழு, வேலைக்குழு என தொடர்பு கொள்ள வேண்டும். தொடர்புடன் இருப்பதற்கு உரையாடல்தான் ஒரே வழி. அதனால்தான், உரையாடலை மார்க்கோவா, தனிமனிதரின் இருத்தலோடு (existence) தொடர்புப்படுத்திப் பேசினார். மனிதரின் உடல், உயிர், சமூக வாழ்வைப் போன்று உரையாடலும் இருத்தலோடு தொடர்புடையது (Ivana Markova 2003). இத்தகைய சிந்தனையை மார்க்கோவா, ரஷ்ய மெய்யியலார் பாக்டின் அவர்களின் சிந்தனையிலிருந்து எடுக்கிறார். பாக்டின், உரையாடல் என்பதை செயலுக்கான திட்டமிடலாகப் பார்க்கவில்லை. அவர், உரையாடல் என்பதையே செயலாகப் பார்க்கிறார். ஒருவர் தனக்குள் இருக்கும் சிந்தனை தொகுப்புகளை வெளிப்படுத்தும் தளமாக மட்டும் உரையாடல் அமைவதில்லை. ஒருவர் உரையாடலில் ஈடுபடும் போது சக மனிதர்கள், பொருட்கள் நிகழ்வுகள் அடங்கிய புது வெளியில் தன்னையே அடையாளம் காண்கிறார். எடுத்துக்காட்டாக, குழந்தைப் பிறந்த பின், தாய் அல்லது தந்தை, குழந்தையுடனான உரையாடல் வழியாக தன்னை தாயாக அல்லது தந்தையாக அடையாளம் காண்கிறார். அதன் வழியாக, வேறு அடையாளங்களைத் தொகுப்புகளையும் அவர் சமூகத்தில் அடைகிறார். ஆக, ஒருவர் தன்னை சுற்றி உள்ள மனிதர்கள், பொருள்கள், நிகழ்வுகள் ஆகியவற்றோடு அன்றாடம் உரையாடுவதால்தான் உயிர் வாழ்கிறார் என்கிறார் (Mikhail Bakhtin 1984, p. 252).

உரையாடலில் இருத்தல் (existence) இருக்கிறது. இதை உணர்ந்த, இந்திய நாட்டின் அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்கள் கருத்துச் சுதந்திரம் என்னும் உரிமையை (Article 19(A)) எழுதிச் சேர்த்தார்கள். பொதுவெளியில் ஒருவர் பேசுவதற்கும் தன்னையே வெளிப்படுத்துவதற்குமான உரிமையை இது உறுதி செய்கிறது.

உரையாடல் மனித மாண்பின் பகுதி: உரையாடலை மனித மாண்பின் பகுதியாக, திருத்தந்தை இரண்டாம் ஜாண் பால் பார்த்தார். கிறிஸ்தவ ஐக்கியம் பற்றிப் பேசும், அவர்கள் ஒன்றாய் இருப்பார்களாக (John Paul II 1995) எனும் திருத்தூது மடலின் 28ஆவது எண் இதையே முன்நிறுத்துகிறது. உரையாடலுக்கான மனிதரின் திறன் அவர்களின் இயல்பிலும் மனித மாண்பிலும் வேரூன்றியது. மனிதர் மனிதருக்கெனத்தான் படைக்கப்பட்டிருக்கிறார்கள் (Human beings are end in themselves, Vatican Council II 1965b, n. 20). அவர்கள் இன்னொன்றொன்றிற்கான ஊடுபொருள் அல்ல. ஆகையால், அவர்கள் தங்களை முழுமையாக அறியவும் வெளிப்படுத்தவும் தங்களையே கொடையாக கையளிக்க வேண்டும். இவ்வகையில், தனிப்பட்ட மற்றும் சமூக வெளியில் தன்னையே அடையாளம் காணவும் அதை வாழ்வாக்கவும் உரையாடல் என்பது இன்றியமையாதது.

உரையாடல் கொடைகளைப் பகிரும் தளம்: உரையாடல் என்பது, சிந்தனைக்கு முக்கியத்தவம் கொடுப்பதாகப் பார்க்கப்படுவதுண்டு. ஆனால் அது கொடைகளைப் பகிரும் தளம். ஆகையால் தான் திருதந்தை ஆறாம் பவுல் மற்றும் திருத்தந்தை இரண்டாம் ஜாண் பால் ஆகிய இருவரும், உரையாடல் என்பது கருத்துக்களைப் பரிமாறும் தளமாகச் சுருக்கக் கூடாது. மாறாக, பல்வேறு விதத்தில் கொடைகளைப் பகிரும் தளமாக இருக்கிறது.” (John Paul II 1995, n. 28; Paul VI 1964, n. 64) என்றார்கள்.  

8.  திருத்தந்தை பிரான்சிஸ் தரும் பாடம்

திருத்தந்தை பிரான்சிஸ் பதவி ஏற்ற காலம் தொடங்கி இஸ்லாமியர்களுடன் நட்புறவைப் பேணவும், அவர்களோடு உரையாடல் நடத்தவும் சிரமமிக்கப் பணிகளை மேற்கொண்டார். திருத்தந்தையின் அனைவரும் உடன்பிறந்தோர் (Pope Francis 2020) என்னும் திருமடல், புனித பிரான்சிஸ் அசிசியார் மேற்கொண்ட எகிப்து பயணத்தைப் பற்றி விளக்கித் தொடங்குகிறது. சிலுவைப்போர் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட காலத்தில், இப்புனிதர், நீண்ட பயணம் மேற்கொண்டு, எகிப்தில் சுல்தான் மாலிக்-எல்-கமில் அவர்களை சந்தித்ததைப் பற்றிப் பேசுகிறார் (Pope Francis 2020, n. 3). கடினமான, இடர்நிறைந்த பயணத்தை அவர் வெறுப்பை அகற்றி, அன்பை விதைக்கும் நோக்குடன் மேற்கொண்டார். இது இன்றைய உலகிலும் தேவையாக இருக்கிறது என்பதை உணர்ந்த திருத்தந்தை, அத்தகையதொரு செயலை ஐக்கிய அரபு நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட போது செய்தார். அவர் The Grand Imam of Al-Azhar Ahmad Al-Tayyeb அவர்களுடன் இணைந்து மனித உடன்பிறந்த நிலை’ (Pope Francis and Ahmed Mohamed Ahmed al-Tayyeb 2019) என்னும் ஆவணத்தில் கையொப்பமிட்டார். ஆக, வெறுப்புகள் அல்ல, கடினமிக்க அன்பின் பாதைதான் கிறிஸ்து காட்டிய பாதை என்பதை திருத்தந்தை உறுதிப்படுத்தினார்.[1]

இஸ்லாம் வெறுப்பு எவ்விதத்தில் கிறிஸ்து வகுத்தப் பாதையும் அல்ல, திருஅவை நமக்குக் காட்டும் பாதையும் அல்ல. ஆகையால், உரையாடல் ஒன்றே கிறிஸ்தவ குழுக்களின் முன்னால் திறந்து கிடக்கும் பாதை. தற்கால அரசியல் ஆதாயங்களுக்காகவும், தற்காப்புக்காகவும் கிறிஸ்தவப் படிப்பினைகளுக்கு முற்றிலும் முரணான தீமை விளைவிக்கும் தீதான வழிகளைத் தவிர்த்தல் சிறந்தது.

துணைநின்ற நூல்களும் கட்டுரைகளும்

1.       Anand, G. 2024. Church Screening of The Kerala Story Roils State Politics during Election Time. In The Hindu (Thiruvananthapuram edition). April 10.

2.       Bakhtin, Mikhail. 1984. Problems of Dostoevsky’s Poetics. Minneapolis: University of Minnesota.

3.       Grillmeier, Aloys. 1967. Constitution on the Church. In Commentary on the Documents of Vatican Council II, Vol.1. Edited by Herbert Vorgrimler. New York, Herder and Herder.

4.       Jain, Srinivasan, Alavi, Mariam and Sharma, Supriya. 2024. Love Jihad and Other Fictions: Simple Facts to Counter Viral Falsehoods. New Delhi: Aleph Book Company.

5.       John Paul II. 1986. Address to Religious Leaders. Vatican City. October 27. Available online: https://www.vatican.va/content/john-paul-ii/it/speeches/1986/october/documents/hf_jp-ii_spe_19861027_prayer-peace-assisi.html (accessed on 27 December 2021).

6.    John Paul II. 1995. Ut Unum Sint. Vatican City. May 25. Available online: https://www.vatican.va/content/john-paul-ii/en/encyclicals/documents/hf_jp-ii_enc_25051995_ut-unum-sint.html (accessed on 13 December 2024).

7.       Kakar, Sudhir. 1996. The Colors of Violence: Cultural Identities, Religion and Conflict. Chicago: The University of Chicago Press.

8.       Kakar, Sudhir. 2003. Culture and Psyche: Selected essays. Chicago: The University of Chicago Press.

9.       Karat, Brinda. 2024. Hindutva and Violence against Women. New Delhi: Speaking Tiger Books LLP.

10.      Kesava Menon. 2023, To Cross or Not. In Frontline. 40:10.

11.      Krishnakumar, R. 2021. Pulpit Polemics, In Frontline. 38:20.

12.      Markova, Ivana. 2003. Dialogicality as an Ontology of Humanity. In 10.1075/pbns.116.04mar.

13.      Naha, Abdul Latheef. 2024. Id-gah on Church Premises Reasserts Communal Amity. In The Hindu (Thiruvananthapuram edition). April 11.

14.      Narayanan, M.K. 2024. Understanding the Face of Extremist Violence, In The Hindu November 23.

15.  Paul VI. 1964. Ecclesiam Suam. Cagliari. August 6. Available online: https://www.vatican.va/content/paul-vi/en/encyclicals/documents/hf_p-vi_enc_06081964_ecclesiam.html (accessed on 17 August 2021).

16.      Pope Francis, and Ahmed Mohamed Ahmed al-Tayyeb. 2019. Document on Human Fraternity for World Peace and Living Together. Abu Dhabi. February 4. Available online: https://www.vatican.va/content/francesco/en/events/event.dir.html/content/vaticanevents/en/2019/2/4/fratellanza-umana.html (accessed on 27 February 2022).   

17.  Pope Francis. 2020. Fratelli Tutti. Assisi. October 4. Available online: https://www.vatican.va/content/francesco/en/encyclicals/documents/papa-francesco_20201003_enciclica-fratelli-tutti.html (accessed on 26 December 2021).

18.      Prabhakar, Parakala. 2023. The Crooked Timber of New India: Essays on a Republic in Crisis. New Delhi: Speaking Tiger Books LLP, 2023.

19.      Roy, Ashis. 2024. Intimacy and Alienation: A Psychoanalytic Study of Hindu-Muslim Relationships. New Delhi: Yoda Press.

20.      The Hindu Bureau. 2024. Now Thamarassery Diocese Plans to Screen The Kerala Story for Students on Friday. In The Hindu (Thiruvananthapuram edition). April 10.

21.  Vatican Council II. 1964. Lumen Gentium Vatican City. November 21. Available online: https://www.vatican.va/archive/hist_councils/ii_vatican_council/documents/vat-ii_const_19641121_lumen-gentium_en.html (accessed on 13 December 2024).

22.  Vatican Council II. 1965a. Nostra Aetate. Vatican City. October 28. Available online: https://www.vatican.va/archive/hist_councils/ii_vatican_council/documents/vat-ii_decl_19651028_nostra-aetate_en.html (accessed on 26 February 2022).

23.  Vatican Council II. 1965b. Gaudium et Spes. Vatican City. December 7. Available online: https://www.vatican.va/archive/hist_councils/ii_vatican_council/documents/vat-ii_const_19651207_gaudium-et-spes_en.html (accessed on 26 February 2022).

24.      Vellaram, Sandeep. 2024. Idukki Diocese Screens The Kerala Story for Catechism Students. In The Hindu (Thiruvananthapuram edition), April 8.



[1] திருத்தந்தை பிரான்சிஸ் இஸ்லாமியர்களுடன் நடத்தும் உரையாடல் பற்றி விரிவாக அறிய காண்க: Catalano, Roberto. 2022. Pope Francis’ Culture of Dialogue as Pathway to Interfaith Encounter: A Special Focus on Islam. Religions 13: 279. https://doi.org/10.3390/rel13040279.

கருத்துரையிடுக

0 கருத்துகள்